யோசிதவுக்கு ஆதரவு தெரிவித்து கைப்பட்டி அணிந்த, கடற்படை ரக்பி வீரர்கள் தொடர்பில் விசாரணை

🕔 February 15, 2016

YO07 - 012யோசித ராஜபக்ஷவுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலான கைப்பட்டிகளைஅணிந்து கொண்டு விளையாடிய – கடற்படை விளையாட்டுக் கழகத்தின் ரக்பி அணி வீரர்கள் நால்வர் தொடர்பில், கடற்படையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

மேற்படி வீரர்கள் தமது கைகளில் ‘YO07’ என்று எழுதப்பட்டிருந்த கைப்பட்டிகளை அணிந்திருந்தனர். இது அவர்களின் முன்னாள் அணித் தலைவர் யோசித ராஜபக்ஷவுக்கு ஆதரவினைத் தெரிவிக்கும் வகையிலான ஒரு செயற்பாடாக இருந்தது.

தியகம, மஹிந்த ராஜபக்ஷ விளையாட்டு மைதானத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற ரக்பி போட்டியில் விளையாடிய வீரர்களே இந்தப் பட்டிகளை அணிந்திருந்தனர்.

இது தொடர்பில் கடற்படை பேச்சாளர் அக்ரம் அலவி தெரிவிக்கையில்; மேற்படி வீரர்கள் நால்வரும், அவர்களுக்கெதிரான விசாரணைகள் நிறைவு பெறும் வரையில், தற்காலிகமாக பணி நிறுத்தப்பட்டுள்ளதாகக் கூறினார்.

கடற்படையினருக்கும் ராணுவத்தினருக்கும் இடையில் நடைபெற்ற மேற்படி ரக்பி போட்டியில், கடற்படையணி 32 – 30 எனும் கணக்கில் வெற்றி பெற்றனர்.

பண மோசடி தொடர்பான குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட யோசித ராஜபக்ஷ, தற்போது வெலிக்கடை சிறைச்சாலையில் விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்