
நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு சம்பளம் வழங்கப்படுவதில்லை என்றும், மாறாக கொடுப்பனவுகளைப் பெற்றுக் கொள்வதற்கான உரிமை உள்ளது எனவும் நாடாளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெளிவுபடுத்தியுள்ளார்.
தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்டு பேசிய அவர், தற்போது ஒரு நாடாளுமன்ற உறுப்பினருக்கு கிட்டத்தட்ட ரூ. 54,000 ரூபாய் கொடுப்பனவு வழங்கப்படுவதாக கூறினார்.
இது தவிர, நாடாளுமன்ற அமர்வுகள் நடைபெறும் நாட்களில் வருகைப் படியாக 2,500 ரூபாயும், நாடாளுமன்ற அமர்வுகள் நடைபெறாத நாட்களில் நடைபெறும் குழுக் கூட்டங்களில் கலந்துகொள்வதற்காக 2,500 ரூபாயும் வழங்கப்படும் எனவும் அவர் குறிப்பட்டுள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எரிபொருள் கொடுப்பனவு – தூரத்தை அடிப்படையாகக் கொண்டு வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்திலிருந்து 40 கிலோமீற்றர்களுக்குள் வீடு இல்லாத நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாதிவெலயில் உள்ள – நாடாளுமன்ற வீட்டுத் தொகுதியில் தங்குவதற்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.
ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சியினரின் கோரிக்கைகளின் அடிப்படையில் ஒதுக்கப்பட்ட வீடுகள் மொத்தம் 108 எனவும் அவர் மேலும் கூறினார்.
இந்த வீடுகளில் வசிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாத வாடகையாக 02 ஆயிரம் ரூபாய் மட்டும் செலுத்துவதாகவும், வீடுகளுக்கான மின்சாரம் மற்றும் தண்ணீர் கட்டணங்களை செலுத்துகின்றனர் எனவும் அவர் குறிப்பிட்டார்.



