முஸ்லிம்களைப் புறக்கணித்த அனுரவும்; அவசரக் கடிதம் எழுதும் கோமாளிகளும்: போலிப் பொதுமை நமக்கு வேண்டாம்

🕔 November 19, 2024

– மரைக்கார் –

னாதிபதி அனுர குமார திசாநாயக்கவின் அமைச்சரவையில் முஸ்லிம்கள் எவரும் நியமிக்கப்படவில்லை என்பது, முஸ்லிம் சமூகத்தை விடவும், தேசிய மக்கள் சக்திக்கும் அனுரவுக்கும் ‘குடை’ பிடித்துக் கொண்டிருக்கும் முஸ்லிம் தரப்பினருக்கே பாரிய ‘செருப்படி’யாக அமைந்திருக்கிறது.

இந்த அவமானத்தை சமாளிக்கும் வகையிலான கருத்துக்களையும் கதைகளையும் கூறிவரும் – தேசிய மக்கள் சக்திக்கு ‘குடை’ பிடிக்கும் முஸ்லிம்களைப் பார்க்கையில் பரிதாபமாகவே உள்ளது.

கொடுங்கோலன் கோட்டாவின் ஆட்சியும் இவ்வாறுதான் – முஸ்லிம்கள் இல்லாத அமைச்சரவையுடன்தான் ஆரம்மானது. அப்போது கொதித்தெழுந்த முஸ்லிம்களில் சிலர், இப்போது அனுரவின் அமைச்சரவையில் முஸ்லிம்கள் இடம்பெறமைக்கு ‘சப்பை’க் கட்டுத் தனமாக நியாயம் கூறிக் கொண்டிருக்கின்றனர்.

அனுரவின் கோட்டைக்குள் -அமைச்சர் பதவியை வகிக்கத் தகுதியான சிங்களவர்கள் இருக்கும் போது, தமிழர்கள் இருக்கும் போது, முஸ்லிம்கள் இல்லாமல் போனமை, அனுர தரப்பின் தவறாகும். அப்படியென்றால், தேசிய மக்கள் சக்தியின் பொதுத் தேர்தல் வேட்பாளர் பட்டியலில் – வேண்டுமென்றே, தகுதியற்ற முஸ்லிம்களை அனுர தரப்பு களமிறக்கி நாடாளுமன்ற உறுப்பினர்களாக்கியுள்ளதா என்கிற சந்தேகம் எழுகிறது.

அப்படியென்றால் முஸ்லிம் தரப்பிலிருந்து தலைகளை ஆட்டும் ‘ஆடு’களையா அனுர தரப்பு – நாடாளுமன்ற உறுப்பினர்களாக்கி வைத்திருக்கிறது?

தனது அமைச்சரவையில் – முஸ்லிம்கள் எவரும் நியமிக்கப்படாமல் விட்டால், அதற்கான எதிர்வினைகள் எப்படியிருக்கும் என்பதை ஜனாதிபதி அனுர தெரிந்தே இருப்பார். கோட்டாவின் அரசாங்கத்தில் – முதலாவது அமைச்சரவை அமைச்சர்கள் நியமனத்தின் போது, முஸ்லிம்கள் எவரும் நியமிக்கப்படாமைக்கு கிளம்பிய எதிர்வினைகள் என்ன என்பதும் ஜனாதிபதி அனுரவுக்குத் தெரியும். அப்படியென்றால், ‘எந்த எதிர்ப்பு வந்தாலும் பார்த்து விடுவோம்’ என்கிற மனநிலையோடுதான், தனது அமைச்சரவையில் முஸ்லிம்களை அனுர புறக்கணித்திருக்கிறார் என்றுதான் நமக்கு எண்ணத் தோன்றுகிறது.

விடயம் இப்படியிருக்கையில், முஸ்லிம் சமூகத்திலுள்ள சில கோமாளிகள், ‘முஸ்லிம்களை அமைச்சர்களாக நியமியுங்கள்’ எனக் குறிப்பிட்டு – அனுரவுக்கு அவசர அவசரமாக கடிதமெழுதிக் கொண்டிருப்பது எரிச்சலை ஏற்படுத்தி வருகிறது. இது ஏதோ, அனுர தவறுதலாக விட்ட பிழை போலவும், அவருக்கு கடிதம் எழுதித்தான் இதனைப் புரிய வைக்க வேண்டிய தேவை உள்ளது போலவும், இந்தக் கோமாளிகள் நினைத்துக் கொண்டிருக்கின்றனர்.

சிலவேளை, இதற்குப் பின்னர் தனது அமைச்சரவையில் முஸ்லிம் ஒருவரை அல்லது சிலரை – ஜனாதிபதி அனுர சேர்த்துக் கொள்ளவும் கூடும். அப்படிச் செய்வது – ‘சாணி’யில் நனைத்தெடுத்த செருப்பால் ஒருவரின் முகத்தில் அடித்து விட்டு, அடிபட்டவரின் கன்னத்தை அடித்தவரே துடைத்து விடுவதற்குச் சமனானதாகவே அமையும்.

நாம் ஒரு தரப்பை ஆதரிக்கிறோம் அல்லது விரும்புகிறோம் என்பதற்காக அவர்களின் தவறுகளையெல்லாம் நியாயப்படுத்திக் கொண்டிருக்க முடியாது. அப்படி செய்வது அடிமைத்தன மனநிலை.

முஸ்லிம் சமூகத்தை அனுர அரசாங்கம் ஆரம்பத்திலேயே அவமானப்படுத்தியிருக்கிறது. அதனை யாரும் நியாயப்படுத்திக் கொண்டிருக்கக் கூடாது. அப்படிச் செய்வது அடிமை நிலையாகும்.

யார் சொன்னாலும் இல்லா விட்டாலும், இலங்கைப் பிரஜைகள் அனைவரும் இலங்கையர்கள்தான். நாம் இலங்கையர்கள் என்பதற்காக, நமது சுயத்தை, அடையாளத்தை, தனித்துவங்களையெல்லாம் குழி தோண்டிப் புதைத்து விட்டு, ‘இலங்கையர்’ என்கிற ‘பொதுமை’க்குள் கரைந்து காணாமல் போய் விட முடியாது. ஒவ்வொரு சமூகமும் தத்தமது தனித்துவ அடையாளங்களைத் தக்க வைத்துக் கொண்டுதான், இலங்கையர்களாகக் கைகோர்க்க வேண்டும் என்பதை அழுத்திக் கூற விரும்புகிறோம்.

இலங்கை பௌத்த நாடு, இலங்கை சிங்களவர்களுக்குரியது என்கிற – இறுகிப் போன மனநிலையினைக் கொண்டவர்களை கணிசமாகக் கொண்ட நாடு இது. பௌத்த மதத்துக்கே முன்னுரிமை வழங்கப்பட வேண்டும், பௌத்த மதத்தை அரசு கட்டிக் காக்க வேண்டும் என எழுதப்பட்ட அரசியலமைப்பைக் கொண்ட நாடு இது. இவ்வாறான நிலையில், ‘இலங்கையர்கள்’ எனும் பொதுமைக்குள் – சிறுபான்மையினர் குதித்து தற்கொலை செய்து கொள்ள முடியாது – கூடாது.

வெவ்வேறு நிறங்களைக் கொண்ட, மணங்களைக் கொண்ட மலர்கள் சேர்ந்து ஒரு மாலையாகுவதைப் போல – ஒவ்வொரு சமூகமும் தத்தமது அடையாளங்களோடுதான் இலங்கையராகக் கைகோர்க்க வேண்டும். அதுதான் இயல்பான இணைவாகவும் அமையும்.

அதை விடுத்து, போலிப் பொதுமைக்குள் குதித்து – இருப்பதையும் இழந்து விடுவது புத்திசாலித்தனமாக அமையாது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்