தலைப்புச் செய்திகள்

முன்னாள் எம்பி ஹரீஸிடம் 25 கோடி ரூபாய் நஷ்டஈடு கோரி, சட்டத்தரணி சிபான் கடிதம்: கல்முனையில் நடந்த பொதுக் கூட்ட உரையின் விளைவு

– முன்ஸிப் அஹமட் –

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹரீஸிடம் 25 கோடி ரூபாய் நஷ்டஈடு கோரி, சட்டத்தரணி சிபான் மஃறூப் என்பவர், அவரின் சட்டத்தரணி ஊடாக கோரிக்கைக் கடிதமொன்றை அனுப்பியுள்ளார்.

சிபான் மஃறூப் பற்றி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் – அவதூறாகப் பேசியதாக அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதோடு, அதற்கான மான நஷ்ட ஈடாக இந்தத் தொகை கோரப்பட்டுள்ளது.

கடந்த ஒக்டோபர் மாதம் கல்முனையில் நடைபெற்ற பொதுக் கூட்டமொன்றில் பேசிய ஹரீஸ், மேற்படி சட்டத்தரணி சிபான் மஹ்றூபை ‘சகுனி’ எனக் குறிப்பிட்டு பேசியதாக, அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திகாமடுல்ல மாவட்டத்துக்கான வேட்புமனுக்களை செய்து முடிக்கும் வேலைகள் நடந்து கொண்டிருந்த போது, அங்கு அந்த ‘சகுனி’ இருந்தான் என்று – சட்டத்தரணி சிபான் பற்றி ஹரீஸ் பேசியதாக மேற்படி கடித்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மகாபாரதத்தில் ‘சகுனி’ எனும் கதாபாத்திரம் – ஒரு சதிகாரன், கோழை, ஏமாற்றுபவன், சூழ்ச்சிக்காரன் எனச் சித்தரிக்கப்படுவதால், சிபான் மஹ்றூப்பை ‘சகுனி’ என ஹரீஸ் கூறியமையும் – அதே அர்த்தத்தைக் கொண்டிருக்கிறது என்றும் குறித்த கடிதத்தில் விவரிக்கப்பட்டுள்ளது.

எனவே, இவ்வாறு அவரைக் குறிப்பிட்டமையின் மூலம் – சட்டத்தரணி சிபானுக்கு அவதூறு கூறியுள்ளதாகவும், இதனால் அவரின் நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டுள்ளதாகவும் அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதோடு, அதற்கு இழப்பீடாக 14 நாட்களுக்குள் 25 கோடி ரூபாயை நஷ்ட ஈடாக வழங்க வேண்டும் எனவும் சிபானுடைய சட்டத்தரணி கோரிக்கை விடுத்துள்ளார்.

தவறும் பட்சத்தில் ஹரீஸுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சட்டத்தரணி சிபான் மருதமுனையைச் சேர்ந்தவராவார். முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரஊப் ஹக்கீமுக்கு நெருக்கமானவரான இவர், கடந்த ஆட்சியில் நாமல் ராஜபக்ஷவின் செயலாளராக கடமையாற்றியிருந்தார்.

தொடர்பான ஹரீஸின் உரை: முதுகில் குத்திய கட்டப்பா | மு.கா தலைவரின் சூழ்ச்சி | ஹரீஸ் வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்கள்| Puthithu