தலைப்புச் செய்திகள்

காட்டு யானைகளை ரயில் மோதி விபத்து; இரண்டு மரணம், பலவற்றுக்கு கடும் காயம்

ஹிங்குராங்கொட மற்றும் கல் ஓயா புகையிரத நிலையங்களுக்கு இடையில் இன்று (18) அதிகாலை காட்டு யானைகளுடன் – எரிபொருள் ரயில் மோதியதில் இரண்டு யானைகள் உயிரிழந்தன. இதன் விளைவாக ரயில் தடம் புரண்டது.

இந்த விபத்தில் இரண்டு யானைகள் பலியாகியதோடு, மேலும் பல யானைகள் படுகாயமடைந்தன.

இதன்போது நான்கு எரிபொருள் தாங்கிகள் கவிழ்ந்ததாக தெரிவிக்கப்படுகிறது. மேலும் ரயில் இயந்திரமும் மற்றுமொரு பெட்டியும் தடம் புரண்டுள்ளதாகவும் ரயில்வே திணைக்களம் கூறியுள்ளது. ரயில் தடம் புரண்டதால் ரயில் பாதைக்கும் கணிசமான சேதம் ஏற்பட்டது.

கொலன்னாவ பெற்றோலிய சேமிப்பு முனையத்தில் இருந்து மட்டக்களப்புக்கு எரிபொருளை ஏற்றிச் சென்ற புகையிரதம் இன்று அதிகாலை 3.30 மணியளவில் இவ்வாறு யானைகளை மோதியுள்ளது.

இதன் காரணமாக மட்டக்களப்பு-கொழும்பு ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளதுடன், கொழும்பு கோட்டைக்கும் மட்டக்களப்புக்கும் இடையில் திட்டமிடப்பட்ட ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.