
கிழக்கு மாகாண வருமான வரி திணைக்கள பிரதி ஆணையாளர் ஒருவர், 02 லட்சம் ரூபாய் லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
பிரதேசவாசி ஒருவரின் முறைப்பாட்டுக்கு அமைய மட்டக்களப்பு அலுவலகத்தில் வைத்து, இவர் கைது செய்யப்பட்டதாக – லஞ்ச ஊழல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
முறைப்பாட்டாளர் மட்டக்களப்பில் 65 பேர்ச் காணியை 10 மில்லியன் ரூபாய்க்கு கொள்வனவு செய்திருந்தார். இதற்காக அவர் ஏற்கனவே 06 லட்சம் ரூபாய் முத்திரை வரி செலுத்தியிருந்தார்.
இருந்த போதிலும், மாகாண வருவாய் திணைக்களத்தினால் காணியின் பெறுமதி மீள் மதிப்பீடு செய்யப்பட்டு அதன் பெறுமதி 26.5 மில்லியன் ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டது. இதனையடுத்து முறைப்பாட்டாளர் மேலும் ரூ. 850,000 ரூபாய் வரி மற்றும் அபராதம் செலுத்த வேண்டுமென கூறப்பட்டுள்ளது.
இந்த நிலையில் பிரதி ஆணையாளர் – அந்தக் கட்டணத்தை 05 லட்சம் ரூபாயாக குறைக்க முன்வந்ததாக கூறப்படுகிறது. இதற்காக அவர் 200,000 ரூபாய் லஞ்சம் கோரியுள்ளார்.
இதனையடுத்து, முறைப்பாட்டாளர் லஞ்ச ஊழல் ஆணைக்குழுவுக்கு இந்த விடயத்தைத் தெரிவித்திருந்தார். இதன்படி பிரதி ஆணையாளர் குறித்த பணத்தைப் பெற்றுக் கொள்ளும் போது கைதானார்.



