தலைப்புச் செய்திகள்

ஈஸ்டர் தாக்குதல்தாரிகளுக்கும் ராணுவப் புலனாய்வாளர்களுக்கும் இடையில் தொடர்பு இருந்தது: சிஐடி முன்னாள் பணிப்பாளர் ஷானி உறுதிப்படுத்தினார்

ஈஸ்டர் தாக்குதல் விசாரணைகளின் முக்கிய தருணங்களின் போது, சிஐடியினரை (குற்றப் புலனாய்வு திணைக்களத்தை) ராணுவ புலனாய்வாளர்கள் தவறாக வழிநடத்தினார்கள் என, சிஐடியின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபயசேகர தெரிவித்துள்ளார்.

பத்திரிகையாளர் சுனந்த தேசப்பிரியவின் நூல் வெளியீட்டின் நிகழ்வில் நேற்று (25) கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர் இதனைக் கூறினார்.

ஈஸ்டர் தாக்குதல்களை மேற்கொண்டவர்களுக்கும் புலனாய்வு அமைப்புகளுக்கும் இடையில், நிதி தொடர்புகள் காணப்பட்டிருக்கலாம் எனவும் கூறினார்.

”2019 ஏப்ரல் 21ம் திகதி 250 பேரை பலிகொண்ட தாக்குதல் தனித்த ஒரு சம்பவம் அல்ல,  நன்கு திட்டமிடப்பட்டு முன்னெடுக்கப்பட்ட ஒன்று” என்றும் அவர் இதன்போது குறிப்பிட்டார்.

மேலும், விசாரணைகளின் போது ராணுவ புலானய்வு பிரிவினர் – இரண்டு தடவை விசாரணையாளர்களை தவறாக வழிநடத்த முயன்றனர் என அவர் குற்றஞ்சாட்டினார்.

“தெகிவளையில் உயிரிழந்த தற்கொலை குண்டுதாரி தொடர்பாக ராணுவ புலனாய்வு பிரிவினர் தவறாக வழிநடத்தினார்கள்” என தெரிவித்துள்ள ஷானி அபயசேகர, “அந்த தற்கொலை குண்டுதாரிக்கு ராணுவ புலனாய்வாளர்களுடன் தொடர்பிருக்கலாம். இது மறைக்கப்பட்டது” எனவும்  குறிப்பிட்டுள்ளார்.

”ஈஸ்டர் தாக்குதலுக்கு முன்னர் இடம்பெற்ற வவுணதீவு படுகொலைகளை (2018) விடுதலைப்புலிகளே மேற்கொண்டனர் என – ராணுவபுலனாய்வு பிரிவினர் குற்றம்சாட்டினார்கள். தங்களின் கதையை வலுப்படுத்துவதற்காக ராணுவசீருடையை அங்குமறைத்து வைத்தனர்” என  சிஐடியின் முன்னாள் பணிப்பாளர் மேலும் குறிப்பிட்டார்.

ஏப்ரல் 25ஆம் திகதி அந்த படுகொலையுடன் தொடர்புடைய சந்தேக நபரை, சிஐடியினர் ஆயுதங்களுடன் கைதுசெய்த பின்னர்தான், ஈஸ்டர் தாக்குதலுக்கு காரணமான சஹ்ரான் ஹாசிம் குழுவினர் – இந்த கொலையுடன் தொடர்புபட்டுள்ளனர் என்பது தெரியவந்தது என அவர் கூறினார்.

“ஈஸ்டர் தாக்குதல் குறித்து விசாரணைகளை மேற்கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்னிலையில் சாட்சியமளித்த புலனாய்வு பிரிவின் உயர் அதிகாரியொருவர்; தாக்குதலை மேற்கொண்ட குழுவினருக்கு இலங்கையின் புலனாய்வு பிரிவினர் நிதி உதவி செய்தனர் என தெரிவித்திருந்தார். இது குறித்து முழுமையாக விசாரணைகளை மேற்கொள்ளவேண்டும்” எனவும் ஷானி அபயசேகர இதன்போது வேண்டுகோள் விடுத்தார்.

வவுணதீவு கொலையை விடுதலைப் புலிகளே மேற்கொண்டனர் என, நான்கு தடவை  ராணுவ புலனாய்வாளர்கள் தவறாக வழிநடத்தினார்கள் என தெரிவித்துள்ள ஷானி அபயசேகர, இதற்கான நோக்கம் என்னவென சந்தேகம் வெளியிட்டார்.