
புதிய ஜனாதிபதி பதவிப்பிரமாணம் செய்து 10 – 12 நாட்களில் நாடாளுமன்றத்தை கலைக்க முடியும் என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு 35 நாட்களுக்கு பின்னரும் 66 நாட்களுக்கு உள்ளும் நாடாளுமன்றத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
“இருந்த போதிலும் அடுத்த ஜனாதிபதி விரும்பினால் தற்போதைய நாடாளுமன்றத்தின் பதவிக்காலம் அடுத்த ஆண்டு முடிவடையும் வரை தொடரலாம்” என்றும் அவர் குறிப்பிட்டார்.
செப்டம்பர் 21 ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அனைத்து தேர்தல் பிரசாரங்களும் செப்டம்பர் 18ஆம் திகதி நள்ளிரவுடன் நிறுத்தப்பட வேண்டும் என ரத்நாயக்க வலியுறுத்தினார்.
இதேவேளை, தேர்தல் நடவடிக்கைகள் இதுவரை அமைதியான முறையில் இடம்பெற்றுள்ளதாக தேர்தல் கண்காணிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இருந்தபோதிலும், அரச சொத்துக்கள் துஷ்பிரயோகம் கணிசமான அளவில் இடம்பெற்றுள்ளதாக ஜனநாயக சீர்திருத்தங்கள் மற்றும் தேர்தல் கற்கைகளுக்கான நிறுவனத்தின் (IRES) நிறைவேற்றுப் பணிப்பாளர் மஞ்சுள கஜநாயக்க தெரிவித்துள்ளார்.
“ஜனாதிபதியின் ஊடகப் பிரிவும், அமைச்சரவையும் மிகவும் ஒழுக்கமற்ற முறையில் செயற்பட்டுள்ளன. இது மிகவும் மோசமான முன்னுதாரணமாக அமைந்துவிட்டதாக நான் அஞ்சுகிறேன்,” எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.



