தலைப்புச் செய்திகள்

நிந்தவூர் தொழிற் பயிற்சி நிலைய மேலதிகாரியின் கெடுபிடி; கல்வியமைச்சர் சுசில் நேரில் விஜயம்: மூன்று வாரங்களில் தீர்வளிப்பதாகவும் உறுதி

– ஏ.எல். நிப்றாஸ் –

நிந்தவூரில் உள்ள மாவட்ட தொழிற்பயிற்சி நிலையத்தில் ஏற்பட்டுள்ள அமைதியின்மை தொடர்பாக ஆராய்வதற்காக கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேம்ஜயந்த, தொழில்பயிற்சி அதிகார சபை தலைவர் எஸ். குமார் ராஜபக்ச ஆகியோர் நேரில் விஜயம் செய்து மாணவர்கள், உத்தியோகத்தர்களுடன் கலந்துரையாடியதுடன், இன்னும் மூன்று வாரங்களில் விசாரணை நடத்தி சுமூக தீர்வை தருவதாக உறுதியளித்துள்ளார்.

தொழிற்பயிற்சி அதிகார சபையின் அம்பாறை மாவட்ட பிரதிப் பணிப்பாளர், மாணவர்கள் மீது கெடுபிடிகளை பிரயோகிப்பதாகவும் மத கடமைகளுக்காக பள்ளிவாசலுக்குச் செல்வதற்கு தடை விதிப்பதாகவும் குறிப்பிட்டு மாணவர்கள் கடந்த திங்கட்கிழமை ஆர்ப்பாட்டமொன்றை நடத்தினர்.

இதேவேளை. மேற்படி மேலதிகாரியின் கடுமையான நிர்வாகச் செயற்பாடுகளால் தாம் மன அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளதாக போதனாசிரியர்களும் உத்தியோகத்தர்களும் சுட்டிக் காட்டியுள்ளனர்.

இந்த அமைதியின்மையைடுத்து, இது தொடர்பான உண்மை நிலைவரத்தை கண்டறிவதற்காக கல்வியமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த, அதிகார சபை தலைவர் எஸ். குமார் ராஜபக்ச ஆகியோர் நிந்தவூர் மாவட்ட தொழிற்பயிற்சி வளாகத்திற்கு நேற்று முன்தினம் (புதன்கிழமை) அவசர விஜயமொன்றை மேற்கொண்டிருந்தனர்.

இங்கு ஏற்பட்ட குழப்பநிலைக்கான காரணங்கள் தொடர்பாக மாணவர்கள் மற்றும் உத்தியோகத்தர்களிடம் கேட்டறிந்து கொண்ட கல்வியமைச்சர், இன்னும் மூன்று வாரங்களில் விசாரணை குழுவொன்றை நியமித்து அதன் அறிக்கையின்படி நல்லதொரு முடிவை எடுப்பதாக வாக்குறுதி அளித்தார்.