
நாடாளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹ்மான் – ஐக்கிய தேசியக் கட்சியின் அனுராதபுரம் மாவட்ட அமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதற்கான நியமனக் கடிதத்தை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடமிருந்து இன்று (19) கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் வைத்து – அவர் பெற்றுக்கொண்டார்.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக தொலைபேசி சின்னத்தில் போட்டியிட்டு கடந்த தேர்தலில் வெற்றிபெற்ற இஷாக் ரஹ்மான், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தீர்மானங்களுக்கு எதிராகச் செயற்பட்டு கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் ரணில் விக்ரமசிங்க அரசாங்கங்களுக்கு ஆதரவளித்து வருகின்றார்.
இந்த நிலையில், ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிப்பதென அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தீர்மானித்துள்ள நிலையில், ரணில் விக்ரமசிங்கவுக்கு இஷாக் ரஹ்மான் – தனது ஆதரவை வழங்குவதாக அறிவித்துள்ளார்.
இந்தப் பின்னணியிலேயே, அவர் ஐக்கிய தேசியக் கட்சியின் மாவட்ட அமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.



