கட்சியின் முடிவுக்கு கட்டுப்பாடதவர்களுக்கு, நாளை கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்: ஹரிஸ் எம்பியின் பெயரை சொல்லாமல் சொன்னார் ஹக்கீம்
– முன்ஸிப் –
முஸ்லிம் காங்கிரஸின் உயர் பீட தீர்மானத்துக்கு அமைய, சஜித் பிரேதமாசவை ஆதரிக்கும் தேர்தல் நடவடிக்கைகளில் ஈடுபடாதவர்களுக்கு எதிராக, நாளை கட்சித் தலைமை கடுமையான முடிவை எடுக்கும் என, கட்சியின் தலைவர் ரஊப் ஹக்கீம் இன்று (19) ஓட்டமாவடியில் நடைபெற்ற கூட்டமொன்றில் தெரிவித்தார்.
முஸ்லிம் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் – ஜனாதிபதியின் கைகளை பிடித்துக் கொண்டிருப்பதை இன்னும் பார்த்துக் கொண்டிருக்க முடியாது என்றும் ஹக்கீம் மேலும் கூறினார்.
அம்பாறை மாவட்ட முஸ்லிம் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரிசை குறிப்பிட்டே – மு.கா தலைவர் இதனைப் பேசியதாக, அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட – முன்னாள் மக்கள் பிரதிநிதியொருவர் ‘புதிது’ தளத்துக்கு தெரிவித்தார். ஆனால், அங்கு ஹரீஸ் வந்திருக்கவில்லை.
சஜித் பிரேதமதாசவை ஆதரிப்பதென முஸ்லிம் காங்கிரஸ் தீர்மானித்ததை அடுத்து, குருணாகலில் சஜித்தை ஆதரவித்து நடைபெற்ற கூட்டத்தில், அந்தக் கட்சியின் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பைசல் காசிம் மற்றும் திருகோணமலை மாவட்ட நாாடாளுமன்ற உறுப்பினர் – எம்.எஸ். தௌபீக் ஆகியோர் கலந்து கொண்டனர். ஆனால் ஹரீஸ் எம்.பி அங்கு வரவில்லை.
இந்த நிலையில்தான் ஜாதிபதியைச் சந்தித்து மு.காங்கிரஸின் மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் அலிசாஹிர் மௌலானா- கட்சியின் தீர்மானத்துக்கு முரணாக ஜனாதிபதி தேர்தலில் ரணிலுக்கு ஆதரவை வழங்குவதாக அறிவித்தார்.
இவற்றையெல்லாம் மனதில் வைத்துக் கொண்டு பேசிய ரஊப் ஹக்கீம்; ”இவர்கள் ஜனாதிபதியின் கையைப் பிடித்துக் கொண்பிருப்பதை தொடர்ந்தும் பார்த்துக் கொண்டிருக்க முடியாது. எனவே, கட்சியின் உயர் பீடம் எடுத்த தீர்மானத்தின் அடிப்படையில் – சஜித் பிரேமதாசவை ஆதரிப்பதற்கான தேர்தல் வேலைகளில் ஈடுபடாது விட்டால், அவருக்கு எதிரான நடவடிக்கை நாளை காலையே எடுக்கப்படும் என்று ஹக்கீம கூறியுள்ளார்.
ஆனாலும் ஹரீஸ் எம்.பியின் பெயரைக் குறிப்பிட்டு – ஹக்கீம் நேரடியாகப் பேசவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஓட்டமாவடியிலுள்ள முன்னாள் மாகாணசபை உறுப்பினர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள், கட்சியின் முக்கியஸ்தர்களை ஆகியோரை – கட்சித் தலைவர் ஹக்கீம் சந்திப்துப் பேசிய கூட்டத்திலேயே, இந்த விடயங்களை ஹக்கீம் தெரிவித்தார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடமிருந்து அபிவிருத்தி வேலைகளுக்காக சுமார் 860 மில்லியன் ரூபா பணத்தை பெற்றுக் கொண்ட ஹரீஸ் எம்.பி, – சஜித் பிரேமாசவை ஆதரவித்து நடத்தப்படும் எந்தவொரு கூட்டத்திலும் இதுவரை கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கத.