
ஈஸ்டர் தாக்குதல் சம்பவத்தினால் பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு நட்டஈட்டை வழங்குமாறு, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட ஐவருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தமைக்கு அமைவாக, இதுவரையில் 43 மில்லியன் ரூபாயை 03 தடவைகளில் மைத்திரிபால சிறிசேன செலுத்தியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 100 மில்லியன் ரூபாயும், முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர, அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பிரதானி நிலந்த ஜயவர்தன ஆகியோருக்கு 75 மில்லியன் ரூபாயும், முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ 50 மில்லியன் ரூபாயும், முன்னாள் புலனாய்வு பிரதானி சிசிர மென்டீஸ் 10 மில்லியன் ரூபாயும் நட்டஈடாக செலுத்த வேண்டும் என, உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.
இதற்கிணங்க, உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு செலுத்தவேண்டிய நட்டஈட்டு தொகையில் இதுவரை 84 மில்லியனுக்கும் அதிகமான தொகை வரவு வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நீதிமன்ற உத்தவுக்கு இணங்க, முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர 17.25 மில்லியன் ரூபாயினையும், அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் தலைவர் நிலந்த ஜயவர்தன 4.1 மில்லியன் ரூபாவையும் செலுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மேலும், முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ, பாதிக்கப்பட்டவர்களுக்கான நிதி என்ற பெயரில் ஸ்தாபிக்கப்பட்ட நிதிக்காக ஜூன் 19ஆம் திகதி 05 மில்லியன் ரூபாயையும், ஜூன் 26ஆம் திகதி 15 மில்லியன் ரூபாவையும், வழங்கியுள்ளார்.
ஹேமசிறி பெர்னாண்டோ செலுத்த வேண்டிய 50 மில்லியன் ரூபாயில் 26 மில்லியன் ரூபாவை 06 சந்தர்ப்பங்களில் செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தொடர்பான செய்தி: ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு: முன்னாள் ஜனாதிபதி மைத்திரி 10 கோடி ரூபா இழப்பீடு வழங்க வேண்டுமெனவும் உத்தரவு



