தலைப்புச் செய்திகள்

குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் கீழ் டயானாவை விசாரிக்க, சிஐடியினருக்கு சட்ட மா அதிபர் உத்தரவு

முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகே தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச் செயல்கள் தொடர்பில் விசாரணை செய்து, அவருக்கு எதிராக குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்குமாறு, குற்றப் புலனாய்வு திணைக்களத்துக்கு (சிஐடி) சட்டமா அதிபர் உத்தரவிட்டுள்ளார்.

பிரித்தானிய குடியுரிமையை மறைத்து நாடாளுமன்ற உப்பினராகப் பதவி வகித்த குற்றச்சாட்டின் பேரில், டயானா கமகேவுக்கு எதிராக நடத்தப்பட்ட நீதிமன்ற வழக்குகள் மற்றும் விசாரணைகளின் போது வெளிப்படுத்தப்பட்ட குற்றவியல் விவகாரங்கள் தொடர்பான மேலதிக நடவடிக்கை குறித்து, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளர் ஆலோசனை கோரியதை அடுத்து, சட்டமா அதிபர் தனது அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.

டயானா கமகே தொடர்பில் பல குற்றச் செயல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் சட்டமா அதிபருக்கு அறிவித்துள்ளனர். போலி ஆவணங்களை சமர்ப்பித்தமை, அரசியலமைப்பை மீறியமை, தேர்தல் சட்டங்களை மீறி செயற்பட்டமை, போலி ஆவணங்களை அசலாக சமர்பித்தமை என்பன இதில் அடங்கும்.

ஆதாரங்களின் அடிப்படையில் விசாரணை நடத்தி, குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் கீழ் குற்றசாட்டுகளை முன்வைத்து – டயானா கமகேயை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு, சிஐடியினருக்கு சட்ட மா அதிபர் உத்தரவு விடுத்துள்ளார்.