
நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரலவின் படுகொலையுடன் தொடர்புடையவர்கள் எனக் கூறப்படும் 32 சந்தேக நபர்களும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்களுக்கு கம்பஹா நீதிமன்ற மூவரடங்கிய ட்ரயல் அட்-பார் நீதிமன்றத்தினால் கடுமையான நிபந்தனைகளின் கீழ் பிணை வழங்கப்பட்டுள்ளது.
இவர்கள் விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் இந்தப் பிணை உத்தரவு வழங்கப்பட்டுள்ளது
சந்தேக நபர்கள் ஒவ்வொருவரையும் 01 லட்சம் ரூபா ரொக்கப் பிணை மற்றும் 04 லட்சம் ரூபா பெறுமதியான நான்கு சரீரப் பிணையிலும் விடுவிக்க – நீதிமன்றம் உத்தரவிட்டது.
முன்னதாக பிணையில் விடுவிக்கப்பட்ட 5 பேர் உட்பட குற்றம் சாட்டப்பட்ட 37 பேரும் இன்று நீதிமன்றத்தில் ஆஜராகினர்
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொலன்னறுவை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரல 2022 மே மாதம் – நாட்டில் ஏற்பட்ட அமைதியின்மையின் போது படுகொலை செய்யப்பட்டார்.
கொழும்பில் அலரிமாளிகை மற்றும் காலி முகத்திடலுக்கு அருகில் அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் விசுவாசிகள் தாக்குதல் நடத்தியதை அடுத்து, இலங்கை முழுவதும் அமைதியின்மை ஏற்பட்டது. இதனையடுத்து பொலன்னறுவைக்கு சென்றுகொண்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் அத்துகோரல, நிட்டம்புவவில் வைத்து தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்.
இந்த சம்பவத்தின் போது நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரலவுடன், அவரின் பாதுகாப்பு அதிகாரியும் தாக்கப்பட்டு கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது.



