ஆசிரியரைத் தாக்கிய அட்டாளைச்சேனை தேசிய பாடசாலை மாணவர்களை, சிறுவர் சீர்திருத்த நிலையத்தில் 14 நாட்கள் தடுத்து வைக்க உத்தரவு
– அஹமட் –
அட்டாளைச்சேனை தேசிய பாடசலையின் ஆசிரியர் ரி. கோகுலவாசன் மீது தாக்குதல் மேற்கொண்ட, அந்த பாடசாலை மாணவர்கள் இருவரையும் யாழ்ப்பாணம் – அச்சுவேலியில் அமைந்துள்ள சிறுவர் சீர்திருத்த நிலையத்தில் 14 நாட்கள் தடுத்து வைக்குமாறு அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குறித்த மாணவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டு நேற்றைய தினம் (27) நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டபோது, நீதவான் எச்.எம்.எம். ஹம்சா இந்த உத்தரவை வழங்கினார்.
கைது செய்யப்பட்ட மாணவர்களில் ஒருவரின் – தந்தை மற்றும் சகோதரன் ஆகியோரும் மேற்படி தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டதாகத் தெரிவிக்கப்படும் நிலையில், அவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகளையும் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
அட்டாளைச்சேனை தேசிய பாடசாலை ஆசிரியர் கோகுலவாசன் மீது – அந்தப் பாடசாலையின் உயர்தரப் பிரிவைச் சேர்ந்த மாணவர்கள் இருவர் உள்ளடங்கலாக நால்வர் கொண்ட கும்பல், நேற்று முன்தினம் (26) பாடசாலை கலையும் நேரத்தில், பாடசாலையின் முன்பாக தாக்குதல் நடத்தியிருந்தனர்.
குறித்த மாணவர்களை – தாடி, மீசையினை மழித்து வருமாறு – தான் அறிவுறுத்தியமையினை அடுத்தே, மாணவர்கள் இந்தத் தாக்குதலை மேற்கொண்டதாக ஆசியர் கோகுலவாசன் தெரிவிக்கின்றார்.
ஆசிரியர் மீது நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலைக் கண்டித்தும், சந்தேக நபர்களைக் கைது செய்யுமாறும் கோரி, நேற்று (27) அட்டாளைச்சேனை தேசிய பாடசாலையின் ஆசிரியர்கள் – பாடசாலை முன்பாக, கவன ஈர்ப்பு நடவடிக்கையொன்றில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.