தலைப்புச் செய்திகள்

டிஜிட்டல் பொருளாதாரத்தை நோக்கி கொண்டு செல்லும் பணியை துரிதப்படுத்தும் அறிக்கையை சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி உத்தரவு

நாட்டை டிஜிட்டல் பொருளாதாரத்தை நோக்கி கொண்டு செல்லும் பணியை துரிதப்படுத்துவது தொடர்பிலான அறிக்கையொன்றை, ஒரு மாதத்துக்குள் சமர்பிக்குமாறு துறைசார் ராஜாங்க அமைச்சர் மற்றும் அதிகாரிகளுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உத்தரவிட்டுள்ளார்.

கொழும்பு 08, எல்விட்டிகல மாவத்தையில் நிறுவப்பட்டுள்ள ‘டராஸ்’ தலைமையகத்தை திறத்து வைக்கும் நிகழ்வில் நேற்று (18) உரையாற்றியபோதே ஜனாதிபதி இதனைக் கூறினார்.

உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் வரி சேகரிப்பு பணிகளுக்காக நிறுவப்பட்டுள்ள வருமான நிர்வாக முகாமைத்துவ தகவல் கட்டமைப்பான ரெமிஸ் (RAMIS) தொடர்பில், 1993 ஆம் ஆண்டில் தாம் பிரதமராக பதவி வகித்தபோது ஆராயப்பட்டதாக ஜனாதிபதி இதன்போது குறிப்பிட்டார்.

ஆனால் 2023 இலும் அதனை பற்றி பேசிக்கொண்டிருப்பது கவலைக்குரியதெனவும் நாட்டை டிஜிட்டல் பொருளாதாரத்தை நோக்கி கொண்டு செல்லும் பணியை ஒருபோதும் தாமதப்படுத்தக்கூடாது என்பதோடு, அதனை துரிதப்படுத்துவதற்கு நிகரான பலன்களைப் பெற்றுக்கொள்ள முடியும் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டார்.

இதன்போது டிஜிட்டல் பெயர் பலகைக்கு ஒளியூட்டி, டராஸ் தலைமையகத்தை உத்தியோகபூர்வமாக திறத்துவைத்த ஜனாதிபதி, கட்டடத்தொகுதியை பார்வையிட்டதன் பின்னர் அதன் பணிப்பாளர்கள் குழுவுடனும் கலந்துரையாடினார்.

இலங்கையின் டிஜிட்டல் மயமாக்கலை துரிதப்படுத்தும் வகையில் ‘ஈ – வணிகம்’ யுகத்தின் ஆரம்பமாக டராஸ் நிறுவனத்தை இலங்கையில் நிறுவியமைக்காக அலிபாபா நிறுவனத்துக்கு ஜனாதிபதி நன்றி தெரிவித்தார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேலும் கூறுகையில்;

“இலங்கைக்குள் டராஸ் நிறுவனம் நிறுவப்பட்டுள்ளமை இணைய வணிகச் செயற்பாடுகளை மேற்கொள்வதற்கு காணப்படும் வழிமுறைகளை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது.

நாம் இப்போது ‘ஈ – வணிக’ யுகத்திலேயே வாழ்கிறோம். இருப்பினும் எமது நாட்டிற்குள் ஈ – வணிகச் செயற்பாடுகளை ஆரம்பிப்பதற்கு தாமதமாகிவிட்டது. டிஜிட்டல் மயமாக்கலை எவ்வாறு செய்யலாம் என்பது குறித்து அமைச்சர், செயலாளர், அதிகாரிகளுடன் நான் கலந்தாலோசித்தபோது அது தொடர்பிலான அறிக்கையொன்றை ஒரு மாதத்துக்குள் பெற்றுத்தருமாறு அவர்களுக்கு பணிப்புரை விடுத்தேன்” என்றார்.

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன,தொழில்நுட்ப ராஜாங்க அமைச்சர் கனக ஹேரத், டராஸ் நிறுவனத்தின் இலங்கை முகாமையாளர் ரபீல் பெர்னாண்டோ, சர்வதேச விவகாரங்கள் தொடர்பிலான ஜனாதிபதியின் பணிப்பாளர் தினுக் கொலம்பகே உள்ளிட்டவர்களும் டராஸ் நிறுவனத்தின் பணிக்குழாம் அதிகாரிகளும் இந்நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.

(ஜனாதிபதி ஊடகப் பிரிவு)