தலைப்புச் செய்திகள்

‘இந்த’ அறிகுறிகள் பிள்ளைகளுக்கு இருந்தால், பாடசாலைக்கு அனுப்ப வேண்டாம்: வைத்திய நிபுணர் அறிவுறுத்தல்

நாட்டில் சிறுவர்கள் மத்தியில் இன்புளுவென்சா வைரஸ் தொற்று வேகமாக பரவி வருவதால் அதிக காய்ச்சல், இருமல், தலைவலி மற்றும் சுவாசப் பிரச்சினைகளால் சிறுவர்கள் பாதிக்கப்படலாம் என்றும், அவ்வாறானவர்களை பாடசாலைக்கு அனுப்பாமல் இருப்பது சிறந்தது என்றும் கொழும்பு லேடி ரிஜ்வே சிறுவர் மருத்துவமனையின் வைத்திய நிபுணர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.

இந்த வைரஸ் தொற்றுப் பரவல் தற்போது பாடசாலைகள், தனியார் வகுப்புகளில் அதிகம் பரவி வருகின்றதாகவும் அவர் கூறியுள்ளார்.

எனவே, தமது பிள்ளைகளுக்கு காய்ச்சல், இருமல், தலைவலி அல்லது சுவாசப் பிரச்சினைகள் இருப்பின், அவர்களை பாடசாலைகளுக்கு அனுப்பாமல் இருப்பது சிறந்தது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், தமது பிள்ளைகள் நோய் வாய்ப்பட்டால் – பெற்றோர் உடனடியாக அவர்களை வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அவர் அறிவுறுத்தியுள்ளார்.

அதேபோல், தற்போது ஏற்படக்கூடிய காய்ச்சல் ஏனையவர்களிடமும் விரைவில் பரவக்கூடிய தன்மையைக் கொண்டதனால், வீட்டில் உள்ள ஏனையவர்கள் முகக்கவசம் அணிவது சிறந்ததாக இருக்கும் எனவும் வைத்திய நிபுணர் தீபால் பெரேரா கூறியுள்ளார்.

இன்புளுவென்சா வைரஸ் தொற்று கிட்டத்தட்ட கொவிட் தொற்றை போன்றது, அது மக்களிடையே விரைவாக பரவக்கூடியது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.