தலைப்புச் செய்திகள்

கோட்டாவின் வீட்டுக்கு அருகில் துப்பாக்கி சூடு நடத்த முற்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர் கைது

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் வீடு அமைந்துள்ள மிரிஹான, ஜெஸ்வெல் பிளேஸ் சந்தியில் கடமையாற்றிய பொலிஸ் அதிகாரி ஒருவர், சக பொலிஸ் சார்ஜன்ட் மீது துப்பாக்கிச் சூடு நடத்த முற்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.

மிரிஹான பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர், பழைய கொட்டாவ வீதியில் உள்ள ஜெஸ்வெல் சந்தியில் மற்றுமொரு பொலிஸ் கான்ஸ்டபிள் மற்றும் சார்ஜென்ட் ஆகியோருடன் வீதியோரத்தில் உள்ள காவரணில் கடமையாற்றியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் கடமையில் ஈடுபட்டிருந்த போது உறங்கி விட்டதாகவும் பொலிஸ் சார்ஜன்ட் – அவருக்கு கடமையில் அக்கறையுடன் செயற்படுமாறு ஞாபகப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.

இதன்போது ஆத்திரமுற்ற பொலிஸ் உத்தியோகத்தர், சார்ஜென்ட்டை நோக்கி தனது ரி56 துப்பாக்கியை குறிவைத்ததாகக் கூறப்படுகிறது. இதன்போது, அவரின் துப்பாக்கி உடனடியாக அருகிலுள்ள பொலிஸ் பரிசோதகரால் பறிக்கப்பட்டது.

இந்த சம்பவம் குறித்து சிரேஷ்ட பொலிஸ் உத்தியோகத்தர் புகார் செய்ததை அடுத்து, சம்பந்தப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர் கைது செய்யப்பட்டார்.

இதன்படி, பொல்பித்திகம பிரதேசத்தைச் சேர்ந்த 25 வயதுடைய பொலிஸ் உத்தியோகத்தர் கைது செய்யப்பட்டு – நுகேகொட நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

சம்பவம் தொடர்பில் மிரிஹான பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.