சாதாரண தர பரீட்சை முடிவுகள்: அக்கரைப்பற்று கல்வி வலயத்தில் அட்டாளைச்சேனை அறபா வித்தியாலயம் முதலிடம்; 18ஆவது இடத்தில் மத்திய கல்லூரி

🕔 November 28, 2022

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், அக்கரைப்பற்று கல்வி வலயத்தில் அதிகூடிய மாணவர்கள் சித்தியெய்திய பாடசாலை எனும் இடத்தை அட்டாளைச்சேனை அறபா வித்தியாலயம் பெற்றுள்ளது.

அந்த வகையில் அறபா வித்தியாலயத்திலிருந்து சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களில் 96.9 வீதமானோர் சித்தியடைந்துள்ளனர்.

உயர் தரம் கற்பதற்கு க.பொ.த சாதரண தரத்தில் ஆகக்குறைந்தது கணிதம், தமிழ் உட்பட 3 பாடங்களில் ‘சி’ தர சித்திகளையும், 3 பாடங்களில் ‘எஸ்’ தர சித்தியுமாக 6 பாடங்களில் சித்தியடைந்திருத்தல் வேண்டும்.

அட்டாளைச்சேனை அறபாவித்தியாலயத்திலிருந்து சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றிய 32 மாணவர்களில், 31 பேர் சித்தியடைந்துள்ளனர்.

அக்கரைப்பற்று கல்வி வலயத்தில் க.பொ.த சாதாரண தர வகுப்புகள் உள்ள 24 பாடசாலைகளில், அட்டாளைச்சேனை அறபா வித்தியாலயம் மேற்படி முதல் இடத்தைப் பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை அட்டாளைச்சேனையின் மூத்த, முதல் பாடசாலையான மத்திய கல்லூரியில் (தேசிய பாடசாலை) 57.8 வீதமான மாணவர்களே சித்தியடைந்துள்ளனர்.

அந்த வகையில் அக்கரைப்பற்று கல்வி வலயத்தில் அட்டாளைச்சேனை தேசிய பாடசாலை க.பொ.த சாதாரண தர பரீட்சை முடிவுகளில் 18ஆவது இடத்தைப் பெற்றுள்ளது.

அட்டாளைச்சேனை மத்திய கல்லூரியில் (தேசிய பாடசாலை) ஒழுக்கம் மற்றும் கல்வித் தரம் ஆகியவை மிக மோசமாக வீழ்ச்சியடைந்துள்ள நிலையில் இந்த முடிவு கிடைத்துள்ளது.

கடந்த க.பொ.த உயர் தரப் பரீட்சை முடிவுகளிலும் அட்டாளைச்சேனை தேசிய பாடசாலை மிக மோசமான வீழ்ச்சியைக் கண்டிருந்தது.

2021ஆம் ஆண்டுக்கான மேற்படி க.பொ.த சாதரண தர பரீட்சை முடிவுகளின் படி, அக்கரைப்பற்று கல்வி வலயத்தில் இரண்டாவது இடத்தை அட்டாளைச்சேனை அர்ஹம் வித்தியாவலயமும், மூன்றாவது இடத்தை அக்கரைப்பற்று முனவ்வறா ஜுனியர் பாடசாலையும் பெற்றுள்ளன.

அக்கரைப்பற்று மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை) இந்தப் பட்டியலில் 19ஆவது இடத்தைப் பெற்றுள்ளது.

தரவரிசைப் படி முழுமையான பட்டியல்

தொடர்பான செய்தி: அட்டாளைச்சேனை தேசிய பாடசாலைக்குள் போதைப் பொருள் வியாபாரம்: மாணவர்கள் சிக்கிய போதும், சம்பவத்தை மூடி மறைக்கிறது நிர்வாகம்

Comments

புதிது பேஸ்புக் பக்கம்