நாட்டில் நிரம்பி வழியும் சிறைச்சாலைகள்: அதிகமாக அடைக்கப்பட்டுள்ளோர் யார் தெரியுமா?
நாட்டிலுள்ள சிறைச்சாலைகளில் அதிகபட்சமாக 13,200 கைதிகளை அடைத்து வைக்க முடியும் என்ற போதிலும், தற்போது அதனை விடவும் இருமடங்கு தொகையினர் அடைக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
சில சிறைச்சாலைகளில் அதில் அடைத்து வைக்கும் நபர்களின் தொகையை விடவும், மூன்று மடங்கு தொயைத் தாண்டியுள்ளதாகவும் சிறைச்சாலைகள் பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க கூறியுள்ளார்.
திணைக்களத்தின் புள்ளிவிபரங்களின்படி, பல்வேறு குற்றச்சாட்டுகளின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளின் எண்ணிக்கை இந்த ஆண்டின் தொடக்கத்தில் படிப்படியாக அதிகரித்துள்ளது.
நொவம்பர் 25 ஆம் திகதி வரை – நாடு முழுவதும் உள்ள சிறைச்சாலைகளில் 26,000 க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர்.
கடந்த ஆண்டு மொத்தக் கைதிகளில் 74 சதவீதமானோர் போதைப்பொருள் தொடர்பான குற்றங்களுக்காக தடுத்து வைக்கப்பட்டிருந்தவர்கள் என்று பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களில் 10,000 பேர் கைதிகள் எனவும், 16,000 பேர் சந்தேக நபர்கள் எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.
போதைப்பொருள் தொடர்பான குற்றச்சாட்டில் தண்டனை அனுபவிப்பவர்கள் எண்ணிக்கை 4,600 என்றும், அதே குற்றச்சாட்டின் பேரில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேக நபர்களின் எண்ணிக்கை 8,700 எனவும் தெரிவிக்கப்படுகிறது.
சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளோரில் அதிகமானோர் சந்தேகநபர்கள் என்றும் ஏக்கநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
தரவுகளின்படி, போதைப்பொருள் தொடர்பான குற்றச்சாட்டில் தண்டனை அனுபவிக்கும் கைதிகள் மற்றும் சந்தேக நபர்களின் எண்ணிக்கை மொத்த கைதிகளின் எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில் 50% ஐ தாண்டியுள்ளது.