மரபுகளை மீறும் இளைஞர்: தீப்பந்தம், தட்டச்சு இயந்திரம், கிறிக்கெட் மட்டை போன்றவற்றால் ஓவியங்கள் வரைந்து அசத்தும் உமர்

🕔 November 17, 2022

– மப்றூக் –

ட்டச்சு இயந்திரம் மூலம் பிரபலனமானவர்களின் உருவங்களை வரைந்து அசத்தி வருகின்றார் ஏறாவூரைச் சேர்ந்த முஹம்மட் உமர்.

இது மட்டுமன்றி, பென்சில் மற்றும் தூரிகைகள் மூலமாகவும் – பல்வேறு வகையான ஓவியங்களை இவர் வரைந்து அசத்துகின்றார்.

26 வயதுடைய உமர், ஐந்து வருடங்களுக்கு முன்னர்தான் முதன்முதலில் ஓவியம் வரையத் தொடங்கியதாகக் கூறுகின்றார்.

‘சிசிரிவி’ கமரா பொருத்துவதைத் தொழிலாகக் கொண்டிருந்த உமர், ஓவியம் வரைவதை ஆரம்பத்தில் பொழுதுபோக்காகத் தொடங்கினார். ஆனாலும், தற்போது அதனை – தனக்கு வருமானம் தரும் தொழிலாகவும் மாற்றிக் கொண்டுள்ளார்.

சில காலங்களுக்கு முன்னர், கிறிக்கெட் மட்டையொன்றின் கைப்பிடியை மட்டும் பயன்படுத்தி, இலங்கை கிறிக்கட் வீரர் – குமார் சங்ககாரவின் உருவத்தை வரைந்து, உமர் ஆச்சரியப்படுத்தியிருந்தார்.

அந்தப் படத்தை, தனது ‘ட்விட்டர்’ பக்கத்தில் குமார் சங்ககார பகிர்ந்து கொண்டதோடு, படத்தை வரைந்த தனக்கு – அவரின் நன்றியைத் தெரிவித்திருந்ததாகவும் உமர் கூறினார்.

ஓவியம் வரைவதற்கான படிப்பு, முறையான பயிற்ச்சி, அந்தத் துறை சார்ந்தோரின் ஆலோசனைகள் போன்ற – எவையுமின்றியே, ஆச்சரியப்படுத்தும் வகையில், எல்லாவிதமான ஓவியங்களையும் உமர் வரைகின்றார்.

கிறிக்கட் மற்றும் அரசியல் பிரபலங்கள், உலகத் தலைவர்கள், சினிமா நடிகர்கள் என, பல துறைசார்ந்தோரையும், உமர் ஓவியங்களாக்கியுள்ளார்.

தன்னிடமுள்ள ஓவியம் வரையும் திறமையினை – அசத்தலும், அதிரடியும் கலந்து காண்பிப்பதில் – அலாதிப் பிரியமுடையவர் உமர்.

தீப்பந்தம் ஒன்றின் மூலம் – இலங்கை கிறிக்கெட் வீரர் தசுன் சானக்க உருவத்தை – சுவரில் வரையும் வீடியோ ஒன்றினை, தனது ‘பேஸ்புக்’ பக்கத்தில் உமர் – சில மாதங்களுக்கு முன்னர் பகிர்ந்திருந்தார்.

இவ்வாறு தன்னிடமுள்ள ஓவியத் திறமையினை வெளிப்படுத்துவதற்காக உழைக்கும் அவர், அதற்காக நிறைய நேரங்களையும் செலவிடுகின்றார்.

தட்டச்சு இயந்திரம் மூலம் உருவமொன்றை வரைவதற்கு – ஐந்து தொடக்கம் 07 மணித்தியாலங்கள் வரை அவருக்குத் தேவைப்படுகின்றது.   

தனது ஊரில் 30 வருடங்களாக பாதணி தைக்கும் தொழிலைச் செய்து வருகின்ற ஒருவரை வரைந்து, அவருக்கு அந்த ஓவியத்தை பரிசளிக்கும் வீடியோ ஒன்றினையும் – சில மாதங்களுக்கு முன்னர் தனது ‘யூடியுப்’ பக்கத்தில் உமர் பதிவேற்றியிருந்தார்.

ஓவியக் கலையின் மரபுகளை மீறும் வகையில் – தனது திறமையினை பதிவுசெய்யும் உமர், அதனை ஒரு கொண்டாட்டமாகவும் வெளிப்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்