பிரமுகர் பாதுகாப்பு பிரிவைச் சேர்ந்த, 226 பேரின் பாதுகாப்பில் கோட்டா: தலதா எம்.பி தகவல்

🕔 October 28, 2022

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பாதுகாப்புக்காக பிரமுகர் பாதுகாப்பு (VIP) பிரிவைச் சேர்ந்த 226 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் தலதா அத்துகோரள தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று (27) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த அவர், பிரமுகர் பாதுகாப்பு பிரிவில் சுமார் 6,000 பொலிஸ் உத்தியோகத்தர்கள் உள்ளனர் எனக் கூறியுள்ளார்.

“இந்த 6,000 பேரில், முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்புக்காக அதிக எண்ணிக்கையிலானோர் பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளனர். இந்த நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பல அவலங்களுக்கு காரணமான முன்னாள் ஜனாதிபதிக்கு 226 பேர் கொண்ட பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பிரமுகர் பாதுகாப்பு பிரிவைச் சேர்ந்த 226 பேர் தவிர, கோட்டாபய ராஜபக்ஷவுக்கு ராணுவம் மற்றும் விசேட அதிரடிப்படையினரின் பாதுகாப்பும் வழங்கப்பட்டுள்ளதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் தலதா அத்துகோரள கூறியுள்ளார்.

“ஒருபுறம், 4,000 பொலிஸ் உத்தியோகத்தர்கள் நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் மா அதிபர் கூறுகிறார். மறுபுறம், இன்னும் 16,000 பேர் ஓய்வு பெறுகிறார்கள் என்கிறார். இந்த பொலிஸார் பணிக்கு அமர்த்தப்பட்டபோது அவர்கள் ஏற்கனவே நோய்வாய்ப்பட்டிருந்தார்களா, பணியின் போது அவர்கள் ஊனமுற்றார்களா அல்லது பொலிஸ் சேவையில் சேர்ந்த பிறகு மன அழுத்தம் அதிகரித்ததா என்பது எங்களுக்கு உறுதியாகத் தெரியவில்லை”.

“இந்த 4,000 பேரை பொலிஸ் சேவையில் இருந்து நீக்கக் கூடாது. அவர்கள் தேர்ந்தெடுத்த துறைகளில் பணியாற்ற வாய்ப்பு வழங்கப்பட வேண்டும்” எனவும அவர் தெரிவித்தார்.

தொடர்பான செய்தி: 04 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொலிஸார் உடற் தகுதியற்றோர்: சேவையிலிருந்து நீக்குவது தொடர்பில் கவனம்

Comments

புதிது பேஸ்புக் பக்கம்