பொதுஜன பெரமுனவிலிருந்து மற்றொரு நாடாளுமன்ற உறுப்பினர்கள் அணியும் பிரிகிறது: ‘பட்ஜட்’ தோற்கும் அபாயம் உள்ளதாகவும் தெரிவிப்பு

🕔 October 30, 2022

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மற்றுமொரு நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு, கட்சியில் இருந்து பிரிந்து தனியாக செயற்படுவதற்குத் தயாராக வருவதாக ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

பல அமைச்சர்கள் மற்றும் ராஜாங்க அமைச்சர்கள் இவர்களில் உள்ளடங்குவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிப்பதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பதவிகள் இல்லாத ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று அவர்களுடன் இணைந்து கொள்வதற்கு சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஐ.தே.கவுடன் நேரடியாக இணையாமல் அடுத்த தேர்தலில் தனியான குழுவாக ஐக்கிய தேசியக் கட்சியுடன் கூட்டணி அமைக்கும் நோக்கில் இந்தக் குழு ஒன்று சேர்ந்துள்ளதாக தெரியவருகிறது.

தற்போது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இருந்து பிரிந்து சென்ற அநுர பிரியதர்சன யாப்பா மற்றும் டலஸ் அழகப்பெரும தலைமையிலான இரண்டு அணிகள் தனியான குழுக்களாக செயற்பட்டு வருகின்றன.

‘பட்ஜட்’ வாக்கெடுப்பு தோற்கடிக்கப்படும் அபாயம்?

இதேவேளை, டிசம்பர் 08 ஆம் திகதி வரவு – செலவுத் திட்ட (பட்ஜட்) வாக்கெடுப்பு தோற்கடிக்கப்படுமாயின் அரசாங்கம் கவிழும் அபாயம் காணப்படுவதாக, பொதுஜன பெரமுனவரின் அநுராதபுரம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் சன்ன ஜயசுமண தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் (29) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த அவர்; 21ஆவது திருத்த வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாத நாடாளுமன்ற உறுப்பினர்கள் வரவு – செலவுத் திட்ட வாக்கெடுப்பிலும் அவ்வாறே செயற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் உள்ளதாக கூறினார். இந்நிலைமையானது அரசாங்கத்தை கலைக்க வேண்டிய சூழ்நிலையை உருவாக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் தற்போது தங்கள் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்களுக்கு ஆளுநர் பதவியை உறுதி செய்வதில் ஈடுபட்டுள்ளனர் என்றும் அவர் மேலும் கூறினார்.

அரசாங்கம் தற்போது 08 – 12 வரையிலான நாடாளுமன்ற உறுப்பினர்களை மட்டுமே பெரும்பான்மையாகக் கொண்டுள்ளதாகக் குறிப்பிட்ட பேராசியர் சன்ன ஜயசுமண; பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களிப்பதைத் தவிர்க்கும் பட்சத்தில், வரவு – செலவுத் திட்ட வாக்கெடுப்பு நிச்சயமாக தோற்கடிக்கப்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

இதற்கிடையில், “விவசாயிகள் மற்றும் அரசு மற்றும் தனியார் துறை ஊழியர்கள் போன்ற பொருளாதார ரீதியாக மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட துறைகளை முற்றாக மறந்துவிட்டு, குறிப்பிட்ட சில துறைகளுக்கு மட்டுமே நிவாரணம் வழங்கும் பொருட்டு வரவு – செலவுத் திட்டத்தில் யோசனைகள் முன்வைக்கப்பட்டால், நாங்கள் அதை ஆதரிக்க மாட்டோம்” என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்