04 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொலிஸார் உடற் தகுதியற்றோர்: சேவையிலிருந்து நீக்குவது தொடர்பில் கவனம்

🕔 October 26, 2022

இலங்கை பொலிஸ் திணைக்களத்தில் 4,000 க்கும் மேற்பட்ட பொலிஸார், கடமையாற்றுவதற்கு உடல் தகுதியில்லாதவர்கள் என பொலிஸ் மா அதிபர் சந்தன விக்ரமரத்ன தெரிவித்துள்ளார்.

பொது பாதுகாப்பு அமைச்சின் ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் அவர் இதனைக் கூறியுள்ளார்.

இதனையடுத்து நீண்ட காலமாக திறனற்ற நிலையிலுள்ள பொலிஸாரை பணி நீக்கம் செய்வது தொடர்பில், தேவையான யோசனையை தயாரித்து அமைச்சுக்கு அனுப்பி வைக்குமாறு அமைச்சர் திரான் அலஸ் ஆலோசனை வழங்கியுள்ளார்.

அதற்கமைவாக, மருத்துவ தரத்தை பூர்த்தி செய்யாத பொலிஸாரை சேவையில் இருந்து நீக்குவது தொடர்பில் – பொது பாதுகாப்பு தொடர்பான அமைச்சரின் ஆலோசனைக் குழு கவனம் செலுத்தியுள்ளது.

பொலிஸ் சேவையில் நீண்டகாலமாக உடல்நிலை திறனற்ற பல உத்தியோகத்தர்கள் இருப்பதாகவும், அவர்கள் மருத்துவ சான்றிதழ்களை சமர்ப்பித்து கடமைகளில் ஈடுபடுவதில்லை எனவும் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

இந்தநிலையில் இந்த வருடத்தில் பெருமளவிலான பொலிஸார் ஓய்வு பெறவுள்ளமையால், சுமார் 16,000 ஆண்கள் மற்றும் பெண்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான வெற்றிடங்கள் உள்ளதாகவும் பொலிஸ் மா அதிபர் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை பொலிஸ் திணைக்களத்திலுள்ளோர் போதைப்பொருள் பாவனையில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படும் சம்பவங்கள் தொடர்பிலும், பொது பாதுகாப்பு அமைச்சின் ஆலோசனைக் குழு தமது கவனத்தை செலுத்தியுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்