தலைப்புச் செய்திகள்

வைத்தியர்களின் ஓய்வு பெறும் வயதை அதிகரிக்க அமைச்சரவை அங்கிகாரம்

வைத்தியர்களின் கட்டாய ஓய்வு பெறும் வயதை ஒரு வருடத்தினால் அதிகரிப்பதற்கு அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது.

60 வயதில் வைத்தியர்கள் ஓய்வுபெறுவதால் சுகாதார துறையில் ஏற்படக்கூடிய பிரச்சினைகள் தொடர்பில் ஆராய நியமிக்கப்பட்ட அமைச்சரவை உபகுழுவின் அறிக்கையை பரிசீலித்த அமைச்சரவை இந்த தீர்மானத்தை எடுத்ததாக அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

இன்று (18) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், இந்த வருடம் 63 வயதைப் பூர்த்தி செய்த வைத்தியர்கள் 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31 ஆம் திகதியுடன் ஓய்வு பெற வேண்டும்.

அத்துடன், தற்போது 62 வயதை பூர்த்திசெய்துள்ளவர்கள் 63 வயதாகும்போதும், 61 வயதை பூர்த்திசெய்தவர்கள் 62 வயதாகும்போதும், 60 வயதை பூர்த்திசெய்தோர் 61 வயதாகும்போதும், 59 வயதை பூர்த்திசெய்தோர் 60 வயதாகும் போதும் புதிய வருடத்தில் ஓய்வுபெறவேண்டும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

இருந்தபோதும், இந்த ஆண்டு 59 வயதுடைய வைத்தியர்கள் 2023 ஆம் ஆண்டு 60 வயதை பூர்த்தி செய்ததன் பின்னர் ஓய்வு பெற வேண்டும் என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

பொதுத்துறை ஊழியர்களின் கட்டாய ஓய்வு வயது 60 ஆக சமீபத்தில் திருத்தப்பட்டது.