தலைப்புச் செய்திகள்

மூன்று வேளை உணவுக்கு சிரமப்படும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பில், அமைச்சர் பந்துலவிடம் கேள்வி

எந்தவொரு நாடாளுமன்ற உறுப்பினரும் 3 வேளை உணவுக்கு சிரமப்படுகிறார்களா என்பது குறித்து – தனக்கு தெரியாது என அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு இன்று (11) நடைபெற்ற போது, “நாடாளுமன்ற உறுப்பினர்கள் சாதாரண மக்களைப் போன்று 3 வேளை உணவுக்காகப் போராடுகின்றார்களா” என ஊடகவியலாளர் ஒருவர் கேட்டதற்கு, பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இருந்தபோதிலும், உணவு உண்பதற்கு சிரமப்படும் நபர்கள் தொடர்பில் ஏதேனும் தகவல் தெரிந்தால், அதிகாரிகளுக்கு தெரிவிக்க வேண்டும் என்றார்.

கணக்கெடுக்கப்பட்ட இலங்கையர்களில் 66 வீதமானவர்கள் தினசரி உண்ணும் உணவின் எண்ணிக்கையைக் குறைத்துள்ளதாக ஜூன் மாதம் உலக உணவுத் திட்டம் தெரிவித்திருந்தது.

உலக உணவுத் திட்டம் மற்றும் அரசு ஆகியவை இணைந்து, ஏப்ரல் மாதம் கூட்டு உணவு பாதுகாப்பு மதிப்பீடு ஒன்றை நடத்தியது.

இதன்போது 17 மாவட்டங்களில் உள்ள ஏழ்மையான குடும்பங்கள் ஆய்வு செய்யப்பட்டது. இதன்போது 86 சதவீதம் பேர் மலிவான உணவை கொள்வனவு செய்கின்றமை தெரியவந்தது. 95 சதவீதமானோர் போஷாக்கு குறைந்த உணவை வாங்குவது தெரியவந்தது. வரையறுக்கப்பட்ட அளவில் 83 சதவீதமானேர் உணவை கொள்வனவு செய்கின்றனர். தினசரி உண்ணும் உணவின் எண்ணிக்கையை 66 சதவீதமானோர் குறைத்துள்ளதாகவும் இதன்போது தெரியவந்தது.