தலைப்புச் செய்திகள்

கல்முனையிலிருந்து கடலுக்குச் சென்றவர்கள், 10 நாளாகியும் கரை திரும்பவில்லை: தேடுதல் தொடர்கிறது

– பாறுக் ஷிஹான் –

கல்முனையிலிருந்து கடந்த 10 தினங்களுக்குகு முன்னர் படகு ஒன்றில் கடலுக்கு சென்ற மீனவர்கள் இதுவரை கரைக்கு திரும்பவில்லை.

கடந்த மாதம் 26ஆம் திகதி மாலை புறப்பட்டு சென்ற 4 மீனவர்கள் குறித்து, இதுவரை எந்த தகவலும் கிடைக்கவில்லை என தெரியவருகிறது.

மேற்குறித்த  மீனவர்கள் காணாமல் சென்ற விடயத்தை, அதிகாரிகளின் கவனத்துக்கு  மீனவ சங்கத்தினர்   கொண்டு வந்திருந்த போதிலும், தேடுதல் நடவடிக்கை மந்த கதியில் இடம்பெற்று வருவதாக காணாமல் போன படகு உரிமையாளர் கூறுகின்றார்..

கல்முனை துறையில் இருந்து ஆழ்கடல் இயந்திரப் படகு ஒன்றில்   மீன்பிடிக்கச் சென்ற 4 மீனவர்கள் 10 நாட்களாகியும்   இதுவரை கரைதிரும்பவில்லை. இந்த நிலையில் அவர்களுடன் எவ்வித தொடர்புகளும் இன்றி தாங்கள் உள்ளதாக  அவர்களின் குடும்பத்தினர் கவலை தெரிவிக்கின்றனர்.

கல்முனையை  சேர்ந்த  எம்.ஐ.எம். மஜிட்  (வயது 55), சி.எஸ்.எச்.எம். நிப்றாஸ் (வயது 36 ), ஏ.பி. கபீர்  (வயது 50), எம்.என். ஹில்மி (வயது 33), ஆகிய மீனவர்களே குறித்த படகில் பயணம் செய்து காணாமல் போய் உள்ளனர்.

இவர்கள் பற்றிய தகவல்களை பொலிஸ் மற்றும் கடற்படை உள்ளிட்ட தரப்பினருக்கு  மீனவ சங்கம் அறிவித்துள்ளது. இதேவேளை மீனவர்களும் தனியாக தேடுதலில் ஈடுபட்டு வருகின்றனர்.