அரசுக்கு சுமையாகி விட்ட அரச ஊழியர்கள் தொகை: ‘கைகழுவ’ முயற்சிக்கும் ஆட்சியாளர்கள்

🕔 September 19, 2022

– யூ.எல். மப்றூக் (பிபிசி தமிழுக்காக) –

நாட்டில் தற்போது நிலவும் மிக மோசமான பொருளாதார நெருக்கடியில் அரச பணியாளர்களுக்கு ஊதியம் வழங்குவதில் அரசு தடுமாறிக் கொண்டிருப்பதைக் காண முடிகிறது. இதனால், அரச ஊழியர்களின் எண்ணிக்கையை எவ்வகையிலாவது குறைக்க வேண்டும் என்பதில் அரசு கூடுதல் கவனம் செலுத்தி வருகின்றது.

இந்த நிலையில் நாட்டிலுள்ள 16 லட்சம் அரச ஊழியர்களில் 10 லட்சம் பேர் திறனுடன் செயற்படுவதில்லை என, அண்மையில் அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்திருந்தார். இந்தப் புள்ளி விவரத்தை அவர் எங்கிருந்து பெற்றார் எனத் தெரிவிக்கவில்லை.

இவ்வாறான நிலையில், 60 வயதையடைந்துள்ள அரச ஊழியர்களை – எதிர்வரும் டிசம்பர் மாத முடிவுக்குள் பணியிலிருந்து ஓய்வு பெறுமாறு அரசு அறிவித்துள்ளது. இடைக்கால வரவு – செலவுத் திட்டத்தின் போது நிதியமைச்சர் எனும் வகையில் ஜனாதிபதி இந்த அறிவிப்பை விடுத்திருந்தார்.

கோட்டாபய ராஜபக்ஷ ஆட்சியில் நிதியமைச்சராக இருந்த பசில் ராஜபக்ஷ, அரச ஊழியர்களின் ஓய்வுபெறும் வயதை 60இல் இருந்து 65 ஆக அதிகரித்திருந்தார். ஆயினும் அரச ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை 60 என ரணில் விக்ரமசிங்க அரசாங்கம் அறிவித்துள்ளதோடு, அந்த வயதைக் கடந்தோர் அனைவரும் டிசம்பர் 31ஆம் தேதிக்குள் ஓய்வுபெறுமாறும் அறிவித்துள்ளது.

இதற்கமைவாக 20 ஆயிரத்திலிருந்து 25 ஆயிரத்துக்குள்ளான எண்ணிக்கையிலானோர் – அரச சேவையிலிருந்து ஓய்வு பெறுவர் என, பொது நிர்வாக அமைச்சு தெரிவித்திருக்கிறது.

இது இவ்வாறிருக்க, அரசு ஊழியர்கள் சம்பளமற்ற விடுமுறையைப் பெற்று, வேலை வாய்ப்பின் பொருட்டு வெளிநாடுகளுக்குச் செல்வதற்கான அனுமதியை ஏற்கனவே அரசு அறிவித்திருந்த நிலையில், தற்போது சம்பளமற்ற விடுமுறையை அரச ஊழியர்கள் பெற்றுக் கொண்டு, நாட்டில் இருந்தவாறு தனிப்பட்ட தொழில்களில் ஈடுபடுவதற்கான அனுமதியை வழங்குவதற்கும் அரசு தீர்மானித்துள்ளது.

இவை அனைத்தும் தற்போதைய பொருளாதார நெருக்கடியில் அரச ஊழியர்களின் எண்ணிக்கையினைக் குறைப்பதற்கான நடவடிக்கையாகவே உள்ளன.

இலங்கையில் அரசு ஊழியர்களின் எண்ணிக்கை 16 லட்சம் என, அமைச்சர் ரொஷான் ரணசிங்க கூறியுள்ள போதும், நிதியமைச்சின் 2021ஆம் ஆண்டுக்கான அறிக்கையில் அரச ஊழியர்களின் எண்ணிக்கை 14,01,260 என குறிப்பிடப்பட்டுள்ளது. 2020ஆம் ஆண்டு அரச ஊழியர் எண்ணிக்கை 14,23,116 என்றும், 2021இல் அந்தத் தொகை 21,856ஆல் குறைவடைந்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

குறித்த ஆண்டறிக்கையின் பிரகாரம் கணக்கிடும்போது 2,21,56,000 மக்கள்தொகையினைக் கொண்ட இலங்கையில் 15 பேருக்கு ஒருவர் அரச ஊழியராக உள்ளனர்.

இந்த நிலையில் மக்கள் தொகைக்கு ஏற்ப – அரச ஊழியர்களின் விகிதம் அதிகமாக உள்ளது என, நிதியமைச்சின் மேற்படி ஆண்டறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளமையும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.

இதேவேளை நிறுவனங்களுக்குள்ளே காணப்படும் தொழிற்படையின் சமமற்ற பகிர்வினால் நகரப்பகுதிகளில் அரச ஊழியர்கள் அதிகளவில் குவிந்துள்ளனர் எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரச ஊழியர்களுக்கான செலவு

அரச ஊழியர்களுக்கான சம்பளம் மற்றும் ஓய்வூதியம் பெறுவோருக்கான கொடுப்பனவு ஆகியவற்றுக்காக அரச வருமானத்தில் சுமார் 75 சதவீதமான தொகையை அரசு செலவிட்டுள்ளதாக 2021ஆம் ஆண்டுக்கான நிதியமைச்சின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஏறக்குறைய 15 லட்சம் அரசு ஊழியர்களும், 6,72,196 ஓய்வூதியம் பெறுவோரும் நாட்டில் உள்ளனர் என அந்த அறிக்கை குறிப்பிடுகிறது.

அரசு ஊழியர்களுக்கான ஊதிய செலவு கடந்த வருடம் 845.7 பில்லியன் ரூபாயாக இருந்தது. அதேவேளை ஓய்வுபெற்றோருக்கான ஊதியக் கொடுப்பனவு 269.8 பில்லியன் ரூபாயாக காணப்பட்டது.

2021இல் சம்பளம் மற்றும் ஓய்வூதிய கொடுப்பனவுகளுக்காக ரூபாய் 1,115 பில்லியனை செலுத்திய பிறகு, அரசின் வருமானத்தில் மிகுதியாக ரூபாய் 348 பில்லியன்களே மிகுதியாகக் காணப்பட்டது.

இத்தகைய நிலைமையானது பொதுத்துறையில் குறிப்பாக மனித வள முகாமைத்துவத்திலும் ஏனைய துறைகளிலும் சீர்திருத்தங்களை வேண்டி நிற்கின்றது என, நிதியமைச்சு தெரிவிக்கின்றது.

“அரசியல் நோக்கங்களுக்காக தொழில்கள் வழங்கப்படுகின்றன”

இந்த விடயங்கள் குறித்து தென்கிழக்குப் பல்கலைக்கழக பொருளியல்துறை தலைமைப் பேராசிரியர் ஏ.எல். ரஊபிடம் பிபிசி தமிழ் பேசிய போது; “அரச ஊழியர்கள் இப்போது அரசுக்கு சுமையாக அமைந்து விட்டார்கள்” என்றார்.

“ஒரு நிறுவனம் வளர்ச்சியடையும் போதுதான் – அங்கு ஊழியர்கள் மென்மேலும் சேர்க்கப்படுவார்கள். அதுபோலவே ஒரு நாடு பொருளாதார ரீதியில் வளர்ச்சியடையும் போதுதான் அரச ஊழியர்கள் நியமிக்கப்பட வேண்டும். ஆனால், இலங்கையில் அவ்வாறு நடைபெறுவதில்லை. பொருளாதார வளர்ச்சி மந்ந நிலையில் இருக்கும் போதும், பொருளாதாரம் வீழ்ச்சியடைந்து கொண்டிருக்கும் போதும் ஊழியர்களை அரசு அதிகரித்தது” எனக் கூறிய அவர், “அரசியல் நோக்கங்களுக்காகவே அதிகமானவர்ளுக்கு அரச தொழில்கள் வழங்கப்பட்டன” எனவும் குறிப்பிட்டார்.

உற்பத்தியை அதிகரிப்பது பற்றி யோசியாமல், அபிவிருத்தி சார்ந்த கொள்கைகளை முன்வைக்காமல் – ஊழியர்களை மட்டும் அரசு உள்வாங்கிக் கொண்டதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.

அதன் விளைவாகவே தேசிய வருமானத்தின் அதிகமான தொகையை ஊழியர்களுக்கு சம்பளமாக வழங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும், பொருளாதார நெருக்கடி உச்சத்தில் இருந்த காலகட்டத்தில் பணத்தை அச்சிட்டே அரச ஊழியர்களுக்கான சமபளத்தை வழங்க வேண்டியிருந்தது எனவும் அவர் தெரிவித்தார்.

வேலை வாய்ப்பை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளை அரசு செய்ய வேண்டும் எனக் கூறும் அவர் “இலங்கையில் பொருத்தமான வேலைக்கு பொருத்தமான நபர்கள் அநேகமாக உள்வாங்கப்படுவதில்லை” என்றும், “கல்விக் கொள்கையிலுள்ள குறைபாடுகள்தான் இதற்குக் காரணம்” எனவும் குறிப்பிடுகின்றார்.

“மக்களுக்கு வேலைவாய்ப்பை வழங்குவதற்கான பொறுப்பு அரசுக்கு உள்ளது. அதற்காக அரச தொழில்களைத்தான் வழங்க வேண்டுமென்று கிடையாது. பொருத்தமான தொழில் அறிவினையும் பயிற்சிகளையும் நபர்களுக்கு வழங்குவதன் ஊடாக, அவர்களை தொழிற் சந்தைக்குப் பொருத்தமானவர்களாக அரசு உருவாக்க முடியும்” என்றார்.

இந்தியா முன்னுதாரணம்

“இந்தியா இதைத்தான் செய்கிறது. இந்தியா – தனது மனித வளத்தை வெளிநாட்டு வேலை வாய்ப்புகளைப் பெற்றுக் கொள்ளும் வகையிலும் உருவாக்குகிறது. வெளிநாடுகளிலுள்ள வேலை வாய்ப்புகளை அடையாளம் கண்டு, அவற்றுக்கு ஏற்றால்போல் தனது நாட்டின் தொழிற் படையை இந்தியா உருவாக்குகிறது”.

இதற்கு காரணம், வெளிநாட்டு தொழிற் சந்தைக்குத் தேவையான வகையில் இந்தியா – ஒவ்வொரு துறையிலும் ஆளணியினரை அறிவூட்டி, பயிற்சியளித்து வருகின்றது. அதனால், வெளிநாட்டில் தொழில் வாய்ப்புகளைப் பெறுவதற்குப் பொருத்தமானவர்களாக அவர்கள் உள்ளனர். ஆனால் இலங்கையில் அப்படியில்லை. இலங்கையிலிருந்து வீட்டுப் பணிப் பெண்களாகவே மத்திய கிழக்கு நாடுகளுக்கு அதிகளவானோர் சென்றுள்ளனர்” என தலைமைப் பேராசிரியர் ரஊப் விவரித்தார்.

பேராசிரியர் ரஊப்

பிபிசி உடன் தொடர்ந்து பேசிய அவர்; இலங்கையின் கல்விக் கொள்கையில் மாற்றங்களை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார்.

“இலங்கையின் எந்தப் பல்கலைக்கழகத்தில் நாட்டுக்குப் பொருத்தமான கல்விக் கொள்கை உள்ளது?” என கேள்வியெழுப்பும் அவர் “வேலை வாய்ப்பை அதிகரிக்கக் கூடிய வகையிலான கல்விக் கொள்கை இங்கு இல்லை” என்கிறார்.

“வேலை வாய்ப்புகளைப் பெற்றுக் கொள்ளும் வகையிலான தொழில்நுட்பப் பயிற்சிகள் இங்கு மிகவும் குறைவாகவே உள்ளன. வெளிநாடுகளில் பாடசாலைகளிலேயே துறைசார்ந்த கல்வியறிவு வழங்கப்படுகிறது”, எனவும் அவர் குறிப்பிட்டார்.

இலங்கையில் அதிகளவானோர் கலைத் துறையில் பட்டங்களைப் பெறுவதாகக் கூறும் பேராசிரியர் “அவ்வாறானவர்களுக்கு தொழிற்சந்தையில் வேலை வாய்ப்புகள் பெரும்பாலும் இல்லை” என்கிறார். இருந்தபோதிலும், கலைத்துறைப் பட்டதாரிகளை தொடர்ந்தும் அதிகளவில் அரசு உருவாக்கிக் கொண்டிருப்பதாகவும், இது பெரும் பிழை எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

முன்போ அரச ஊழியர்கள் தொகை அதிகமாக இருந்தது

“1990களில் அரச ஊழியர்கள் சுயவிருப்பின் பேரில் – முன்கூட்டி ஓய்வு பெறும் திட்டமொன்றை அரசு முன்வைத்தது. இந்த திட்டத்தின் கீழ் பலர் ஓய்வுபெற்றனர். அந்தக் காலப் பகுதியிலேயே அரச ஊழியர்களின் தொகை அதிகமாக இருந்தமையாலேயே இந்தத் திட்டம் கொண்டுவரப்பட்டது. ஆனால், அடுத்து வந்த அரசாங்கங்கள் மீளவும் அரச துறையில் ஊழியர்களை அரசியல் ரீதியாக நியமித்தன”.

“அரச துறைக்கு பணியாளர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்குரிய நல்ல கொள்கையொன்று இலங்கையில் இல்லை. ஆட்சேர்ப்பின்போது அரசியல் செல்வாக்கு ஊடுருவுகிறது” எனவும் அவர் கூறினார்.

“அரசு இப்போது அரச பணியாளர்களை சம்பளமற்ற விடுமுறை பெற்று வெளிநாடுகளுக்குச் சென்று தொழில் வாய்ப்புகளைப் பெறுமாறு ஊக்குவிக்கிறது. ஆனால், இங்குள்ளவர்கள் நினைத்த மாத்திரத்தில் வெளிநாடுகளில் தொழில் வாய்ப்புகளைப் பெற முடியாது. எனவே, முதலில் வெளிநாடுகளுடன் தொழில் வாய்ப்புகளுக்கான ஒப்பந்தங்களை இலங்கை அரசு செய்துகொள்ள வேண்டும். அதனடிப்படியில் இங்குள்ள அரச ஊழியர்களை வெளிநாடுகளுக்கு வேலை வாய்ப்பின் பொருட்டு அனுப்பி வைப்பதே சிறந்த நடவடிக்கையாக அமையும்” எனவும் அவர் கூறுகின்றார்.

நாடு இன்னும் சீரழியும்

மறுபுறமாக, “திறமை மிக்க ஊழியர்கள் தொழில்வாய்ப்புப் பெற்று வெளியேறும் போது, நாட்டில் திறமை மிக்க அரச ஊழியர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்படும்” எனக் கூறும் அவர்; இதனால் நாட்டின் பொருளாதாரத்தில் மேலும் வீழ்ச்சியேற்படும் நிலை உருவாகும் எனவும் எச்சரிக்கின்றார்.

எனவே மனித வள பயன்பாடு தொடர்பில் சரியானதொரு கொள்கையினை அரசு உருவாக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிடுகின்றார்.

“அண்மையில் (கோட்டாபய ராஜபக்ஷ காலத்தில்) 08ஆம் வகுப்பு வரை படித்தவர்களுக்கு ஒரு லட்சம் வேலைவாய்ப்பு வழங்கும் திட்டம் அமுல்படுத்தப்பட்டது. அரசியல் ரீதியாகவே இந்த வேலை வாய்ப்பு நியமனங்கள் வழங்கப்பட்டன. நாட்டில் என்ன அபிவிருத்தி ஏற்பட்டமையைக் கருத்திற் கொண்டு இந்த வேலைவாய்ப்பினை வழங்கினார்கள்?” என, இதன்போது பேராசிரியர் கேள்வியெழுப்பினார்.

“நாட்டு மக்களுக்கு தொழில்வாய்ப்புகளை வழங்க வேண்டிய தேவை அரசுக்கு உள்ளது. மக்களை பலவீனப்படுத்த முடியாது. எனவே, தொழில்வாய்ப்புகளைப் பெறுவதற்கான கல்வியையும் பயிற்சிகளையும் அரசு வழங்க வேண்டும். ஆனால் அதனை அரசு செய்யவில்லை. அரசியல் நோக்கங்களுக்காக உள்வாங்கப்பட்ட ஊழியர்கள்தான் அதிகமாக உள்ளனர்” என பேராசியர் ரஊப் குறிப்பிட்டார்.

225 நாடாளுமன்ற உறுப்பினர்களில் வினைத்திறனுள்ளோர் எத்தனை பேர்?

நாட்டிலுள்ள மொத்த அரச ஊழியர்ளில் 10 லட்சம் பேர் வினைதிறனற்றவர்கள் என, அமைச்சர் றொசான் ரணசிங்க கூறியமையை இதன்போது நினைவுபடுத்திய பேராசிரியர் ரஊப் “நாடாளுமன்றத்திலுள்ள 225 உறுப்பினர்களில் எத்தனை பேர் வினைத்திறனுடையவர்கள் என்பதையும் அந்த அமைச்சர் கூற வேண்டும்” என்றார்.

இலங்கையில் கல்விக் கொள்கைக்கும் ஊழியர் படையணிக்கும் இடையில் தொடர்புகளில்லை என்பதையும், பொருளாதாரத்துறைகளுக்கும் ஊழியர் படைக்கும் இடையில் தொடர்புகள் இல்லை என்பதையும் பேராசிரியர் ரஊப் இந்த சந்திப்பின்போது தொடர்ச்சியாக வலியுறுத்தினார்.

“நாட்டுக்குத் தேவையான திறமைசாலிகள்தான் இப்போது வெளிநாடுகளுக்குச் சென்று கொண்டிருக்கின்றனர். வெளிநாட்டிலுள்ள தொழில் சந்தைக்குத் தேவையானவர்களை உருவாக்கி அனுப்புவதற்கு நாம் தவறி விட்டோம்” எனவும் அவர் குறிப்பிட்டார்.

“தொழில் பாதுகாப்பு, சமூக அந்தஸ்த்து ஆகியவற்றுக்காக சிலர் அரச தொழில்களை பெறுகின்றனர். ஆனால், முன்னர் தினக்கூலிகளாக மாதாந்தம் அவர்கள் பெற்ற வருமானத்தை விடவும் குறைந்தளவு சம்பளத்தையே தற்போது பெறுகின்றனர்” எனவும் தலைமைப் பேராசிரியர் ரஊப் சுட்டிக்காட்டினார்.

நன்றி: பிபிசி தமிழ்

Comments