வெறுங்கையால் ‘முழம்’ போடும் மு.கா. தலைவர் ஹக்கீம்: ஏழைகளை வைத்து படங்காட்டக் கூடாது

🕔 September 19, 2022

– மரைக்கார் –

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் அண்மையில் அட்டாாளைச்சேனை வந்திருந்தார். நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதாரப் பிரச்சினைகள், அதனால் நடந்த போராட்டங்கள் காரணமாக – ஹக்கீமுடைய அரசியல் வியாபாரம் அண்மைக்காலமாக விழுந்து போயுள்ளது.

இதனை தூக்கி நிறுத்தும் வகையில், மு.காவின் மறைந்த தலைவர் அஷ்ரப்பின் நினைவு தினைத்தை அனுஷ்டிக்கும் நிகழ்வொன்றினை அட்டாளைச்சேனையில் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியினர் ஏற்பாடு செய்திருந்ததோடு, அதற்கு கட்சித் தலைவர் ஹக்கீமையும் வரவழைத்தனர்.

கிழக்கு மாகாணத்துக்கு வரும் ஹக்கீமை, அந்தந்த ஊரிலுள்ள முஸ்லிம் காங்கிரஸ் முக்கியஸ்தர்கள் அங்குள்ள மரண வீடுகள், திருமண வீடுகள், சுன்னத்துக் கல்யாண வீடுகள் மற்றும் இன்னோரன்ன நிகழ்வுகள் நடந்த வீடுகளுக்கு அழைத்துச் செல்வது வழக்கமாகும். இப்படி அழைத்துச் செல்வதால் ஊருக்குள் கட்சியை காப்பாற்றலாம் என்பது அவர்களின் நம்பிக்கையாக இருக்கக் கூடும்.

இப்படித்தான் கடந்த 16ஆம் திகதி, அட்டாளைச்சேனையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ‘அஷ்ரப் நினைவு’ நிகழ்வில் கலந்து கொள்வதற்கு வந்திருந்த ஹக்கீமை, அட்டாளைச்சேனையில் இவ்வருடம் உயர் தரத்தில் சித்தியெய்தி மருத்துவத் துறைக்குத் தெரிவாகியுள்ள மாணவி ஒருவரின் வீட்டுக்கு ஊரிலுள்ள மு.கா. முக்கியஸ்தர்கள் அழைத்துச் சென்றிருந்தனர்.

குறித்த மாணவி – மிகவும் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவர். அவரின் கல்விக்காக பல்வேறு தரப்பினரும் உதவிகளை வழங்கியமையினாலேயே அவரால் இந்த நிலைமையை எட்ட முடிந்தது. குறித்த மாணவிக்கு – அவரின் கல்வியைத் தொடர்வதற்காக பொருளாதார மற்றும் நிதி உதவிகள் தேவையாக உள்ளன.

இவ்வாறான இடங்களுக்குச் செல்லும் போது பரிசுப் பொருளொன்றுடன் செல்வது மேன்மக்களின் வழக்கமாகும். அல்லது சம்பந்தப்பட்ட மாணவிக்கு பணத்தொகையொன்றை அன்பளிப்பாக வழங்குதலும் பொருத்தமான நடைமுறையாக இருந்திருக்கும்.

ஆனால் அந்த மாணவியின் வீட்டுக்கு ‘வெறுங்கையும் வீசிய கையுமாக’ச் சென்ற ஹக்கீம், அங்கு வந்த மு.காங்கிரஸின் பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் கொண்டு வந்து கொடுத்த சால்வையொன்றை (பொன்னாடை) போர்த்தி விட்டுக் கிளம்பியுள்ளார்.

இந்தப் ‘பொன்னாடை’ எனும் சாமானால் என்ன பயன் உண்டு எனத் தெரியவில்லை. வீட்டில் மேசைகளுக்கும் இப்போது யாரும் சீலை விரிப்பதில்லை. சமையலறையில் ‘அடைசீலை’க்காக வேண்டுமானால் ‘பொன்னாடை’ எனும் ‘பன்னாடை’களைப் பயன்படுத்திக் கொள்ள முடியும்.

‘வெறுங்கையால் முழம் அளப்பது’ மு.கா. தலைவருக்கு ஒன்றும் புதிதில்லை. புத்தக விழாக்களுக்கு இவரை அழைத்தால் ஐந்து சதம் கூட அன்பளிப்பாக வழங்காமலேயே புத்தகத்தைப் பெற்றுக் கொண்டு நடையைக் கட்டுவது இவரின் வழக்கமாகும்.

அட்டாளைச்சேனையில் மருத்துவ பீடத்துக்கு தெரிவான மாணவியை ஹக்கீம் சந்தித்து சால்வைத்துண்டு (பொன்னாடை) போர்த்திய படங்கள் ஊடகங்களிலும், சமூக வலைத்தளங்களிலும் வெளியாகியிருந்தன. இது ஹக்கீமுடைய அரசியல் வியாபாரத்துக்கு வேண்டுமானால் லாபமாக இருக்கலாம். ஆனால், அந்தப் பிள்ளைக்கு இதனால் என்ன லாபம்?

கிழக்கையும் கிழக்கு மக்களையும் வைத்துக் கொண்டு, இவ்வாறு டிசைன் – டிசைனாக ஹக்கீம் அரசியல் செய்வதும், அதற்கு அந்தத்த ஊரிலுள்ள நபர்கள் தொடர்ந்தும் பக்கமேளம் அடிப்பதும் நல்லதாகத் தெரியவில்லை.

ஹக்கீமும் அவரின் ஆசாமிகளும் தங்கள் நேரடி அரசியல் வியாபாரத்தை எப்படியும் செய்து கொள்ளலாம். ஆனால், இவ்வாறு ஏழை மாணவர்களின் வெற்றியில் குளிர் காய்வதை அனுமதிக்க முடியாது.

முஸ்லிம் சமூகத்தை வைத்து ஹக்கீம் கோடிகளில் உழைத்திருக்கிறார். அதனை வைத்து அவருக்கும் அவரின் வாரிசுளுக்கும் குடும்பத்தினருக்கும் – பல பரம்பரைகளுக்குத் தேவையான சொத்துக்களைச் சேர்த்துள்ளார்.

அவ்வாறு சமூகத்தை வைத்து உழைத்த பணத்தில் ‘பன்னீரை’த் தெளிப்பது போலாயினும், அந்த சமூகத்தைச் சேர்ந்த ஏழைகளுக்கு கொடுக்க, ஹக்கீமுக்கு மனம் இல்லை என்பது எவவளவு முரண், எவ்வளவு கேவலம்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்