38 கோடி வருடங்களுக்கு முன்னர் வாழ்ந்த மீனின் இதயம் கண்டுபிடிப்பு

🕔 September 17, 2022
கோகோ மீனின் மாதிரி வடிவம்

38 கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்து புதைபடிவமான மீனின் இதயத்தை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

மனிதர்கள் உட்பட, முதுகெலும்புள்ள விலங்குகள் அனைத்திலும் காணப்படும் இதயம் எப்படி பரிணாம வளர்ச்சியடைந்துள்ளது என்பதை கண்டறிவதற்கான முக்கிய சான்றாக இது இருக்கும் அவர்கள் கூறுகின்றனர்.

இது ‘கோகோ’ (Gogo) என்ற மீனுடைய இதயமாகும். தற்போது, இந்த மீன் இனம் அழிந்து போய்விட்டது.

அவுஸ்ரேலியாவின் மேற்குப் பகுதியில் குறித்த மீனின் இதயம் கண்டுபிடிக்கப்பட்டதாக ‘சயின்ஸ்’ சஞ்சிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தங்கள் வாழ்நாளின் மிகப்பெரிய கண்டுபிடிப்பை, தாமும் தமது சக ஊழியர்களும் நிகழ்த்திய தருணம் பற்றி பிபிசி நியூஸிடம் கர்டின் பல்கலைக்கழக பேராசிரியரும் முதன்மை ஆய்வாளருமான கேட் டிரினாஜ்ஸ்டிக் தெரிவித்துள்ளார்.

“நாங்கள் கணினி முன் இருந்தோம். நாங்கள் ஒரு இதயத்தை கண்டறிந்தோம் என்பதை எங்களால் நம்ப முடியவில்லை. இது எங்களை மிகவும் ஆச்சரியப்படுத்தியது” என, அவர் கூறியுள்ளார்.

“இது நமது சொந்த மனித இனத்தின் பரிணாம வளர்ச்சியில் ஒரு முக்கியமான கட்டம்” என்று பேராசிரியர் டிரினாஜ்ஸ்டிக் தெரிவித்துள்ளார்.

Comments