பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட விரிவுரையாளர் தொடர்பான விசாரணை அறிக்கை: பல்கலைக்கழக பேரவைக் கூட்டத்தில் சமர்ப்பிப்பு

🕔 January 29, 2022

– அஹமட் –

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் மாணவியொருவரை பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதாகக் கூறப்பட்டு, பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள விரிவுரையாளர் தொடர்பில் நடத்தப்பட்ட ஆரம்ப கட்ட விசாரணை அறிக்கை, பல்கலைக்கழக பேரவைக் கூட்டத்தில் இன்று (29) சமர்ப்பிக்கப்பட்டது.

இந்த விடயம் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக பேரவை உறுப்பினர் டொக்டர் ரி.எஸ்.ஆர்.ரி.ஆர். ரஜாப் நியமிக்கப்பட்டிருந்தார்.

இந்த நிலையில் மூன்று வாரங்கள், இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட டொக்டர் ரஜாப், தனது அறிக்கையை இன்று நடைபெற்ற பேரவைக் கூட்டத்தில் சமர்ப்பித்தார் என ‘புதிது’ செய்தித்தளத்துக்குத் தெரிய வருகிறது.

சுமார் 20 பக்கங்களைக் கொண்டதாக, மேற்படி விசாரணை அறிக்கை அமைந்துள்ளது.

குறித்த விசாரணை அறிக்கையின் பிரகாரம், பணி இடைநீக்கம் செய்யப்பட்ட விரிவுரையாளருக்கு எதிராக இரண்டு குற்றச்சாட்டுக்களை உள்ளடக்கி, குற்றப்பத்திரிகையொன்றை வழங்குவதற்கு இன்றைய பேரவைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டதாகவும் அறிய முடிகிறது.

பல்கலைக்கழக மாணவியொருவரை பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியமை மற்றும் பரீட்சை வினாத்தாள்களை பரீட்சைக்கு முன்னர் வெளியாக்கியமை ஆகிய குற்றச்சாட்டுகளை உள்ளடக்கி, குறித்த விரிவுரையாளருக்கு எதிராக குற்றப்பத்திரிகை வழங்கப்படவுள்ளது.

குற்றப்பத்திரிகை வழங்கப்பட்டு இரண்டு வார காலத்தினுள், அதற்கான பதிலை, சம்பந்தப்பட்ட விரிவுரையாளர் வழங்க வேண்டும் என, பேரவை உறுப்பினர் ஒருவர் ‘புதிது’ செய்தித்தளத்திடம் தெரிவித்தார்.

தொடர்பான செய்தி: மிச்சச் சோறு கேட்கும் எச்சிப்பொறுக்கி; ஆப்பிழுத்த குரங்கான விரிவுரையாளரின் கதை: புஷ்வானமானது புதிய ஓடியோ

Comments

புதிது பேஸ்புக் பக்கம்