பொரளை தேவாலய கைக்குண்டு விவகாரம்: 13 வயது சிறுவன் ரகசிய வாக்குமூலம்: பிரதான சந்தேக நபர் தொடர்பில் தகவல்கள் வெளியாகின

🕔 January 13, 2022

– எம்.எப்.எம்.பஸீர் –

பொரளை – ஆனந்த ராஜகருணா மாவத்தையில் அமைந்துள்ள ஓல் செயின்ட்ஸ் தேவாலய ( All Saints’ Church) வளாகத்தில் கைக்குண்டு மீட்கப்பட்ட சம்பவத்தில், 13 வயது பாடசாலை மாணவன் ஒருவன் நேற்று (12) கொழும்பு மேலதிக நீதிவான் ரஜீந்ரா ஜயசூரிய முன்னிலையில் ரகசிய சாட்சியம் வழங்கினார்.

குறித்த சிறுவன், இந்த கைக்குண்டு தொடர்பில் பல முக்கியமான விடயங்களை அறிந்துள்ளதாகவும், தேவாலயம் அருகே வசிக்கும் அச்சிறுவன் அது தொடர்பில் குற்றவியல் சட்டக் கோவையின் 127 ஆவது அத்தியாயத்துக்கு அமைய ரகசிய வாக்கு மூலம் வழங்க விரும்புவதாகவும், விசாரணைகளை முன்னெடுக்கும் கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவினர் நீதிமன்றுக்கு நேற்று அறிவித்தனர்.

இந்நிலையிலேயே அதனை ஏர்றுக்கொண்ட மேலதிக நீதிவான் ரஜீந்ரா ஜயசூரிய, குறித்த சிறுவனிடம் ரகசிய சாட்சியத்தை பதிவு செய்தார்.

இந்த கைக்குண்டினை பொருத்திய பிரதான சந்தேக நபர் உள்ளிட்ட 04 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளதாக சி.சி.டியினர் நீதிமன்றுக்கு நேற்று அறிவித்தனர். அதில் பிரதான சந்தேக நபரும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விடயம் தொடர்பில் குற்றவியல் சட்டத்தின் 125 அவது அத்தியாயத்துக்கு அமைய, விசாரணை செய்யும் பொறுப்பை பொரளை பொலிஸாரிடமிருந்து – பொலிஸ் மா அதிபர் தம்மிடம் ஒப்படைத்துள்ளதாக கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவின் பணிப்பளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் நெவில் டி சில்வா நீதிமன்றுக்கு தெரிவித்தார்.

இந்நிலையிலேயே நால்வரைக் கைது செய்துள்ளதாகவும் அவர்களில் மூவர் தேவாலயத்தில் சேவையாற்றுவோர் எனவும் மற்றையவர் வெளிநபர் எனவும் அவர் நீதிமன்றில் தெரிவித்தார்.

வெளிநபர் தொடர்பில் தீவிர விசாரணைகள் இடம்பெறுவதாகவும் சந்தேக நபர்கள் 72 மணி நேர தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருவதாகவும் சி.சி.டி.யினர் நீதிமன்றுக்கு தெரிவித்தனர்.

இதனிடையே நேற்று முன் தினம் (11) குண்டு மீட்கப்பட்டதை தொடர்ந்து சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 29,25,41,55 வயதுதுகளைக் கொண்ட தெமட்டகொட, மாலிம்பட மற்றும் மருதானை பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.

தேவாலயத்திலுள்ள திருச் சொரூபம் அருகில் இருந்தே கைக்குண்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அது தீப்பிடித்து வெடிக்கும் வகையில் பசை நாடா, றப்பர் வளையல்கள், தீப்பெட்டிகள் மற்றும் மரக் குச்சிகளைப் பயன்படுத்தி பொருத்தப்பட்டுள்ளது.

தேவாலயத்தில் பணியாளராக கடமையாற்றிய மருதானை பிரதேசத்தை சேர்ந்த ஒருவரே கைக்குண்டை வைத்துள்ளதாக விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார். சந்தேக நபர் தேவாலயத்துக்கஅருகில் வசிக்கும் 13 வயது சிறுவனை இதற்காக பயன்படுத்தியுள்ளதாகவும் அவர் கூறினார்.

சந்தேக நபர் கடந்த 16 வருடங்களாக தேவாலயத்துடன் தொடர்பு வைத்திருந்ததாகவும், கடந்த 09 மாதங்களாக தேவாலய வளாகத்திலேயே தங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது. குண்டினைப் பொருத்துவதற்குப் பயன்படுத்திய தடயப் பொருட்களையும் பொலிஸார் அவரது தங்குமிடத்திலிருந்து கண்டெடுத்துள்ளனர்.

சந்தேக நபர் இவ்வாறு தேவாலயத்தினுள் கைக்குண்டைப் பொருத்தியமைக்கான பின்னணி தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்