இந்தியப் பிரதமருக்கு அனுப்பவுள்ள ஆவணம் தொடர்பில், ஓட்டமாவடியில் நடந்த மு.கா உயர்பீடக் கூட்டம்: ஹக்கீமுடைய நாடகத்தில் நடந்தவை என்ன?

🕔 January 6, 2022

– மரைக்கார் –

ந்தியப் பிரதமருக்கு தமிழ் பேசும் கட்சிகள் ஒன்றிணைந்து அனுப்பவுள்ள ஆவணம் குறித்து, நேற்று இரவு (05) ஓட்டமாவடியில் நடைபெற்ற முஸ்லிம் காங்கிரஸின் கிழக்கு மாகாண உயர்பீட உறுப்பினர்களுக்கான கூட்டத்தில், எந்தவித வெளிப்படைத்தன்மையான விடயங்களையும் கட்சியின் தலைவர் ரஊப் ஹக்கீம் முன்வைக்கவில்லை என, உயர்பீட உறுப்பினர்கள் சிலர் ‘புதிது’ செய்தித்தளத்துக்குத் தெரிவித்தனர்.

குறித்த ஆவணத்தில் முஸ்லிம் காங்கிரஸ் ஒப்பமிடுவது தொடர்பில், உயர்பீட உறுப்பினர்களின் கருத்துக்களைப் பெறுவதற்கென ஏற்பாடு செய்யப்பட்ட மேற்படி கூட்டத்தில், அந்த ஆவணத்தின் பிரதிகள் எவையும் உயர்பீட உறுப்பினர்களுக்கு காண்பிக்கப்படவில்லை என்றும், இந்த விடயத்தில் தன்னை நம்புமாறு கட்சித் தலைவர் ஹக்கீம் கூறியதாகவும் அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட சிலர் தெரிவித்தனர்.

குறித்த ஆவணத்தில் முஸ்லிம் காங்கிரஸ் கையெழுத்திடுவது பற்றிய வாதப் பிரதிவாதங்கள் ஒருபுறமிருக்க, அந்த ஆவணத்தில் என்ன உள்ளது என்தைக் காண்பிக்காமலேயே, கிழக்கு மாகாண உயர்பீட உறுப்பினர்களை ஹக்கீம் அழைத்து, அந்த ஆவணத்தில் தான் கையொப்பமிடுவதற்கு ஆதரவைப் பெற்றுக் கொண்டதாகவும், கூறப்படுகிறது.

முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் தீர்மானங்களை எடுத்து விட்டுத்தான், உயர்பீடக் கூட்டத்தைக் கூட்டி ஆலோசனை கேட்பது போல் நாடகம் ஆடுவார் என்றும், அதுபோலவே நேற்றைய உயர்பீடக் கூட்டமும் இருந்தது எனவும், மு.காங்கிரஸில் முக்கிய பதவி வகிக்கும் ஒருவர் கூறினார்.

ஜனாதிபதி தேர்தல் மற்றும் பொதுத் தேர்தல் உள்ளிட்டவை நடப்பதற்கு முன்னதாகவும், யாரை அல்லது எந்தக் கட்சியை ஆதரிப்பது என்கிற முடிவை மு.கா. தலைவர் ஹக்கீம் எடுத்து விட்டு, அதற்கான ‘டீல்’களையும் முடித்து விட்ட பின்னர்தான், அவர் உயர்பீடக் கூட்டத்தைக் கூட்டுவார் என்றும், அவ்வாறான உயர்பீடக் கூட்டத்தில் ஹக்கீமுடைய முடிவுக்கு சாதகமாக – சிலர் ‘ஜால்ரா’ அடிப்பார்கள் எனவும் கூறிய மு.கா. முக்கியஸ்தர் ஒருவர்; “ஹக்கீமுடைய தீர்மானங்களுக்கு மாற்றமான கருத்துக்களை முன்வைக்கும் அல்லது செயற்படுத்தும் ஜனநாயகம், முஸ்லிம் காங்கிரஸுக்குள் இல்லை” என்றார்.

இதுபோலவே, நேற்று நடந்த உயர்பீடக் கூட்டத்திலும் குறித்த ஆவணத்தில் மு.காங்கிரஸ் கையெழுத்து இடக்கூடாது எனக் கூறியவர்களின் கருத்துக்கள் எடுபடவில்லை என்றும், வழமையாக மு.கா. தலைவருக்கு ஜால்ரா அடிப்பவர்கள் – நேற்றைய கூட்டத்திலும் ஹக்கீமுடைய முடிவுக்குச் சாதகமாகப் பேசியதாகவும் ‘புதிது’ செய்தித்தளத்திடம் பேசிய உயர்பீட உறுப்பினர் மேலும் தெரிவித்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்