வடக்கு மீனவர்களுக்கு சீனத் தூதுவர், 20 மில்லியன் ரூபா பெறுமதியான வாழ்வாதார உதவி வழங்கி வைப்பு

🕔 December 16, 2021

– பைஷல் இஸ்மாயில் –

டக்கு மாகாணத்துக்கு விஜயம் மேற்கொண்டுள்ள சீனத் தூதுவர் கீ சென் ஹொங், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து,  கடற்றொழில் மற்றும்  நன்னீர் மீன்வளர்ப்பு, கடலட்டை வளர்ப்பு போன்ற நீர் வேளாண்மைச் செயற்பாடுகள் தொடர்பாக கலந்துரையாடுவதற்கு விருப்பம் தெரிவித்திருந்த நிலையில், குறித்த சந்திப்பு இன்று (16) யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.

இலங்கை – சீன கூட்டு முயற்சியில் குயிலான்  நிறுவனத்தினால் யாழ்ப்பாணத்தில் செயற்படுத்தப்பட்டு வருகின்ற கடலட்டை குஞ்சு இனப் பெருக்கப் பண்ணையில் குறித்த சந்திப்பு நடைபெற்றது.

இந்நிலையில் கருத்து தெரிவித்த கடற்றொழில் அமைச்சர்; மக்களுக்கு வளமான எதிர்காலத்தினை பெற்றுத் தரக்கூடிய முதலீடுகளையும் தொழில் நுட்பங்களையும் வரவேற்று பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற அடிப்படையில், சீன முதலீட்டு முயற்சிகளை வரவேற்பதாக  தெரிவித்தார்.

கடலட்டை பண்ணை முதலீட்டின் ஊடாக ஐந்து மடங்கு லாபத்தினை பெற்றுக் கொள்ள முடியும் என்பது ,ஆய்வு ரீதியாக நிரூபிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த முதலீட்டின் மூலம் நாட்டுக்கு அந்நியச் செலாவணியை பெற்றுக் கொள்ள முடியும் எனவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

அதேவேளை, யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் மாவட்ட கடற்றொழிலாளர்களுக்கு சீனாவினால் சுமார் 20 மில்லியன் ரூபாய் பெறுமதியான வாழ்வாதார உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.

இலங்கைக்கான சீனத் தூதுவர் கீ சென் ஹொங், யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசங்களின் சம்மேளனத்தின் ஊடாக – யாழ் மாவட்ட கடற்றொழிலாளர்களுக்கு சுமார் 13.75 மில்லியன் ரூபாய் பெறுமதியான உணவுப் பொதிகளையும் 06 மில்லியன் ரூபாய் பெறுமதியான வலைகளையும் வழங்கி வைத்துள்ளார்.

இலங்கைக்கான சீனத் தூதுவரின் அழைப்பினை ஏற்று, யாழ். மாவட்ட கடற்றொழிலாளர் சம்மேளனத்தில் நடைபெற்ற குறித்த நிகழ்வில் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கலந்து கொண்டு உதவித் திட்டங்களை பயனாளர்களுக்கு வழங்கி வைத்தார்.

கொரோனா பரவல் உட்பட பல்வேறு காரணங்களினால் வாழ்வாதார அச்சுறுத்தலை எதிர்கொண்டுள்ள வடக்கு கடற்றொழிலாளர்களுக்கு வாழ்வாதார உதவிகள் தேவைப்படுவதாக, கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பல்வேறு தரப்புக்களிடமும் கோரிக்கை முன்வைத்த நிலையில், சீனாவினால் முதல் கட்டமாக குறித்த உதவிகள் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்