‘அப்பன் குதிருக்குள் இல்லை’ என்பதை நினைவுபடுத்திய ஹரீஸ், முஷாரப்; ‘டீல்’ கதைக்கு தலையைக் கொடுத்து, நனைந்து கொண்ட அவலம்

🕔 December 10, 2021

– மரைக்கார் –

ரசாங்கத்துடன் ‘டீல்’ வைத்துள்ள முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குறித்து, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ரா. சாணக்கியன், இன்று (10) சபையில் பேசிய போது, முஸ்லிம் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹரீஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். முஷாரப் ஆகியோர் இடைமறித்துப் பேசியதன் மூலம், ‘அப்பன் குதிருக்குள் இல்லை’ என்பதை நினைவுபடுத்தினர்.

முஸ்லிம் மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்குமாறு அரசாங்கத்துடன் பேரம்பேசி, அதற்காக வரவு – செலவுத் திட்டத்துக்கு முஸ்லிம் எம்.பிக்கள் வாக்களிக்க வேண்டுமென்றும், அவ்வாறில்லாமல் வரவு – செலவுத் திட்டத்துக்கு வாக்களிக்கும் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது சொந்தத் தேவைகளைத் தீர்த்துக் கொள்வதற்கான ‘டீல்’களை அரசாங்கத்துடன் வைத்து, அதற்காகவே ஆதரிப்பதாக அர்த்தப்படும் எனவும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ரா. சாணக்கியன் இன்று நாடாளுமன்றில் கூறினார்.

இதனால் ஆத்திரமடைந்த, ஹரீஸ் மற்றும் முஷாரப் ஆகியோர், சாணக்கியனின் உரையை இடைமறித்துப் பேசி, தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்தனர்.

இதனையடுத்துப் பேசிய சாணக்கியன்; தான் பொதுவாக கூறிய விடயத்துக்கு ஏன் இவர்கள் எதிர்பை வெளியிடுகின்றனர் என, கேள்வியெழுப்பினார்.

சாணக்கியன் பொதுவாகக் கூறிய ‘டீல்’ விடயத்துக்கு, ஹரீஸ் மற்றும் முஷாரப் ஆகியோர் பொங்கியெழுந்தமையைப் பார்த்தபோது,’அப்பன் குதிருக்குள் இல்லை’ என்பது நினைவுக்கு வந்தது.

சாணக்கியனின் பேச்சை இடைமறித்த முஷாரப் ; .இன்னொரு இனத்தின் (முஸ்லிம் மக்களின்) பிரச்சினைகள் குறித்து சாணக்கியன் பேசக் கூடாது எனவும் கூறினார்.

இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தை அனைத்து சமூகங்களும் கோரி நிற்கும் இன்றைய காலகட்டத்தில், இவ்வாறு முஷாரப் பேசியமை கேவலமானதாகும்.

இனங்களுக்கிடையில் நல்லுறவு இல்லாத வரையில்தான், தமது அரசியல் பானைகளில் ‘சோறு’ பொங்கும் என்று நினைப்பவர்களுக்கு, சாணக்கியனின் பேச்சு கசந்ததில் ஆச்சரியமில்லைதான்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்