இலங்கை ராஜதந்திரம் தோல்வி அடைகிறதா; இனி என்ன நடக்கும்?: சர்வதேச சட்டத்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் ஹக்கீம் பேட்டி

🕔 September 18, 2021

– யூ.எல். மப்றூக் (பிபிசி தமிழுக்காக) –

க்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் ஆணையர் மிச்செல் பெச்சலட் இலங்கை தொடர்பில் வெளியிட்ட அறிக்கையை, வெளிவிவகார அமைச்சர் ஜி.எல். பீரிஸ் நிராகரித்ததன் மூலம், இலங்கையின் ராஜதந்திரம் தோல்வியடைந்துள்ளதாக கொழும்பு பல்கலைக்கழக சட்ட பீடத்தின் சர்வதேச சட்டத் துறை சிரேஷ்ட விரிவுரையாளரும் சட்டத்தரணியுமான எம்.ஏ.எம். ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

“மனித உரிமைகள் பேரவை ஆணையரின் அறிக்கையை நிராகரித்தமையானது, அந்தப் பேரவைக்கு விடுத்த சவாலாகவே கொள்ளப்படும். சர்வதேசத்துக்கு சவால் விடுவதென்பது தவறானதொரு விடயமல்ல. ஆனால், தற்போதைய நிலையில் இலங்கை இவ்வாறானதொரு சவாலை விடுத்திருப்பது பொருத்தமானதல்ல,” என்றும் அவர் கூறினார்.

பிபிசி தமிழுக்கு எம்.ஏ.எம். ஹக்கீம் அளித்துள்ள சிறப்பு நேர்காணலில் இலங்கை விவகாரம் தொடர்பாக பேசினார். அவற்றினை விரிவாக இங்கே தொகுத்தளிக்கிறோம்.

இலங்கையில் ஆயுத மோதல் நிறைவடைந்ததில் இருந்து தற்போது வரையான காலப்பகுதியை மூன்றாகப் பிரிக்கலாம். முதலாவது 2009ஆம் ஆண்டு யுத்தம் முடிவடைந்த சூழல். இரண்டாவது கடந்த நல்லாட்சி அரசாங்க காலம். மூன்றாவது – தற்போதைய அரசாங்கம் அமைந்த பிறகு உருவான நிலைவரம். இவற்றினை ஆராய்வதன் மூலமே விடயங்களைச் சரியாக விளங்கிக் கொள்ள முடியும்.

2009ஆம் ஆண்டு இறுதிக்கட்ட ஆயுத மோதலில் நடைபெற்ற சர்வதேச சட்டமீறல்கள் தொடர்பாக, இலங்கை அரசாங்கம் சர்வதேசத்துக்கு தெளிவானதொரு வாக்குறுதியை வழங்கியமை காரணமாகத்தான், இவ்விவகாரத்தினுள் சர்வதேசம் உள்வந்தது.

இறுதி கட்ட யுத்தத்தில் நடைபெற்ற அத்துமீறல்கள், வன்முறைகள் மற்றும் குற்றங்கள் தொடர்பாக நடுநிலையான விசாரணைகளை நடத்தி – அது தொடர்பில் நீதி வழங்கப்படும் என சர்வதேசத்துக்கு 2009இல் வாக்குறுதியொன்றை இலங்கை வழங்கியது. அந்த வாக்குறுதி மிகவும் முக்கியமானது. ஏனென்றால் அது – அரசியல் தீர்வுடன் சேர்ந்ததொரு வாக்குறுதியாகும். இலங்கையில் நடைபெற்ற ஆயுத மோதலுக்கான தேவைப்பாடு அரசியல் தீர்வாகும். தற்போது ஆயுதங்கள் மௌனமாகி விட்டபோதும் பிரச்னைகள் தீரவில்லை. அதாவது வன்முறையால் வன்முறை கட்டுப்படுத்தப்பட்டுள்ளதே தவிர, மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படவில்லை.

2009ஆம் ஆண்டு அப்போதைய அரசாங்கம் இரண்டு அம்சங்களை வாக்குறுதியாக வழங்கியது. அவை மீளிணக்கம் மற்றும் பொறுப்புக் கூறுதல். சட்டத்தில் இவற்றை, ‘நிலைமாறு கால நீதி’ என்பர். இந்த வாக்குறுதி வழங்கப்பட்டமையினால், இலங்கை அரசுக்கு ஒரு சந்தர்ப்பத்தை சர்வதேசம் வழங்கியது. அதாவது ‘உள்நாட்டு விவகாரத்தில் சர்வதேசம் தலையிடாது, நீங்களாகவே இதற்கு ஒரு தீர்வைக் காணுங்கள்’ என இலங்கை அரசுக்குக் கூறப்பட்டது.

இருந்த போதும் இந்த விவகாரத்தில் இலங்கை அரசு – காலத்தை நீடித்துக் கொண்டு சென்றமையினால், இலங்கை விவகாரத்தில் ஆழமான கரிசனையை சர்வதேசம் செலுத்தியது. இதனையடுத்து நல்லிணக்க மற்றும் கற்றுக்கொண்ட பாடங்கள் ஆணைக்குழுவை இலங்கை அரசு நியமித்தது. இந்த ஆணைக்குழுவின் அறிக்கை மிகவும் ஆழமானதாகவும், நடுநிலையானதாகவும் கருதப்படுகிறது.

இந்த ஆணைக்குழுவின் அறிக்கையில் ஒரு செயற்பாட்டுத் திட்டம் பரிந்துரைக்கப்பட்டிருந்தது. ஆனால், அதனை நடைமுறைப்படுத்துவதற்கும் இலங்கை அரசு தாமதம் காட்டியது.

இலங்கை அரசின் இவ்வாறான நடவடிக்கைகள்தான், ஐக்கிய நாடுகளின் மனித உரிமை பேரவையின் 5 அம்சத் தீர்மானங்களுக்கு வழிவகுத்தன. இலங்கை அரசு உண்மையாகவும் நேர்மையாகவும் விருப்பத்துடனும் மீளிணக்கம், பொறுப்புக் கூறுதல் மற்றும் மனித உரிமை பிரச்சினைகளை அணுகாமல் இழுத்தடிப்புச் செய்கிறது எனக்கூறி, இவ்விடயங்களை மனித உரிமை பேரவை கையில் எடுத்தது.

நல்லாட்சி அரசாங்கத்தின் அணுகுமுறை

நல்லாட்சி அரசாங்கம் உருவானதன் பின்னர், இலங்கை அரசின் அணுகுமுறை மாறியது. சர்வதேசத்துடன் இணைந்து மேற்படி விடயங்களில் செயற்பட நல்லாட்சி அரசாங்கம் இணைக்கம் தெரிவித்தது. இதனையடுத்து 2015ஆம் ஆண்டு ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் தீர்மானத்துக்கு நல்லாட்சி அரசாங்கம் இணை அனுசரணை வழங்கியது. அதனால் அந்தத் தீர்மானம் வாக்கெடுப்புக்குச் செல்லவில்லை.

இதனையடுத்து இது விடயத்தில் நல்லாட்சி அரசாங்கம் மேற்கொண்ட நடவடிக்கைகள் ஓரளவு முன்னேற்றகரமானவையாக இருந்தன. இது சர்வதேசத்துக்கு நம்பிக்கையளித்தது. அதனால், இலங்கை ஏற்றுக் கொண்ட திட்டங்களை நிறைவேற்றுவதற்காக இரண்டு ஆண்டுகாலம் நீடிப்பு வழங்கப்பட்டது. இந்த நிலையில்தான் இலங்கையில் தற்போதைய ஆட்சி மாற்றம் நடந்தது.

சர்வதேசத்துக்கு ஏற்பட்ட அவநம்பிக்கை

இப்போது நாம் மேலே குறிப்பிட்ட மூன்றாவது காலகட்டத்துக்கு வந்துள்ளோம். இலங்கையில் இறுதியாக ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தினை அடுத்து, தற்போதைய அரசாங்கத்தின் நடவடிக்கைகள் உள்நாட்டிலும் சர்வதேசத்திலும் பாரியளவிலான சந்தேகங்களையும் கேள்விகளையும் ஏற்படுத்தியுள்ளன.

தேசியவாத அரசாங்கமொன்றை உருவாக்க வேண்டுமெனும் எண்ணத்தை தற்போதைய ஆட்சியாளர்கள் மக்களின் மனதில் விதைத்ததன் காரணமாக, சிங்கள மக்கள் ‘எங்கள் தாய் நாடு’ எனக் கூறிக் கொண்டு ஒரு பக்கமாகச் சாய்ந்து விட, ஏனைய மக்கள் அந்நியர்களாகப் பார்க்கப்பட்டனர். இது உள்நாட்டில் ஏற்பட்ட ஒரு அலையாகும்.

இதேவேளை நல்லாட்சி அரசாங்கம் – சர்வதேசத்துக்கு வழங்கிய வாக்குறுதிகளையும் ஒத்துழைப்புக்களையும் தற்போதைய அரசாங்கம் உடனடியாக மீளப்பெற்றுக் கொண்டது. நல்லாட்சி அரசாங்கம் வழங்கிய இணை அனுசரணையிலிருந்து தற்போதைய அரசாங்கம் பின்வாங்குவதாக அறிவித்தது. இதனால், தற்போதைய அரசாங்கம் மீது சர்வதேசத்துக்கு அவநம்பிக்கை ஏற்பட்டுள்ளது. அதனால், இந்த அரசாங்கத்தினுடைய அனைத்து செயற்பாடுகளையும் சர்வதேசம் உன்னிப்பாக ஆராயத் தொடங்கியுள்ளது.

தற்போதைய அரசாங்கமானது கடந்த காலத்தில் இழைக்கப்பட்ட மீறல்களுக்குப் பொறுப்புக் கூறவுமில்லை, மீளிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான அடிப்படை நடவடிக்கைகளை மேற்கொள்ளவுமில்லை. மேலும் சமகாலத்தில் மனித உரிமை மீறல்களிலும் இந்த அரசாங்கம் ஈடுபட்டு வருகின்றது. ஆகவே, சர்வதேசத்தின் மனித உரிமை நிகழ்ச்சி நிரலில் நிரந்தர விடயமாக இலங்கை ‘விவகாரம்’ மாறிப்போயுள்ளது.

இதன் காரணமாக இலங்கை விவகாரங்களை உன்னிப்பாக ஆராயும் விசேடமான பணி அல்லது ஆணை ஐ.நா மனித உரிமைகள் ஆணையருக்கு வழங்கப்பட்டுள்ளது. இதனையடுத்து இலங்கையின் சகல நடவடிக்கைகளையும் அவர் கவனமாக ஆராந்தமையினால்தான், கடந்த 13ஆம் திகதி மனித உரிமைகள் ஆணையர் வெளியிட்ட வாய்மொழி மூல சமர்ப்பணத்தில், அண்மைக்காலமாக இலங்கை அரசு மேற்கொண்டு வந்த மனித உரிமை மீறல்கள், சர்வதேச கவனத்தை ஈர்க்குமளவுக்குப் பாரதூரமானவை எனக் குறிப்பிட்டிருந்தார்.

அதன் காரணமாக இலங்கை அரசின் அனைத்துச் செயற்பாடுகளும் மனித உரிமைகளை மீறுகின்றவா? இல்லையா? என்பதை சர்வதேசம் பட்டியலிட ஆரம்பித்திருக்கிறது எனக் கூறலாம்.

இதன் தாக்கம் என்ன?

இந்த நிலைமையானது கடந்த காலத்தில் இலங்கை அரசு செய்த தவறுகளுக்குப் பொறுப்புக் கூற வேண்டிய தேவைப்பாட்டை இன்னும் உறுதிப்படுத்துமே தவிர, இலங்கையை இதிலிருந்து விடுவிக்காது.

ஆனால் மனித உரிமைகள் ஆணையரின் வாய்மொழி மூல சமர்ப்பணத்தில் இலங்கை மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை இலங்கை அரசு மறுத்துள்ளதோடு, தாம் முன்னேற்றகரமான பல விடயங்களை மேற்கொண்டுள்ளதாகவும் கூறியுள்ளது.

ஒரு நாட்டின் உள்நாட்டு விவகாரத்தில் அத்துமீறித் தலையிடக் கூடாது என்பது சர்வதேச சட்டமாகும். அதேவேளை ஒரு நாட்டில் புரியப்படும் செயல்கள் சர்வதேச சட்ட மீறலாக, அல்லது சர்வதேச சமூகத்துக்கு எதிரான செயல்களாக இருக்கின்றதா என்று பார்க்கப்படும், மனித உரிமை மீறல் என்பது இப்போது உள்நாட்டு விவகாரமல்ல. மனித உரிமை என்பது சர்வதேச சட்டத்தால் பாதுகாக்கப்பட்ட விடயமாகும். அதனைப் பாதுகாக்கும் பொறுப்பு சர்வதேச சமூகத்துக்கு உள்ளது.

அந்த அடிப்படையில் தற்போது மனித உரிமைகள் பேரவை ஒரு வித்தியாசமான பொறிமுறையை அறிமுகப்படுத்தி விட்டது. அது என்னவென்றால் கடந்த மார்ச் 23ஆம் திகதி 46/1 தீர்மானத்துக்கு அமைய சாட்சிகளையும் சான்றுகளையும் சேகரிப்பதற்கும் அவற்றைப் பாதுகாப்பதற்கும், அவ்வாறு சேகரித்துப் பாதுகாதுகாக்கப்பட்ட சான்றுகளை எதிர்காலத்தில் வழக்குத் தொடுப்பதற்குப் பயன்படுத்துவதற்குமான வரையறையொன்று கொண்டு வரப்பட்டுள்ளது.

அது என்னவென்றால் இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கான தீர்வு உள்நாட்டில் காணப்படாது விட்டால், எந்தவொரு நாடும் எதிர்காலத்தில் இலங்கைக்கு எதிரான வழக்குகளை தமது நாட்டில் தொடுக்கலாம். ‘அவ்வாறு ஒரு நாட்டில் வழக்குத் தொடுப்பதற்கான சாட்சிகள், சான்றுகள் மற்றும் ஆதாரங்களை நாங்கள் தொகுத்துத் தருவோம்’ என மனித உரிமைகள் பேரவை குறிப்பிட்டுள்ளது. இதற்காக 2.8 மில்லியன் டொலர் நிதியை வழங்குவதற்கு ஐ.நா. பொதுச்சபை அங்கீகாரமளித்துள்ளது. அதேபோன்று 01 லட்சத்து 20 ஆயிரம் தகவல்கள் (சாட்சிகள், சான்றுகள், சம்பவங்கள் பற்றிய தகவல்கள்) சேகரிக்கப்பட்டுள்ளன.

இந்த சாட்சிகள் மற்றும் சான்றுகளை எதிர்காலத்தில் எவ்வாறு பயன்படுத்துவதென்பது தொடர்பில் தாம் கலந்துரையாடவுள்ளதாகவும் மனித உரிமை ஆணைக்குழுவின் 46/1 தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

என்னவெல்லாம் நடக்கும்?

கடந்த கால அனுபவங்களின்படி இனி என்ன நடக்குமெனப் பார்ப்போம். ‘ஆள்புலத்துக்கு வெளியிலான நியாயாதிக்கம்’ எனும் கோட்பாடொன்று உள்ளது. எந்த நாட்டுப் பிரஜையாவது எந்த நாட்டில் வைத்து குற்றமொன்றைப் புரிந்தாலும்கூட, அந்தச் செயலை சட்ட ரீதியாக குற்றம் என அறிவித்துள்ள எந்தவொரு நாடும், குறித்த நபருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்ய முடியும். அவ்வாறு வழக்குத் தாக்கல் செய்யப்பட்டால் – சம்பந்தப்பட்ட நபர், வழக்குத் தாக்கல் செய்யப்பட்ட நாட்டுக்குச் செல்லும் போது கைது செய்யப்படுவார். அல்லது குறிப்பிட்ட நபரை நாடு கடத்துமாறு அவர் எந்த நாட்டில் இருக்கின்றாரோடு அந்த நாட்டிடம் வழக்குத் தொடுத்த நாடு கேட்கலாம்.

இதற்கு மேலாக, இலங்கை விடயத்தை சர்வதேச நீதிமன்றுக்கு ஆற்றுப்படுத்தி குற்றவியல் நீதிமன்றில் ஆராய வேண்டுமென்றால், அதற்கு இலங்கை அரசு – சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தை ஏற்றுக் கொள்ளும் ஆவணத்தில் கையொப்பமிட்டதொரு தரப்பாக இருக்க வேண்டும். ஆனால் இலங்கை இன்னும் அதை ஏற்றுக் கொள்ளவில்லை. அதனால் இலங்கைக்கு எதிராக சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் யாரும் வழக்குத் தொடர முடியாது.

ஆனாலும் ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புப் பேரவை இலங்கைக்கு எதிராக தீர்மானமொன்றைக் கொண்டு வந்து, அதனை நிறைவேற்றும் பொறுப்பை சர்வதேச குற்றவியல் நீதிமன்றின் வழக்குத் தொடுநருக்கு (சட்டமா அதிபர் போன்றவர்) ஒப்படைக்க முடியும். அப்படி நடந்தால் பாதுகாப்பு சபையின் தீர்மானத்தை நடைமுறைப்படுத்தும் வகையில், இலங்கைக்கு எதிராக சர்வதேச நீதிமன்றில் வழக்குத் தொடருவதற்கான தத்துவத்தை அவர் பெறுவார்.

இதற்கு ஓர் உதாரணமாக சூடான் நாட்டின் ஜனாதிபதியாகப் பதவி வகித்த அஹமட் அல் பஷீர் என்பவருக்கு எதிராக, சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கைக் கூறலாம். சர்வதேச குற்றவியல் நீதிமன்றை ஏற்றுக் கொள்ளாத நாடுகளில் சூடானும் ஒன்றாகும். மியன்மாருக்கு எதிராகவும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. சர்வதேச நீதிமன்றை மியன்மார் ஏற்றுக் கொள்ளவில்லை என்றாலும், அந்த நாடு மேற்கொண்ட குற்றங்கள் ஆரம்பித்து நிறைவடைந்தது பங்களாதேஷில் என்பதாலும், சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தை பங்களாதேஷ் ஏற்றுக் கொண்ட நாடு என்பதாலும், மியன்மாருக்கு எதிராக சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

என்ன செய்யும் சீனா?

இலங்கைக்கு எதிராக ஐ.நா பாதுகாப்புச் சபையில் தீர்மானமொன்று கொண்டு வரப்பட்டால், பாதுகாப்புச் சபையில் ‘வீட்டோ’ (வெட்டு வாக்கு) அதிகாரத்துடன் அங்கம் வகிக்கும் – இலங்கையின் நட்பு நாடான சீனா எவ்வாறு நடந்து கொள்ளும்?

அது சர்வதேச அரசியலுடன் சம்பந்தப்பட்ட விடயமாக மாறும். அப்போது இலங்கையை பாதுகாக்க வேண்டுமென சீனா முழுமையாக எண்ணினால், இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை நிறைவேற்றாமல் தடுக்கும் பொருட்டு, தனது ‘வீட்டோ’ அதிகாரத்தைப் பயன்படுத்தலாம். அவ்வாறில்லாமல் சீனா தனது லாப – நட்டக் கணக்கைப் பார்த்து, இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றபடுவதே தனக்கு லாபம் எனக் கருதினால், ‘வீட்டோ’வைப் பயன்படுத்தாது. இலங்கைக்காக ஐரோப்பிய, அமெரிக்க நாடுகளுடனான தொடர்பை சீனா விட்டுக் கொடுக்குமாறு என்பதும் கேள்விக்குரியதாகும்.

வேறு அச்சுறுத்தல்

மறுபுறமாக ஒரு நாட்டின் அரசியல், பொருளாதாரத்தில் ஸ்திரமற்ற நிலையும், அங்கு மனித உரிமை மீறல்களும் அதிகரித்தால், ஐ.நா பொதுச் சபையில் அந்த நாட்டுக்கு எதிராக சில தீர்மானங்கள் மேற்கொள்ளப்படலாம். அதற்கிணங்க இலங்கையை நோக்கியும் சில தீர்மானங்களை ஐ.நா பொதுச் சபை நிறைவேற்றலாம். அதில் ‘உங்களுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை திருத்திக் கொள்ளுங்கள், இல்லாவிட்டால் பாதுகாப்புப் பேரவைக்கு ஒரு பரிந்துரையைச் செய்ய வேண்டி வரும்’ எனக் கூற முடியும்.

அதையும் மீறி இலங்கையின் மனித உரிமை மீறல் செயல்பாடுகள், அந்த நாட்டை சர்வதேசத்தில் தான்தோன்றித்தனமான ஒரு நாடாகக் காட்டுமாக இருந்தால், இலங்கையைப் பார்த்து மற்றைய நாடுகளும் செயற்பட ஆரம்பிக்கும் என்றும், அது சர்வதேச அமைதிக்கும் பாதுகாப்புக்கும் பிரச்சினையாக மாறி விடும் எனவும் கூறி, இலங்கைக்கு எதிராக பொதுச் சபையில் தீர்மானமொன்று எடுக்கப்பட்டு, பாதுகாப்புப் பேரவைக்கு அது கையளிக்கப்படலாம்.

இவ்வாறான பெரும் சிக்கல்களுக்குள் தற்போது இலங்கை மாட்டியுள்ளது.

இதேவேளை தற்போதைய நிலைவரத்தை அடுத்து, இலங்கைக்கு பொருளாதார ரீதியில் கிடைக்கப்பெறும் ஜிஎஸ்பி பிளஸ் சலுகை தொடர்ந்தும் கிடைப்பதில் சிக்கல்கள் ஏற்படலாம். இலங்கைப் பொருட்களை ஏனைய நாடுகள் இறக்குமதி செய்வதில் தடைகள் உண்டாகலாம். மேலும் பல பொருளாதார சிக்கல்களை சர்வதேசத்திடமிருந்து இலங்கை எதிர்கொள்ள நேரிடலாம்.

மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும், மனித உரிமைகளை மேம்படுத்த வேண்டுமென இலங்கைக்கு சர்வதேச சபைகள் அறிவுறுத்தல்கள் வழங்கியும், இலங்கை அதனை நிராகரிக்கும் போது, இலங்கையுடன் நட்புப் பாராட்ட அநேகமாக எந்தவொரு அரசும் முயற்சிக்காது. இதில் ஐரோப்பிய அரசுகள் மிகக் கவனமாக இருக்கும்.

இவற்றினையெல்லாம் கூர்ந்து கவனிக்கும்போது, தற்போது இலங்கையின் ராஜதந்திரம் தோல்வியடைந்துள்ளதாகவே தெரிகிறது.

சர்வதேசத்துடன் இணைந்து செயற்படத் தயாராக உள்ளதாக கடந்த காலத்தில் இலங்கை ஜனாதிபதி கூறியுள்ளார். ஆனால், தற்போது இலங்கை தொடர்பான சர்வதேசத்தின் தீர்மானம் மற்றும் மனித உரிமை ஆணையாளரின் வாழ்மொழி மூலமான குற்றச்சாட்டுகளை இலங்கை நிராகரித்துள்ளது. ஆக, ஜனாதிபதியின் பேச்சுக்கும் இலங்கையின் தற்போதைய நிலைப்பாட்டுக்கும் இடையில் பாரிய முரண்பாடுகள் தெரிகின்றன.

மட்டுமன்றி, ஐ.நா மனித உரிமைகள் ஆணையரின் குற்றச்சாட்டுக்களை வெளிவிவகார அமைச்சர் நிராகரித்தமையானது, மனித உரிமைகள் பேரவைக்கு விடுக்கப்பட்ட சவாலாகவே பார்க்கப்படும். அவ்வாறு சவால் விடுப்பது தவறான விடயமல்ல என்றாலும், தற்போதைய நிலையில் அவ்வாறு சவால் விடுப்பது இலங்கைக்கு நல்லதல்ல. இந்த நிலைப்பாடானது இலங்கைக்கு இன்னுமின்னும் நெருக்கடிகளையே அதிகரிக்கும்.

நன்றி: பிபிசி தமிழ்

Comments

புதிது பேஸ்புக் பக்கம்