ஜம்மு காஷ்மீரிலுள்ள முஸ்லிம்களுக்கு குரல் கொடுக்கும் உரிமை எங்களுக்கு உண்டு: தலிபான் பேச்சாளர்

🕔 September 2, 2021

ம்மு காஷ்மீரில் உள்ள முஸ்லிம்களுக்காக குரல் கொடுக்க தங்களுக்கு உரிமை உண்டு என்று தலிபான் செய்தித் தொடர்பாளர் சுஹைல் ஷஹீன் தெரிவித்துள்ளார்.

தோஹாவிலிருந்து சுஹைல் ஷஹீன், ‘ஸும்’ ஊடாக பிபிசிக்கு வழங்கிய பேட்டியின்போது இதனைக் கூறியுள்ளார்.

இதேவேளை அமெரிக்காவுடன் தலிபான் செய்து கொண்ட உடன்பாட்டு விதிகளில் கையெழுத்திட்டபோது, ஆப்கானிஸ்தான் மண்ணை வேறெந்த நாட்டுக்கும் எதிரான ஆயுத நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தும் எந்த கொள்கையும் தங்களுக்கு இல்லை என பேசியதை அவர் இந்த பேட்டியின் போது நினைவுகூர்ந்துள்ளார்.

“முஸ்லிமாக இருப்பதால், காஷ்மீரிலோ இந்தியாவிலோ அல்லது வேறு எந்த நாட்டில் வாழும் முஸ்லிம்களுக்காகவோ குரல் கொடுக்க எங்களுக்கு உரிமை உண்டு” என்றும் ஷாஹீன் தெரிவித்துள்ளார்.

“முஸ்லிம்கள் உங்களுடைய சொந்த மக்கள், உங்களுடைய குடிமக்கள், உங்களுடைய சட்டத்தின்கீழ் அவர்கள் சமமானவர்கள் என்று எங்களுடைய குரலை உரத்து ஒலிப்போம்” என்று அவர் மேலும் கூறினார்.

இந்தியாவில் 2014ஆம் ஆண்டில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் அரசாங்கம் அமைந்த பிறகு, முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்புணர்வு குற்றங்கள் அதிகரித்து வருவதால், இந்தியாவில் நடக்கும் நிகழ்வுகள் சர்வதேச வெளிச்சத்துக்கு வந்துள்ளதாக விமர்சகர்கள் கூறுகிறார்கள். ஆனால், இந்த குற்றச்சாட்டை – மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சியும் அதன் கூட்டணி கட்சிகளும் மறுக்கின்றன.

இந்தியாவை சுற்றியுள்ள மூன்று அண்டை நாடுகளில் வாழும் முஸ்லிம்கள் அல்லாத சட்டவிரோத குடியேறிகளுக்கு குடியுரிமை வழங்கும் சர்ச்சைக்குரிய சட்டத்தை மோடி அரசாங்கம் கொண்டு வந்தமை, முஸ்லிம்களை ஓரங்கட்டும் முயற்சியாகவே பார்க்கப்படுகிறது.

ஜம்மு காஷ்மீருக்கு இருந்து வந்த சிறப்பு அதிகாரத்தை திரும்பப் பெற்ற இந்திய அரசின் நடவடிக்கையும் அதை செயல்படுத்திய விதமும் அங்குள்ள பல உள்ளூர் வாசிகளை கோபப்படுத்தியது.

இந்தியா, பாகிஸ்தான் இடையே கடந்த நாற்பது ஆண்டுகளாக பிரச்னை நீடிப்பதற்கு, ஜம்மு காஷ்மீர் யாருக்கு சொந்தம் என்ற விவகாரமே மூல காரணமாகும்.

இந்த நிலையில், ஆப்கானிஸ்தானில் குழப்பங்கள் நிறைந்த வெளிநாட்டுப் படை விலக்கலைத் தொடர்ந்து அந்த நாட்டின் கட்டுப்பாட்டை பாகிஸ்தான் ஆதரவு பெற்ற தாலிபன் தமது வசமாக்கிக் கொண்டிருக்கிறது. இதனால் பாகிஸ்தானுக்குள் இருக்கும் இந்திய எதிர்ப்பு சக்திகள் முளைக்கலாம் என்றும் தாலிபனுக்குள் உள்ள சில பிரிவுகள் இனி தங்களுடைய பார்வையை ஜம்மு காஷ்மீர் பக்கம் திருப்பலாம் என்றும் இந்தியாவில் உள்ள பலரும் அஞ்சுகிறார்கள்.

நன்றி: பிபிசி தமிழ்

Comments

புதிது பேஸ்புக் பக்கம்