அட்டாளைச்சேனை பிரதேசத்தில் கொவிட் நிலைமையைக் கட்டுப்படுத்த, தவிசாளர் அமானுல்லா தலைமையில் தீர்மானங்கள் நிறைவேற்றம்

🕔 August 18, 2021

– முன்ஸிப் அஹமட், படங்கள்: எஸ்.எம். அறூஸ் –

மைதானங்களில் விளையாடுதல், கடற்கரைகளில் பொதுமக்கள் ஒன்று கூறுதல் மற்றும் ஹோட்டல்களில் அதிகளவானோர் கூடியிருத்தல் உள்ளிட்ட செயற்பாடுகளுக்கு உடனடியாக தடை விதிக்கப்படுவதாக அட்டாளைச்சேனை பிரதேச சபைத் தவிசாளர் ஏ.எல். அமானுல்லா தெரிவித்தார்.

தற்போது நிலவி வரும் கொவிட் நிலைமையினைக் கட்டுப்படுத்தும் பொருட்டு, அட்டாளைச்சேனை பிரதேசத்தில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் இன்று (18) அட்டாளைச்சேனை பிரதேச சபையில் நடைபெற்ற கூட்டத்தில் மேற்படி தீர்மானங்கள் எடுக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.

அட்டாளைச்சேனை பிரதேச சபைத் தவிசாளர் தலைமையில் நடைபெற்ற மேற்படி கூட்டத்தில், அட்டாளைச்சேனை பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் எஸ். அகிலன், பிரதேச செயலாளர் எம்.ஏ.சி. சாபிர், அட்டாளைச்சேனை பெரிய பள்ளிவாசல், பாலமுனை மற்றும் ஒலுவில் ஜும்ஆ பள்ளிவாசல்களின் பிரதிநிதிகள் மேற்படி கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

அதிகளவானோர் ஒன்று கூடி சுற்றுலா செல்வது, குளிப்பதற்காக நீர் நிலைகளுக்கு அதிகளவானோர் போவது உள்ளிட்ட செயற்பாடுகளில் இருந்தும் பொதுமக்கள் தவிர்ந்து கொள்ளுமாறு அறிவுறுத்துவதற்கும், இந்தக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டதாகவும் தவிசாளர் மேலும் கூறினார்.

இதேவேளை சந்தைப் பகுதிகளுக்குச் செல்லும் பொதுமக்கள் சுகாதார வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டுமென்றும், இது தொடர்பில் பிரதேச செயலகம், பிரதேச சபை மற்றும் சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தினர் ஒன்றிணைந்து திடீர் சோதனைகளை முன்னெடுப்பர் எனவும் தவிசாளர் அமானுல்லா மேலும் தெரிவித்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்