திறந்த பல்கலைக்கழக உபவேந்தர் நியமன நெருக்கடி: ஜனாதிபதியை சாடுகிறது தேசிய மக்கள் சக்தி

🕔 June 25, 2021

னாதிபதியின் நிறைவேற்று அதிகாரத்தின் மூலம் முக்கியமான அரச நிறுவனங்களின் சுதந்திரத்திலும் இறையாண்மையிலும் தலையீடு செய்து – அவற்றை முடக்கும்  செயலுக்கான மற்றுமொரு எடுத்துக்காட்டாகவே, இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பதவிக்கு பொருத்தமானவர் நியமிக்கப்படாமல் இழுத்தடிக்கப்படுகின்றமை உள்ளது என்று, நாடாளுமன்ற உறுப்பினர் அனுர குமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி குற்றஞ்சாட்டியுள்ளது.

புதிய உபவேந்தர் நியமனம் தொடர்பாக இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தில் எழுந்துள்ள நெருக்கடி குறித்து தேசிய மக்கள் சக்தி மிகுந்த கவனம் செலுத்தி வருவதாகவும் அந்தக் கட்சி தெரிவித்துள்ளது.

‘இந்நிலைமை ஏற்படக் காரணம், ஜூன் 23 அன்று வெற்றிடமாகவுள்ள உபவேந்தர் பதவிக்காக – பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் சமர்ப்பிக்கப்பட்ட வேட்பாளர்களின் பட்டியலை ஜனாதிபதி தன்னிச்சையாக நிராகரித்தமையே  ஆகும் என்றும் தேசிய மக்கள் சக்தி சுட்டிக்காட்டியுள்ளது.

2020 மே மாதம் 04ஆம் திகதி பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் சுற்றறிக்கை இலக்கம் 02/2020 இல் பரிந்துரைக்கப்பட்டுள்ள இரண்டு-படி தேர்வு செயல்முறைக்குப் பிறகு, இந்தக் குறுகிய பட்டியல் தயாரிக்கப்பட்டிருந்தது.  

ஜனாதிபதியின் இந்த எதேச்சதிகார நடவடிக்கை, அவரது அரசாங்கத்தினால் அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு முறைமை மீது அவருக்கு நம்பிக்கை இல்லை என்பதையே குறித்துக்காட்டுகிறது.

மேலும், ஜனாதிபதியின் நடவடிக்கைகள் – பல்கலைக்கழக கவுன்சிலின் இறையாண்மையையும் அதிகாரத்தையும் கேள்விக்குள்ளாக்குகின்றன. இறுதிப் பட்டியல் தேர்வு செய்யப்பட்டு அது பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு சமர்ப்பிக்கப்படுவது பல்கலைக்கழக கவுன்சில் மூலமாகும்.

ஜனாதிபதியின் இந்த தன்னிச்சையான செயலின் மூலம் 1978ஆம் ஆண்டு பல்கலைக்கழக சட்டத்தின் சாரம் மீறப்பட்டுள்ளது. பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால்  சிபாரிசு செய்யப்படும் மூன்று பெயர்களில் ஒன்றைத் தேர்ந்தெடுப்பதே ஜனாதிபதியின் கடமை என அதில் தெளிவாகவே குறிப்பிடப்பட்டுள்ளது.

மீண்டும் தேர்வு செய்யும் செய்முறையை நிறுத்துவதற்கு பல்கலைக்கழக சமூகத்தினரால் மேற்கொள்ளப்படும் கோரிக்கைகளுக்கு தேசிய மக்கள் சக்தி என்ற வகையில் நாங்கள் ஆதரவு வழங்குகின்றோம். அத்துடன், பிரதான உயர் கல்வி நிறுவனமொன்று மேலும் நெருக்கடிக்குள் விழ வழி வகுக்காமல், நிறுவப்பட்ட நிர்வாகக் கொள்கைகளுக்கு மதிப்பளிக்குமாறும் சிபாரிசு செய்யப்பட்டுள்ள தெரிவுப் பட்டியலிலிருந்து உடனடியாக இலங்கை திறந்த பல்கலைக்கழகத்துக்கு உபவேந்தர் ஒருவரை நியமிக்குமாறும் ஜனாதிபதியிடம் நாங்கள் வேண்டிக் கொள்கிறோம்.

ஜனாதிபதியின் தன்னிச்சையான நடவடிக்கை மூலம், நாட்டின் முக்கியமான பதவிகளுக்கான நியமனங்கள் முழுமையாக அரசியல்மயமாவதை பிரதிபலிக்கிறது என்றே தேசிய மக்கள் சக்தி கருதுகிறது. நிறைவேற்று அதிகாரத்தின் மூலம் முக்கியமான அரச நிறுவனங்களின் சுதந்திரத்திலும் இறையாண்மையிலும் தலையீடு செய்து அவற்றை முடக்கும்  செயலுக்கான மற்றுமொரு எடுத்துக்காட்டு என்றே நாங்கள் இதனைக் கருதுகிறோம்.

நாடு பல்வேறு சவால்களை எதிர்கொள்ளும் ஒரு கால கட்டத்தில், எமது அரச நிறுவனங்கள் திறமையான, மிகவும் தகுதி வாய்ந்த மற்றும் அரசியல் ரீதியாக பாகுபாடற்ற நபர்களால் வழி நடத்தப்பட வேண்டும். இருப்பினும், ஜனாதிபதியின் இந்த எதேச்சாதிகார நடவடிக்கை, மோசமான விளைவை ஏற்படுத்தும். இது, தகுதிவாய்ந்த மற்றும் அரசியல் ரீதியாக நடுநிலை வகிக்கும் வேட்பாளர்கள் முக்கியமான அரசாங்க பதவிகளுக்கு விண்ணப்பிப்பதை ஊக்கமிழக்கச் செய்யும். இத்தகைய நடவடிக்கைகள் தற்போது நாட்டில் நிலவும் பல்வேறு நெருக்கடிகளைத் தீர்ப்பதற்கு ஒருபோதும் உகந்ததல்ல என்பதுடன், மேலும் நாட்டில் ஸ்திரமின்மை மற்றும் குழப்பநிலை உணர்வையும் அதிகரிக்கின்றன.

எனவே, அரசாங்க நிறுவனங்களின் மீதான நம்பிக்கையை குறைக்கும் மற்றும் பலவீனப்படுத்தும் நடவடிக்கைகளை தவிர்க்குமாறு ஜனாதிபதியிடமும் அரசாங்கத்தின் ஏனைய பொறுப்பு வாய்ந்த அதிகாரிகளிடமும் வேண்டிக் கொள்கிறோம்’ எனவும் தேசிய மக்கள் சக்தி மேலும் தெரிவித்துள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்