ஒரு லட்சம் வருடங்களுக்கு முந்தைய, ஆதி மனித இனம் கண்டுபிடிப்பு

🕔 June 25, 2021

ரு லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ஆதி மனித இனம் ஒன்றை இஸ்ரேலில் உள்ள ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

இந்த ஆதி மனித இனம் வாழ்ந்தமை – இதற்கு முன்பு அறியப்படவில்லை.

இஸ்ரேலில் உள்ள ராம்லா எனும் நகரத்தின் அருகே கண்டறியப்பட்டுள்ள எச்சங்கள், அந்த ஆதி மனித இனத்தில் ‘கடைசியாக வாழ்ந்திருந்தவர்களின்’ எச்சங்கள் என்று கருதப்படுகிறது.

சுமார் ஒரு லட்சத்து 40 ஆயிரம் ஆண்டுகள் மற்றும் ஒரு லட்சத்து 20 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய காலத்தில் வாழ்ந்த நபர் ஒருவரின் பகுதி அளவு மண்டை ஓடு மற்றும் தாடை எலும்பு ஆகியவையும் தற்போது கண்டறியப்பட்டுள்ள எச்சங்களில் அடங்குகின்றன.

இந்தக் கண்டுபிடிப்பின் விவரங்கள் ‘சயின்ஸ்’ எனும் சஞ்சிகையில் வெளியிடப்பட்டுள்ளன.

ஐரோப்பிய பகுதியில் நியாண்டர்தால் மனிதர்களும் அவர்களுக்கு நிகரான ஆசிய மனித இனத்துக்கும் தோற்றமாக அமைந்த, பல லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த – ஆதி கால மனித இனத்திலிருந்து தற்போது கண்டறியப்பட்டுள்ள மனித இனம் தோன்றி இருக்கலாம் என, இந்த குழுவின் ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள்.

தற்பொழுது புதிதாகக் கண்டறியப்பட்டுள்ள இந்த இனக்குழுவின் பரம்பரைக்கு ‘நேஷெர் ராம்லா ஹோமோ’ (Nesher Ramla Homo) என்று பெயரிட்டு அறிவியலாளர்கள் வகைப்படுத்தியுள்ளனர்.

மனித இனத்தின் பரிணாம வளர்ச்சி பற்றிய கதைக்கு, குறிப்பாக நியாண்டர்தால் மனிதனின் பரிணாம வளர்ச்சியை பற்றிய கதைக்கு, இந்தக் கண்டுபிடிப்பு மறுவடிவம் தருவதாக, டெல் அவிவ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் ஹிலா மே தெரிவித்துள்ளார்.

சுமார் 04 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு நியர் ஈஸ்ட் பகுதியில் நேஷெர் ராம்லா மனித இனத்தின் தொடக்ககால மனிதர்கள் வாழ்ந்தனர் என்று இந்த ஆராய்ச்சிக் குழுவினர் நம்புகிறார்கள்.

ஐரோப்பிய கண்டத்தில் வாழ்ந்த நியாண்டர்தால் மனிதர்களுக்கு முந்தைய கால ஆதி மனிதர்கள் மற்றும் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள ஆதிமனிதர்கள் ஆகியோரிடையே ஒற்றுமை இருப்பதையும் இந்த ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

கெசம், ஜூட்டியே, தாபுன் உள்ளிட்ட பகுதிகளில் அமைந்துள்ள குகைகளில் பல மனித படிமங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. ஆனால் அவை குறிப்பிட்ட மனித இனத்தை சார்ந்தவைதான் என்று கூற முடியாத ஒரு காலகட்டத்தைச் சேர்ந்தவையாக இருந்தன.

தற்போது நேஷெர் ராம்லா இனத்தில் புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள எச்சத்துடன் அவற்றின் வடிவங்களை ஒப்பிட்டு பார்க்கும்பொழுது அவற்றையும், புதிதாக கண்டறியப்பட்டுள்ள ஆதி மனித இனத்தினுள் அடக்க முடிகிறது என்று அவர் தெரிவிக்கிறார்.

இந்த ஆதி மனித இனம் – நியாண்டர்தால் மனிதனின் முன்னோர்கள் என்று பேராசிரியர் ஹிலா மே தெரிவிக்கிறார்.

நேஷெர் ராம்லா இனத்தின் எச்சங்கள் வரலாற்றுக்கு முந்தைய கால மனிதர்கள் புழங்கிய பகுதியில் அமைந்திருக்கும் புதைகுழி ஒன்றிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டன.

இந்த பகுதியில் அவர்கள் காட்டு விலங்குகளை வேட்டையாடி இருக்கலாம். ஏனென்றால் ஆயிரக்கணக்கான கல் கருவிகளும் வேட்டையாடப்பட்ட விலங்குகளின் எலும்புகளும் இந்தப் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்