ஈரானின் புதிய ஜனாதிபதியை ‘கசாப்புக்காரர்’ என இஸ்ரேல் தெரிவிப்பு

🕔 June 20, 2021

ரான் ஜனாதிபதியாக இப்றாஹிம் ரய்சி தெரிவுசெய்யப்பட்டமை குறித்து சர்வதேச நாடுகள் அதீத கவலை கொள்ள வேண்டும் என்றும், ரய்சி – “டெஹ்ரானின் கசாப்புக்காரர்” எனவும் இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

இஸ்ரேலின் வெளியுறவுத் துறை அமைச்சின் செய்தி தொடர்பாளரான லியோர் ஹையட், ரய்சி – ஈரானின் ஆதீத கடும்போக்காளர் என தெரிவித்துள்ளார்.

மேலும் புதிய தலைவர் ஈரானின் அணு திட்டங்களை அதிகரிக்க கூடும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பொருளாதாரப் பிரச்னைகளைத் தீர்க்கவும், ஊழலை ஒழிக்கவும் தம்மால் முடியும் என்று வாதிட்டு ஈரானின் ஜனாதிபதி தேர்தலை சந்தித்த இப்ராஹிம் ரய்சி – வெற்றி பெற்றதாக சனிக்கிழமையன்று அறிவிக்கப்பட்டது.

ஓகஸ்ட் மாதம் பதவியேற்கவுள்ள ரய்சி, ஈரானின் உச்ச நீதிபதிகளில் ஒருவராவார். பழமைவாத கொள்கைகளை கொண்ட அவருக்கு அமெரிக்கா தடை விதித்திருந்தது. அரசியல் கைதிகளுக்கு மரண தண்டனை வழங்கியதில் தொடர்புடையவர் என அவர்மீது குற்றச்சாட்டுகள் உள்ளன.

வெற்றியை தொடர்ந்து அறிக்கை ஒன்றை வெளியிட்ட அவர், அரசின் மீதுள்ள நம்பிக்கையை வலுப்படுத்தப்போவதாகவும், நாட்டில் அனைவருக்குமான தலைவராக இருக்கப்போவதாகவும் உறுதியளித்தார்.

கடினமான உழைப்பு, புரட்சி மற்றும் ஊழலற்ற அரசாங்கத்தை உருவாக்குவேன் என ரய்சி தெரிவித்ததாக அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.

இருப்பினும் இஸ்ரேலின் வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் லியோர் ஹையட், 1988ஆம் ஆண்டு அரசியல் கைதிகளுக்கு கூண்டாக மரண தண்டை விதிக்கப்பட்ட சம்பவத்தை சுட்டிக் காட்டி; “டெஹ்ரானின் கசாப்புக்காரர்” ரய்சி என தெரிவித்துள்ளார். மேலும் ஈரானின் வேகமாக வளர்ந்து வரும் அதி நவீன அணு திட்டத்துக்கு பொறுப்பானவர் ர எனவும் தெரிவித்துள்ளார்.

‘மரண கமிட்டி’ என்று அழைக்கப்பட்ட கமிட்டியின் நான்கு நீதிபதிகளில் ஒருவராக இருந்தவர் ரய்சி. அந்த கமிட்டி 5 ஆயிரம் பெண்கள் மற்றும் ஆண்களுக்கு மரண தண்டனை விதித்ததாக அம்னெஸ்டி இண்டர்நேஷனல் தெரிவிக்கிறது.

இருப்பினும் டிவிட்டரில் சுமார் 30 ஆயிரம் பேர் கொல்லப்பட்டதாக ஹையட் தெரிவித்துள்ளார் இதே எண்ணிக்கையைதான் ஈரானின் மனித உரிமைகள் அமைப்பு தெரிவிக்கிறது.

ஈரான் மற்றும் இஸ்ரேல் ஆகிய இரு நாடுகளும் நீண்டகால நிழல் போரில் ஈடுபட்டு வருகின்றன. அதன் விளைவாக இரு நாடுகளும் பரஸ்பரம் பழி வாங்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன. இருப்பினும் வெளிப்படையான ஒரு மோதலை தவிர்த்து வருகின்றன. இந்த மோதல் போக்கு கடந்த சில நாட்களாக அதிகரித்தது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்