மக்கள் காங்கிரஸிருந்து நீக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களை விசாரிக்க, மூன்று பேரைக் கொண்ட குழு நியமனம்

🕔 May 27, 2021

துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழுவின்  சட்டமூலத்துக்கு ஆதரவாக  வாக்களித்த அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களையும் விசாரிப்பதற்கு குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக கட்சியின் செயலாளர் எஸ். சுபைர்தீன் தெரிவித்துள்ளார்.

மக்கள் காங்கிரஸின் சிரேஷ்ட பிரதித் தலைவரால், கட்சியின் யாப்புக்கு அமைவாக, மேற்படி நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவரும் தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்ளனர்.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் செயலாளர் எஸ். சுபைர்தீன் விடுத்துள்ள அறிக்கையொன்றில் இவ்விடயங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

அதில் அவர் மேலும் குறிப்பிடுகையில்;

‘கட்சி  யாப்பின் பிரகாரம் இவ்வாறானதொரு தீர்மானம் இரண்டு வாரத்துக்குள் கட்சியின் அரசியல் அதிகார பீடத்திற்கு அறிவிக்கப்பட்டு அரசியல் அதிகார சபை அதனை உறுதிப்படுத்த வேண்டும்.

இதற்கு அமைவாக கடந்த 25ம் திகதி செவ்வாய்க்கிழமை கூடிய கட்சியின் அரசியல் அதிகார பீடம், கட்சியின் சிரேஷ்ட பிரதித் தலைவரினால் மேற்படி இருவரும் இடைநிறுத்தப்பட்டமைக்கு பரிபூரண அங்கீகாரம் அளித்தது.

மேலும் அரசியல் அதிகார சபை மேற்சொன்ன இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் சம்பந்தமாக ஒழுங்காற்று நடவடிக்கை ஒன்றை மேற்கொள்ள குழு ஒன்றை அமைத்தது. 

இக்குழுவின் தலைவராக கட்சியின் சட்டம் மற்றும் யாப்பு சம்பந்தமான பணிப்பாளர் சட்டத்தரணி ருஷ்தி ஹபீப் நியமிக்கப்பட்டதோடு, அக்குழுவின் ஏனைய அங்கத்தவர்களாக அரசியல் அதிகார சபையின் அங்கத்தவரும் ஈரான் நாட்டின் முன்னாள் தூதுவரும் கொழும்பு பல்கலைக்கழக அரசியல் விஞ்ஞான துறையின்  சிரேஸ்ட விரிவுரையாளருமான கலாநிதி அனீஸ் மற்றும் அரசியல் அதிகார சபையின் அங்கத்தவரும் அட்டாளச்சேனை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளருமான  சட்டத்தரணி எம்.ஏ. அன்சில் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இக் குழு மிக விரைவில் மேற்கூறப்பட்ட இரண்டு அங்கத்தவர்களுக்குமான ஒழுங்காற்று நடவடிக்கைகளை மேற்கொள்ளவிருக்கின்றது.

கட்சியின் அனைத்து நடவடிக்கைகளும் கட்சியின் யாப்பின் பிரகாரமே நடைபெற்றுள்ளன. கட்சியின் யாப்புக்கு அமைவாகவே கட்சி  பயணித்துக் கொண்டிருக்கின்றது.

கட்சியின் போராளிகளும், ஆதரவாளர்களும், அனுதாபிகளும்  ஒற்றுமையோடும், உறுதியோடுமே இருக்கின்றனர்.

கட்சித் தலைவரின் அதி விரைவான விடுதலைக்காகப்  பிரார்த்திற்குமாறு  வினயமாக வேண்டி நிற்கின்றோம்’ எனத் தெரிவித்துள்ளார்.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர்களான அலிசப்றி ரஹீம் மற்றும் இஷாக் ரஹ்மான் ஆகியோர் துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலத்தை ஆதரித்து வாக்களித்தனர்.

தொடர்பான செய்தி: மக்கள் காங்கிரஸ் எனக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க முடியும்: நாடாளுமன்ற உறுப்பினர் அலிசப்றி ரஹீம்

Comments

புதிது பேஸ்புக் பக்கம்