மக்கள் காங்கிரஸ் எனக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க முடியும்: நாடாளுமன்ற உறுப்பினர் அலிசப்றி ரஹீம்

🕔 May 23, 2021

– ஹனீக் அஹமட் –

கிலஇலங்கை மக்கள் காங்கிரஸின் உறுப்பினராக தான் அங்கம் வகிப்பதனாலும், அந்தக் கட்சியின் மாவட்ட அமைப்பாளராக இருப்பதனாலும், துறைமுக நகர சட்டமூலத்துக்கு வாக்களித்தமை தொடர்பில் தனக்கு எதிராக அந்தக் கட்சி ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க முடியும் என, நாடாளுமன்ற உறுப்பினர் அலிசப்றி ரஹீம் ‘புதிது’ செய்தித்தளத்துக்குத் தெரிவித்தார்.

இருந்தபோதும் தான் முஸ்லிம் தேசியக் கூட்டமைப்பினூடாக தெரிவு செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எனவும் அவர் கூறினார்.

“அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தீர்மானத்துக்கு மாற்றமாக, துறைமுக நகர சட்டமூலத்தை ஆதரித்து நீங்கள் வாக்களித்தமை தொடர்பில், உங்களுக்கு எதிராக அந்தக் கட்சி ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க முடியுமா” என ‘புதிது’ செய்தித்தளம் வினவியபோது, அவர்; “ஆம்” எனப் பதிலளித்தார்.

எவ்வாறாயினும் துறைமுக நகர சட்டமூலம் நாட்டுக்கும், அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கும், புத்தளம் மாவட்டத்தின் அரசியலுக்கும் சாதகமாக இருப்பதாலேயே, அதனை ஆதரித்து தான் வாக்களித்ததாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் அலிசப்றி ரஹீம் மேலும் கூறினார்.

“இந்த நாட்டுக்கும், புத்தளம் மாவட்டத்துக்கும் பாதகமாக அமையும் வகையில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் முடிவுகளை எடுத்தால், அதற்கு நான் கட்டுப்பட மாட்டேன்” என்றும் அவர் குறிப்பிட்டார்.

“துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்ட மூலத்துக்கு எதிராக வாக்களிக்க வேண்டும் என, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அரசியல் உயர் பீடத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டபோது, அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட நான், அதற்கு எதிர்ப்புத் தெரிவித்தேன்” என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் மேலும் தெரிவித்தார்.

புத்தளம் மாவட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மற்றும் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் கூட்டிணைந்து கடந்த பொதுத் தேர்தலின்போது, முஸ்லிம் தேசியக் கூட்டமைப்பின் தராசு சின்னத்தில் தமது வேட்பாளர்களைக் களமிறக்கியிருந்தன.

இந்த நிலையில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில் களமிறக்கப்பட்ட அலிசப்றி ரஹீம், அந்தத் தேர்தலில் வெற்றிபெற்றமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்