துறைமுக நகர சட்ட மூலத்துக்கு ஆதரவளித்தால், ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும்: மக்கள் காங்கிரஸ் செயலாளர் சுபைதீன் தெரிவிப்பு

🕔 May 17, 2021

ரசாங்கம் நாடாளுமன்றில் சமர்பித்துள்ள துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலத்துக்கு எதிராக தமது கட்சி வாக்களிப்பதெனத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் செயலாளர் நாயகம் எஸ். சுபைதீன் ‘புதிது’ செய்தித்தளத்துக்குத் தெரிவித்தார்.

இம் மாதம் 04ஆம் திகதி நடைபெற்ற தமது கட்சியின் அரசியல் பீடக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.

குறித்த சட்ட மூலத்துக்கு ஆதரவாக அகில இலங்கை மக்கள் காங்கிரசின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவராவது வாக்களித்தால், அவர்களுக்கு எதிராக கட்சி – ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

அரசியலமைப்பின் 20ஆவது திருத்தத்துக்கு ஆதரவாக வாக்களித்த அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக, கட்சி – ஒழுக்காற்று நடவடிக்கை எடுத்துக் கொண்டிருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

ஏற்கனவே, அரசியல் பீடத்தில் எடுக்கப்பட்ட இந்த முடிவு குறித்து கட்சியின் தேசிய கொள்கை பரப்பு செயலாளர் கே.எம். ஜவாத், பிரதி தேசிய அமைப்பாளர் எம்.ஏ.எம். தாஹிர் மற்றும் அம்பாறை மாவட்ட செயற்குழுத் தலைவர் சட்டத்தரணி எம்.ஏ. அன்ஸில் ஆகியோர் இணைந்து நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பிலும் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

முன்னாள் அமைச்சர் றிசாட் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் நாடாளுமன்றில் நான்கு உறுப்பினர்களைக் கொண்டுள்ளது.

துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்ட மூலம் தொடர்பான நாடாளுமன்ற விவாதம், புதன் மற்றும் வியாழன் ஆகிய தினங்களில் நடைபெறவுள்ளன.

தொடர்பான செய்தி: துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலத்தை, நாடாளுமன்றில் எதிர்ப்பதென மக்கள் காங்கிரஸ் முடிவு

வீடியோ

Comments