துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலத்தை, நாடாளுமன்றில் எதிர்ப்பதென மக்கள் காங்கிரஸ் முடிவு

🕔 May 14, 2021

– முன்ஸிப் அஹமட் –

நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலத்தை எதிர்த்து, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் நாடாளுமுன்ற உறுப்பினர்கள் வாக்களிக்க வேண்டுமென தமது கட்சி தீர்மானித்துள்ளதாக, அந்தக் கட்சியின் உயர்பீட உறுப்பினரும் அம்பாறை மாவட்ட செயற்குழுத் தலைவருமான சட்டத்தரணி எம்.ஏ. அன்ஸில் தெரிவித்தார்.

கட்சியின் அரசியல் பீடக் கூட்டத்தில் இந்த முடிவு எட்டப்பட்டதாகவும் அவர் கூறினார்.

நிந்தவூரில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு பேசிய போதே அவர் இதனைக் கூறினார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்;

“அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அரசியல் பீடக் கூட்டம் அண்மையில் கொழும்பில் நடைபெற்றது. 27 பேரைக் கொண்ட அரசியல் பீடத்தின் 21 உறுப்பினர்கள் அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டோம்.

அதன்போது துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலத்துக்கு எதிராக கட்சியின் தலைவர் உள்ளிட்ட நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்களும் வாக்களிக்க வேண்டும் என்கிற பிரேரணை முன்வைக்கப்பட்டது.

அதனை தீர்மானமாக எட்டும் பொருட்டு வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அப்போது கட்சியின் நடாளுமன்ற உறுப்பினர்கள் மூவர் தவிர, ஏனைய 18 உறுப்பினர்களும் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்தனர்.

எமது தலைவர் றிசாட் பதியுதீன் சட்டவிரோதமாக தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளதால், கட்சியின் மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் மட்டுமே அந்த அரசியல் பீடக் கூட்டத்தில் கலந்து கொண்டனர். இந்த நிலையில் அவர்கள் மூவரும் அந்தப் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிக்கவில்லை.

அரசியல் பீடத்தில் கலந்து கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான முஷாரப், அலி சப்றி மற்றும் இஷாக் ரஹ்மான் ஆகியோர் துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலத்தை தாங்கள் படிக்கவில்லை என்றும், அது தொடர்பில் படித்து விட்டு தமது நிலைப்பாட்டினை தெரிவிப்பதாகவும் கூறினார்கள்.

இதன்போது அங்கிருந்த எமது கட்சியின் சிரேஷ்ட பிரதி தலைவர் சஹீட் மற்றும் கட்சியின் சட்ட ஆலோசகர் சட்டத்தரணி ருஷ்தி ஹபீப் ஆகியோர், அங்கிருந்த நாடாளுமன்ற உறுப்பினர்களிடம்; ‘துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலத்துக்கு எதிராக நீதிமன்றில் தொடரப்பட்ட வழக்குகளில், தாங்கள் வாதிகளின் சட்டத்தரணிகளாக ஆஜாரானதாகவும், அதன்போது அந்த சட்டமூலத்தில் தாங்கள் படிக்காத எதை நீங்கள் படிக்கப் போகிறீர்கள்’ எனவும் கேட்டார்கள்.

மேலும், துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் என்பது எமது நாட்டின் இறைமைக்குப் பாதிப்பானது எனவும் சஹீட் மற்றும் ருஷ்தி ஹபீப் ஆகியோர் அங்கு குறிப்பிட்டார்கள்.

எமது தலைவர் றிசாட் பதியுதீன் கூட, இந்த சட்டமூலம் தொடர்பில் கட்சி என்ன தீர்மானம் எடுக்கிறதோ அதன்படி செயற்படப் போவதாக, தடுப்புக்காவலில் இருக்கும் நிலையில் சொல்லி அனுப்பியிருக்கின்றார்.

அரசாங்கத்துக்கும் எமது தலைவர் றிசாட் பதியுதீனுக்கும் இடையில் மறைமுக ‘டீல்’ ஒன்று இருப்பதாக பேராயர் மல்கம் ரஞ்சித் கூறியத்தாகவே எமது தலைவரை ஆட்சியாளர்கள் கைது செய்துள்ளதாகச் கூறப்படுகிறது.

ஆனால், அரசாங்கம் நாடாளுமன்றில் சமர்ப்பித்துள்ள துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலத்தை, எதிர்த்து வாக்களிப்பது என்று, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தீர்மானம் எடுத்துள்ளமையின் ஊடாக, அரசாங்கத்துக்கும் எமது தலைவருக்கும் அல்லது எமது கட்சிக்கும் இடையில் எந்தவித ‘டீல்’களும் இல்லை என்பதை நாம் நிரூபித்திருக்கிறோம்” என்றார்.

தொடர்பான செய்தி: துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் தொடர்பான விவாதம்; புதன், வியாழன் ஆகிய தினங்களில் நடைறும்

Comments

புதிது பேஸ்புக் பக்கம்