இப்தாரும், கறுப்புக் கொடியும்: இதுக்கெல்லாம் பேரென்ன தெரியுமா?

🕔 May 10, 2021

– முகம்மது தம்பி மரைக்கார் –

ரசியலமைப்பின் 20ஆவது திருத்தத்துக்கு முஸ்லிம் காங்கிரஸின் 04 நாடாளுமன்ற உறுப்பினர்களும், மக்கள் காங்கிரஸின் 03 நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஆதரவாக வாக்களித்தமை பற்றிய வாதப் பிரதிவாதம் இன்னும் முடிந்தபாடில்லை.

முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரஊப் ஹக்கீமுடைய அனுமதியின் பேரிலேயே தாம் 20 ஆவது திருத்தத்துக்கு ஆதரவு வழங்கியதாக அந்தக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும் பிரதித் தலைவர்களில் ஒருவருமான எச்.எம்.எம். ஹரீஸ் பகிரங்கமாகவே தெரிவித்து விட்டார்.

ஆனால், மக்கள் காங்கிரஸ் தலைவர் றிசாட் பதியுதீன் அவ்வாறான அனுமதியை வழங்கியதாக அந்தக் கட்சியின் எந்தவொரு நாடாளுமன்ற உறுப்பினரும் கூறவில்லை.

நன்றிக் கடனுக்காக நடக்கவில்லை

“கொரோனாவால் மரணித்த முஸ்லிம்களின் உடல்களை எரிப்பதை முடிவுக்குக் கொண்டு வருவதற்காகவே, 20ஆவது திருத்தத்துக்கு ஆதரவளித்தோம்” என்று, அதற்கு ஆதரவளித்த மேற்படி கட்சிகளின் 07 நாடாளுமன்ற உறுப்பினர்களும் கூறியிருந்தனர்.

அது தவிர, அப்போது கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த மக்கள் காங்கிரஸ் தலைவர் றிசாட் பதியுதீனை விடுவிப்பதற்கான ராஜதந்திர செயற்பாடாகவும், 20ஆவது திருத்தத்துக்கு ஆதரவளித்ததாக, மக்கள் காங்கிரஸ் கட்சியின் மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்களும் மேலதிகமாகத் தெரிவித்திருந்தனர்.

ஆனால், 20ஆவது திருத்தத்துக்கான வாக்களிப்பு நடந்து முடிந்த பிறகும் கூட, கொரோனாவால் இறந்ததாகக் கூறப்பட்ட முஸ்லிம்களின் உடல்கள் தொடர்ந்தும் தகனம் செய்யப்பட்டுக் கொண்டேயிருந்தன.

ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிராகக் கொண்டு வரப்பட்ட பிரேரணையைத் தோற்கடிக்க வேண்டும் என்பதற்காகவும், அதற்காக முஸ்லிம் நாடுகளின் ஆதரவைப் பெற வேண்டும் என்பதற்காகவுமே, கொரோனாவினால் இறந்த முஸ்லிம்களின் உடல்களைத் தகனம் செய்யும் நடைமுறையை இலங்கை நிறுத்தியது என பரவலாகப் பேசப்பட்டது. குறிப்பாக, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இலங்கைக்கு வந்தமையினை அடுத்தே, முஸ்லிம்களின் உடல்களை எரிப்பதை அரசாங்கம் முடிவுக்குக் கொண்டு வந்தது.

ஆக, 20ஆவது திருத்தத்துக்கு மேற்படி 07 நாடாளுமன்ற உறுப்பினர்களும் வாக்களித்தார்கள் எனும் நன்றிக்கடனுக்காக, முஸ்லிம்களின் உடல்களை தகனம் செய்வதை அரசாங்கம் நிறுத்தவில்லை என்பதை உலகமே அறியும்.

அதேபோல 20ஆவது திருத்தத்துக்கு ஆதரவாக மக்கள் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களித்தமைக்காகத்தான், அந்தக் கட்சியின் தலைவர் றிசாட் பதியுதீன் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார் என, மக்கள் காங்கிரஸ் எம்.பி.கள் கூறுவார்களாயின்; “பிறகு மீண்டும் ஏன் அவரைக் கைது செய்து, விளக்க மறியலில் இந்த ஆட்சியாளர்கள் இப்போது அடைத்து வைத்துள்ளார்கள்” என்கிற கேள்விக்கும், அந்தக் கட்சியின் எம்.பி.கள் பதிலளிக்க வேண்டும்.

ஆக, எப்படிக் கூட்டிக் கழித்துப் பார்த்தாலும் – அரசியலமைப்பின் 20ஆவது திருத்தத்துக்கு மேற்படி முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களித்தமையினால் – முஸ்லிம் சமூகத்துக்கோ, அல்லது அந்த நாடாளுமன்ற உறுப்பினர்களின் கட்சிகளுக்கோ அல்லது தலைமைமைகளுக்கோ எந்தவித நன்மைகளும் ஏற்படவில்லை என்பதை விளங்கிக் கொள்ள முடிகிறது.

இருந்தபோதும் குறித்த 07 முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள்; தமது சமூகத்தின் நலனை முன்னிறுத்தியும், கட்சித் தலைவர் றிசாட் பதியுதீனின் விடுதலைக்காகவுமே 20ஆவது திருத்தத்துக்கு வாக்களித்தார்கள் என்று வாதிடுவார்களாயின், அந்த செயற்பாட்டினை ஏதோவொரு தர்க்க ரீதியில் ‘சரி’ என ஏற்றுக்கொள்ளலாம் அல்லது ‘மன்னித்து’ விடலாம்.

வெட்கம்கெட்ட செயற்பாடு

ஆனால், 20ஆவது திருத்தத்துக்கு ஆதரவாக வாக்களித்த பின்னரும் முஸ்லிம் சமூகத்துக்கு எதிரான செயற்பாடுகளை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகின்ற இந்த அரசாங்கத்துடன் அல்லது ஆட்சியாளர்களுடன், மேற்படி 07 நாடாளுமன்ற உறுப்பினர்களும் ‘கள்ளத் தொடர்பு’ வைத்திருப்பதும், அவ்வப்போது ‘தேனிலவை’க் கழிப்பதும் வெட்கம் கெட்ட செயற்பாடுகளாகும்.

இணக்க அரசியல் என்பது புத்திசாலித்தனமானதும், ராஜதந்திரமானதுமான செயற்பாடுதான் என்றாலும் கூட, அது அடிமை அரசியலாக மாறாமல் இருக்குமாறு பார்த்துக் கொள்தல் வேண்டும்.

இந்த ஆட்சியாளர்களில் ‘ஒருவர்’ முஸ்லிம் சமூகத்தைக் கண்மூடித்தனமாகப் போட்டுத் தாக்குகின்றார். ‘இன்னொருவர்’ தாக்கப்பட்ட சமூகத்தின் நோவுக்கு ‘மருந்து’ பூசுகின்றார் அல்லது பூசுவதாகப் பாசாங்கு காட்டுகின்றார் என்பதற்காக, ‘மருந்து’ பூசுபருடன் மேற்படி 07 நாடாளுமன்ற உறுப்பினர்களும் ‘கள்ளத் தொடர்பு’ வைத்துக் கொண்டு ‘தேனிலவை’க் கழிக்க முடியாது.

ஒருவர் தொடர்ந்து நமது தலையில் குட்டிக் கொண்டிருக்கிறார் என்று வைத்துக் கொள்வோம். ‘குட்ட வேண்டாம்’ என்று அவரிடம் முடிந்தவரை கேட்பதும், சண்டையின்றி அதிலிருந்து நாம் விடுபடுவதும் – இணக்க அரசியலாகும்.

குட்டக் குட்ட நாம் குனிவது – இயலாமை அரசியலாகும்.

குட்டுவதற்கு எதிராக நாம் திமிறி எழுந்தால், குட்டுபவர் கோபப்பட்டு விடுவார் என்று நினைத்து – இன்னும் நாம் நன்றாகக் குனிவது – அடிமை அரசியலாகும்.

அப்படிப்பார்த்தால், மேற்படி 07 நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஆட்சியாளர்கள் விடயத்தில் தற்போது செய்து கொண்டிருப்பது, ‘அடிமை அரசியல்’தான் என்பதில் மாற்றுக் கருத்துக்கள் கிடையாது.

‘நாம் சொரணையுள்ளவர்கள்’ என்பதைக் காட்டுவதற்கும், ‘சொரணையற்றவர்கள் இல்லை’ என்பதை நிரூபிப்பதற்கும், ‘எதிர்ப்பு அரசியலை’ச் செய்து காட்ட வேண்டியது அவசியமாகும்.

ஒருவர் தொடர்ந்து நமக்குக் குட்டிக் கொண்டேயிருக்கும் போது, ஒரு கட்டத்தில் நாம் அதனை எதிர்த்து, திமிறி எழுவதே – எதிர்ப்பு அரசியலாகும்.

ஆனால், இணக்க அரசியலையும் எதிர்ப்பு அரசியலையும் ஒரே நேரத்தில் செய்ய முடியாது. அப்படிச் செய்வதாக யாராயினும் கூறுவார்களாக இருந்தால், அவர்கள் செய்வது ‘நயவஞ்சக அரசியல்’ என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

இணக்கமும் எதிர்ப்பும்

கடந்த சில நாட்களுக்கு முன்னர் மேற்படி 07 முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவைச் சந்தித்துள்ளதோடு, அதன்போது நோன்பு துறக்கும் ‘இப்தார்’ நிகழ்விலும் கலந்து கொண்டுள்ளனர்.

இந்தச் சந்திப்பை தாங்கள் கேட்டுப் பெற்றதாக மேற்படி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூறுகின்றனர். ஆனால், பிரதமர் வழமையாக நடத்தும் ‘இப்தார்’ நிகழ்வே இது என்றும், ‘கொவிட்’ காலம் என்பதால் குறைந்தளவானவர்களுடன் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டதாகவும் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இப்படி அரசாங்கத்துடன் அந்த 07 நாடாளுமன்ற உறுப்பினர்களும் ‘தேனிலவை’க் கழித்துக் கொண்டிருக்கும் நிலையில், நேற்றைய தினம் அவர்களில் ஒருவரான – மக்கள் காங்கிரஸின் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம். முஷாரப்; “முஸ்லிம் புத்திஜீவிகள் மற்றும் அரசியல் தலைவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளமையைக் கண்டித்து, பெருநாள் தினத்தன்று கறுப்புக் கொடியேற்றி எதிர்ப்பை வெளிப்படுத்துங்கள்” என மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் இப்தார் நிகழ்வின்போது சாப்பிட்ட ஈச்சம் பழத்தின் இனிப்பு – நினைவை விட்டு அகலுவதற்கு முன்னதாகவே, அவர் இந்தக் கோரிக்கையை விடுத்திருக்கின்றார்.

இதன் மூலம் இணக்க அரசியலையும் – எதிர்ப்பு அரசியலையும் சமாந்தரமாகச் செய்வதாக முஷாரப் நினைத்திருக்கலாம். அல்லது மக்களிடம் அப்படிக் காட்ட முயற்சி செய்யலாம்.

சிலவேளை இதனை சாணக்கிய அரசியலாகவும் அவர் கற்பனை செய்து கொண்டிருக்கலாம்.

ஆனால், இதுக்கெல்லாம் ஒரு பெயர் இருக்கிறது. அந்தப் பெயர் என்ன தெரியுமா???

விஜய் சேதுபதி நடித்த திரைபடங்களை நீங்கள் பார்த்திருந்தால், அந்தப் ‘பெயரை’த் தெரிந்து கொள்ள அதிகம் சிரமப்பட வேண்டியிருக்காது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்