ரஊப் ஹசீரின் இழி செயல்: எரியும் நெருப்பில் எண்ணெய் வார்க்கும் அரசியல் பிழைப்புக் குறித்து முஸ்லிம்கள் கண்டனம்

🕔 March 1, 2021

– அஹமட் –

முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரஊப் ஹக்கீமுடைய சகோதரர் – ரஊப் ஹசீர் என்பவர் ‘பேஸ்புக்’ பக்கத்தில் நேற்றைய தினம் எழுதியிருந்த பதிவு ஒன்று, சமூகத்தில் குழப்பத்தினையும் அமைதியின்னைமயினையும் ஏற்படுத்தும் வகையில் அமைந்து விட்டதாக பலரும் கண்டனங்களை வெளியிட்டு வருகின்றனர்.

கொரோனாவால் மரணிப்போரின் உடல்களை அடக்கம் செய்வதற்கு அனுமதி வழங்கும் வகையிலான வர்த்தமானி அறிவித்தலை அரசாங்கம் வெளியிட்டுள்ள போதிலும், அடக்கம் செய்வதற்கான வழிகாட்டல் கையேடு இன்னும் வெளியிடப்படவில்லை.

இந்த நிலையில், ‘அடக்கம் செய்வதற்கான நிபந்தனைகள்’ எனும் தலைப்பில் நேற்றைய தினம் மு.காங்கிரஸ் தலைவர் ஹக்கீமுடைய சகோதரரான ரஊப் ஹசீர் , தனது பேஸ்புக் பக்கத்தில் நீண்ட பதிவொன்றை இட்டிருந்தார்.

இதனைப் பார்த்த பலரும், கொவிட் தொற்று காரணமாக மரணிப்போரின் உடல்களை அடக்கம் செய்யும் பொருட்டு, அரசாங்கம் வெளியிட்டுள்ள வழிகாட்டலினையே, ரஊப் ஹசீர் பகிர்ந்துள்ளார் என நினைத்து, அதனை தத்தமது ‘பேஸ்புக்’ பக்கங்களிலும், ‘வாட்ஸப்’ குழுமங்களிலும் பிரதியெடுத்துப் பகிரத் தொடங்கினர்.

ரஊப் ஹசீர் தனது ‘பேஸ்புக்’ பக்கத்தில் ‘அடக்கம் செய்வதற்கான நிபந்தனைகள்’ என வெளியிட்டிருந்த பதிவில், மிகவும் சாத்தியப்பாடற்ற நிபந்தனைகள் உள்ளடக்கப்பட்டிருந்தன.

இதனைப் பார்த்த பலரும், முஸ்லிம்களை மீண்டும் பழிவாங்குவதற்காகவே இவ்வாறானதொரு ‘வழிகாட்டல்’ கையேடு வெளியிடப்பட்டுள்ளது எனக் கூறி, அரசாங்கத்தை திட்டத் தொடங்கினர்.

எவ்வாறாயினும், ரஊப் ஹசீர் எழுதியிருந்த அந்தப் பதிவின் இறுதியில், அவர் எழுதியது ‘கனவில் கண்ட விடயம்’ எனக் குறிப்பிட்டிருந்தார். ஆனால், அதனை பலரும் கண்டுகொள்ளாமலேயே, ‘அடக்கம் செய்வதற்கான நிபந்தனை’ எனும் தலைப்பில் அவர் எழுதியிருந்த 06 நிபந்தனைகளையும் மிக வேகமாகப் பகிர்ந்திருந்தனர்.

இந்த நிலையில், ரஊப் ஹசீரின் மேற்கண்ட செயற்பாட்டிலுள்ள முட்டாள்தனத்தைப் புரிந்து கொண்ட பலரும், அந்தப் பதிவினை நீக்குமாறு அவருக்கு அறிவுறுத்தியிருந்த நிலையில், அவர் அதனை நேற்றைய தினமே நீக்கியிருந்தார்.

ஆயினும், அவரின் பதிவை பிரதியெடுத்தவர்கள் அதனை சமூக ஊடகங்களிலும் ‘வாட்ஸப்’ குழுமங்களிலும் மீள்பதிவு செய்தமை காணரமாக, அந்தப் பதிவு தற்போது வரை பலரின் பார்வைக்கும் வேகமாகச் சென்று கொண்டிருக்கிறது.

பாரதூரத்தை புரியாமல்தான் செய்தாரா?

கொரோனாவால் மரணிக்கும் முஸ்லிம்களின் உடல்களை தகனம் செய்யும் குரூரமான செயற்பாட்டை ஆட்சியாளர்கள் ஒரு பக்கம் மேற்கொண்டு வந்த நிலையில், அதனை வைத்து சில முஸ்லிம் அரசியல்வாதிகள் தமது அரசியல் பிழைப்பை நடத்துவதற்கும் முயற்சித்து வந்தனர்.

அந்த வகையில், முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரஊப் ஹக்கீமுடைய அரசியல் பிழைப்புக்காக, மேற்கண்ட பதிவினை ரஊப் ஹசீர் இட்டிருந்தாரா என பலரும் கேட்கத் தொடங்கியுள்ளனர்.

மிகவும் இன்னல்களுக்கு மத்தியில் கொரோனாவால் மரணித்தவர்களின் உடல்களை அடக்கம் செய்வதற்கான அனுமதியைப் பெற்றுள்ள தற்போதைய காலகட்டத்தில், அதனை இல்லாமல் செய்யும் முட்டாள்தனமான காரியமாகவே, ரஊப் ஹசீருடைய மேற்படி பதிவினை தாம் பார்பதாக சமூக ஊடகங்களில் முஸ்லிம்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

ஹசீரின் அரசியல் பிழைப்பு

முஸ்லிம் காங்கிரஸ் தலைவராக தனது சகோதர் ரஊப் ஹக்கீமை வைத்திருப்பதற்காக ரஊப் ஹசீர் எதையும் செய்வார் என்பதற்கு, கடந்த காலங்களில் நடந்த பல்வேறு சம்பவங்கள் உதாரணங்களாக உள்ளன.

அந்த வகையில் கொரோனாவால் மரணித்தவர்களின் உடல்களை அடக்கம் செய்யும் விவகாரத்தில் மேலும் எண்ணெய் ஊற்றி அதனை எரிய வைத்து, அதனூடாக தனது சகோதரர் ஹக்கீமுடைய அரசியலைப் பலப்படுத்துவதுதான் ஹசீரின் இவ்வாறான செயற்பாடுகளின் பின்னாலுள்ள எண்ணமாகும் என பலரும் கூறுகின்றனர்.

முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரஊப் ஹக்கீம் அமைச்சராகப் பதவி வகித்த காலங்களில், அவருடைய நிருவாகத்தின் கீழ் இருந்த நிறுவனங்களில் பணிப்பாளர் உள்ளிட்ட பல பதவிகளை வகித்த ரஊப் ஹசீர், அதனூடாக சம்பளம் மற்றும் வாகனம் போன்ற பல்வேறு வசதிகளை தொடர்ச்சியாக அனுபவித்து வந்தார்.

இவை தவிர, முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் மாநாடுகள், கூட்டங்கள், வைபவங்கள் மற்றும் புத்தக வெளியீடுகள் நடைபெறும் போது, அவற்றுக்கான மேடை அமைத்தல், பெனர் காட்சிப்படுத்தல், துண்டுப் பிரசுரங்கள் வெளியிடுதல் போன்றவற்றினை பொறுப்பெடுத்துச் செய்வதோடு, அவற்றின் ஊடாக பெருந்தொகையான பணத்தை கொமிசனாக ஹசீர் பெற்று வருவதாக, அந்தக் கட்சிக்குள்ளேயே குற்றச்சாட்டுகள் உள்ளன.

இந்தப் பின்னணியில், எதைப் பலிகொடுத்தாவது அல்லது யாரைப் பலிகொடுத்தாவது, தனது சகோதரர் ரஊப் ஹக்கீமுடைய அரசியல் இருப்பை தக்க வைக்கவும், அதனூடாக தனது உழைப்பை நிச்சயப்படுத்திக் கொள்வதற்காகவுமே, இவ்வாறான காரியங்களை ரஊப் ஹசீர் செய்கிறார் என பலரும் கூறுகின்றனர்.

ஹசீர் எழுதி வெளியிட்ட பதிவு

அடக்கம் செய்வதற்கான நிபந்தனைகள்

1. இறந்தவரை கழுவி சுத்தம் செய்யக் கூடாது.

2. கருப்பு துணியால் கபனிட வேண்டும்.

3. நீர் கசியாவண்ணம் 3 mm பாலிதீன் உறையுள் இட்டு 26 செல்சியஸ் வெப்ப சீலரால் முழுமையாக சீலிடப்படல் அவசியம்.

4 . கழுவவில்லை என்பதற்கு மோட்சுவரி நிர்வாகி , கபன் துணி சாயம் போகாத கரும் கருப்பு என்பதற்கு பெக்டரி முகாமையாளர் , 3 mm பொலிதீனுக்கு அதன் தயாரிப்பாளர் , 26 செல்சியஸ் அளவில்தான் சீல் வைக்கப்பட்டது என்பதற்கு அரசாங்க நிர்வாகி ஆகியோரால் உறுதிப்படுத்தப்பட்ட தனி தனி கடிதங்கள் தலா 100 ரூபா முத்திரையில் உறவினர் அல்லாத 18 வயதிற்கு மேற்பட்ட , சிறை சென்றில்லாத அல்லது அபராத பணம் ( மோட்டார் சாரதி குற்றங்கள் உட்பட ) எதுவும் போலீசில் செலத்தியிராத இருவர் சாட்சிகளாக கையொப்பமிட்டிருக்க வேண்டும். சாட்சிகளின் நன்னடத்தை சான்றிதழ் (24 மணித்தியாலங்கள் கடவாதவை ஆக இருத்தல் அவசியம் )

5. மேற்குறித்த ஆவணங்கள் அனைத்தும் கிராம சேவகர், பகுதி போலிஸ் ஓ.ஐ.சி தலைமை வைத்திய அதிகாரி , பிராந்திய சுகாதார அதிகாரி, மாவட்ட சுகாதார நிர்வாகி ,தேசிய சுகாதார பணிப்பாளர் , ஆகியோரால் உறுதிப் படுத்தப்படல் அவசியம்.

6 . அடக்கத்திற்கென தெரிவு செய்யப்பட்ட இடம் -மனித நடமாற்றம் அற்றது (6 KM குறைந்த தூரத்துள் ) 200 M ஆழம்வரை ஈரப்பசை அற்றது ,தனியாருக்கு சொந்தமில்லாதது,10 KM தூரத்திற்குள் வாவிகள் , குளங்கள் , நதிகள் , ஓடைகள் , கிணறுகள் அற்றது, 18 KM தூரத்திற்குள் விவசாய நிலங்கள் இல்லாதது என்பவை அரசாங்க அதிபர், மாவட்ட புவியியல் ஆய்வு நிலைய பொறுப்பதிகாரி என்போரால் உறுதி செய்யப்பட்ட ஆவணம் சுகாதார அமைச்சருக்கு முகவரியிடப்பட்டு அவரின் செயலாளருக்கு , மரணம் நிகழ்ந்து 24 மணித்தியாலங்களுக்குள் கிடைக்குமாறு 3 பிரதிகளுடன் பதிவுத்தபாலில் அனுப்பப்படல் வேண்டும். ( நேரடியாக பெறப்பட மாட்டாது )இவை அனைத்தும் உரிய அதிகாரிகளால் பரிசீலிக்கப்பட்டதன் பின் அடக்கம் செய்வதற்கான அனுமதிப் பத்திரம் சாதாரணதபாலில் அனுப்பி வைக்கப்படும். (தபாலில் காணாமற்போகும் கடிதங்களுக்கு சுகாதார அமைச்சு பொறுப்பேற்காது)

முக்கிய குறிப்பு

18 மணித்தியாலங்களுக்குள் அடக்கம் செய்யப்படாத சடலங்கள்தேசிய நலன் , மக்கள் பாதுகாப்பு என்பனவற்றை கருத்தில் கொண்டு தகனம் செய்யப்படுவதோடு , குறித்த காலத்துள் அடக்கம் செய்யாது தாமதித்த குற்றத்திற்காக 1 லட்சத்து 35 ஆயிரத்து 403 ரூபா 77 சதம் அரச செலவினங்களுக்கான தண்டப்பணமாக அறவிடப்படும்.தண்டப் பணம் கட்ட வசதி அற்றவராயின் கோவிட் நோயாளி ஒருவருடன் 14 நாட்கள் தங்கி இருக்க வேண்டும் )

Comments

புதிது பேஸ்புக் பக்கம்