பாகிஸ்தான் பிரதமர் – முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சந்திப்பு: நடந்தது என்ன? Exclusive report

🕔 February 24, 2021

– மப்றூக் –

கொரோனாவால் மரணிக்கும் முஸ்லிம்களின் உடல்கள் எரிக்கப்படும் விவகாரத்துக்கு முடிவுகட்டுவது தொடர்பில் இலங்கை ஆட்சியாளர்களுடன் தான் பேசியதாக, முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் இன்று நடைபெற்ற சந்திப்பின் போது, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கூறியுள்ளார்.

இதனை அந்த சந்திப்பில் கலந்து கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் ‘புதிது’ செய்தித்தளத்துக்கு உறுதிப்படுத்தினார்.

கொழும்பிலுள்ள சங்ரிலா ஹோட்டலில் இன்று புதன்கிழமை பிற்பகல் பாகிஸ்தான் பிரதமரை, முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சந்தித்துள்ளனர்.

முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரஊப் ஹக்கீம் உட்பட அக்கட்சியின் 05 நாடாளுமன்ற உறுப்பினர்கள், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் றிசாட் பதியுதீன் உள்ளிட்ட அந்தக் கட்சியின் 04 நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஐக்கிய மக்கள் சக்தியியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான முஜிபுர் ரஹ்மான், இம்ரான் மஹ்ரூப் மற்றும் ஹலீம் ஆகியோருடன், அமைச்சர் அலிசப்றியும் இந்த சந்திப்பில் பங்கேற்றதாகத் தெரிய வருகிறது.

இதன்போது கொரோனாவால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் உடல்கள் பலாத்காரமாக தகனம் செய்யப்படுகின்றமை தொடர்பில், பாகிஸ்தான் பிரதமரிடம் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் முறையிட்டுள்ளனர்.

இதற்கு பதிலளிக்கும் வகையில் பேசிய பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்; இந்த விவகாரம் தொடர்பில் ஆட்சியாளர்களுடன் தான் பேசியதாகவும், எரிப்பதற்கு முடிவு காணும் விருப்பத்துடன்தான் அவர்கள் இருக்கின்றனர் எனவும், தம்மிடம் கூறியதாக, சந்திப்பில் கலந்து கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் ‘புதிது’ செய்தித்தளத்திடம் குறிப்பிட்டார்.

சுமார் 30 நிமிடங்கள் மட்டுமே நீடித்த இந்தச் சந்திப்பில், இன்னும் சில விடயங்களையும் பாகிஸ்தான் பிரதமர் முஸ்லிம் நாடாளுமுன்ற உறுப்பினர்களிடம் கூறியுள்ளார்.

இந்தச் சந்திப்பின் பின்னர், தனது உத்தியோகபூர்வு விஜயத்தை நிறைவுசெய்து கொண்டு, பாகிஸ்தான் பிரதமர் இன்று மாலை 4.30 மணியளில் இலங்கையிலிருந்து புறப்பட்டார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்