தம்மிக்க பண்டாரவின் பாணி மருந்து குடித்த ராஜாங்க அமைச்சருக்கு கொரோனா பாதிப்பு

🕔 January 18, 2021

ராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளார்.

இவர் அன்ரிஜன் பரிசோதனை மேற்கொண்டமையினை அடுத்து, கொரோனா தொற்று அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதாரத் தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் ராஜாங்க அமைச்சரின் பணியாளர்கள் 10 பேருக்கு, சுய தனிமையில் இருக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

இரண்டு நாட்களுக்கு முன்னர் கேகாலையில் நடைபெற்ற ஆளும் தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டத்தில், பியல் நிஷாந்த பங்கேற்றிருந்தார்.

நாட்டு வைத்தியர் தம்மிக பண்டார என்பவர், கொரோனாவுக்கு எதிரான மருந்து எனக்கூறி தயாரித்த பாணியை, ராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த அருந்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தனது மருந்தை குடிப்பவர்களுக்கு எப்போதும் கொரோனா வராது என, நாட்டு வைத்தியர் தம்மிக பாண்டார கூறியிருந்தார்.

சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி மற்றும் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன உள்ளிட்ட ஆளுந்தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர், தம்மிக்க பண்டாரவின் பாணி மருந்தை அருந்தியிருந்தமை நினைவுகொள்ளத்தக்கது.

இது இவ்வாறிருக்க, 224 நாடாளுமன்ற உறுப்பினர்களில் பியல் நிஷாந்தவுடன் சேர்த்து இதுவரை 04 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அமைச்சர் வாசுதேச நாணயகார, ராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர, முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரஊப் ஹக்கீம் ஆகியோரும் கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.

தொடர்பான செய்தி: தம்மிக பண்டாரவின் ‘பாணி மருந்து’ குடித்தவருக்கு கொரோனா தொற்று உறுதி

Comments

புதிது பேஸ்புக் பக்கம்