ரஞ்சனின் பதவி பறிபோனது: நாடாளுமன்ற செயலாளருக்கு சட்ட மா அதிபர் அறிவிப்பு

🕔 January 18, 2021

நீதிமன்ற அவமதிப்புக்கான தண்டனை காரணமாக ரஞ்சன் ராமநாயக்கவின் நாடாளுமன்ற ஆசனம் இழக்கப்பட்டதாக நாடாளுமன்ற செயலாளர் நாயகத்துக்கு சட்ட மா அதிபர் இன்று அறிவித்துள்ளார்.

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு 04 வருட கடூழிய சிறைத் தண்டனையை உயர்நீதிமன்றம் கடந்த 12ம் திகதி வழங்கியிருந்தது.

இந்த சிறைத் தண்டணை, சிறைச்சாலைகள் கட்டளைச் சட்டத்தின் பிரகாரம், இரண்டு வருடங்கள் 08 மாதங்களில் நிறைவடையும் என சிறைச்சாலைகள் அமைச்சு தெரிவித்திருந்தது.

எவ்வாறாயினும், நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்டுள்ள ரஞ்சன் ராமநாயக்கவின் பிரஜாவுரிமை, சிறைத் தண்டனை முடிவடைந்ததன் பின்னர் பறிக்கப்படும் என சட்டத்தரணிகள் கூறுகின்றனர்.

அப்படி நிகழ்ந்தால், ரஞ்ஜன் ராமநாயக்கவிற்கு 11 வருடங்கள் எந்தவொரு தேர்தலிலும் போட்டியிட முடியாது எனவும் சட்டத்தரணிகள் சுட்டிக்காட்டியிருந்தனர்.

இவ்வாறான நிலையில், ரஞ்சன் ராமநாயக்கவை நாடாளுமன்றத்திற்கு அனுமதிக்குமாறு ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாளை, சபாநாயகரிடம் வலியுறுத்தவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் ஊடகங்களுக்கு இன்று தெரிவித்திருந்தார்.

(ட்ரூ சிலோன்)

Comments